கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு எந்தப் பலனும் இல்லை. இக்கோரிக்கையை நமது ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இயங்கிவந்த டாஸ்மாக் கடை ஒன்று, இப்பகுதியில் உள்ள உள்ளாட்சி பெண் நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் தற்காலிகமாக மூடப்பட்டது. இப்பகுதியில் கொரோனா பரவ, இந்த டாஸ்மாக் கடை ஒரு முக்கியக் காரணமாக இருந்ததாலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், கொரோனா தாக்குதலால் உயிரிழந்துள்ளார்கள். கொரோனா வைரஸ் பரவல், இந்தளவுக்கு வேகமாக, அதிகரிக்க, டாஸ்மாக் மதுக்கடைகளும் ஒரு முக்கியக் காரணம் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வருபவர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் இன்னும் பல்வேறு நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால், பெரும்பாலும் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
இதைக் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தான் எடமேலையூர் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில், 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவ, இங்குள்ள டாஸ்மாக் கடை ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதிவாசிகள் சிலர், ``சென்னையிலிருந்து நெல் வியாபாரி ஒருத்தர், தொழில் நிமித்தமாக, இந்தப் பகுதிக்கு வந்திருந்தார்.
எங்க ஊரைச் சேர்ந்த இரண்டு பேர், அந்த வியாபாரியோடு சேர்ந்து, இங்கவுள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி, ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டுருக்காங்க. அவருக்கு கொரோனா இருக்குறது அந்த வியாபாரிக்கே தெரியலை. அதுக்குப் பிறகுதான் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதைக் கண்டுபிடிச்சு, இவர் எங்கெல்லாம் போனாருனு விசாரிச்சு, எங்க ஊருக்கு வந்தாங்க. அப்பதான் விஷயமே தெரிஞ்சிது.
இதுக்கிடையில, எங்க ஊர்ல வளைகாப்பு நிகழ்ச்சி ஒண்ணு நடந்துச்சு. கொரோனா வந்த நெல் வியாபாரியோடு மது அருந்திய நபர்களும் அதுல கலந்துக்கிட்டாங்க. அதனால் நிறைய பேருக்கு கொரோனா பரவிடுச்சி. இதுக்கெல்லாம் மூலக்காரணமான, டாஸ்மாக்கை மூடணும்னு, இங்கவுள்ள மக்கள் கோரிக்கை வச்சோம்.
எடமேலையூர் ஊராட்சித் தலைவர் கோமளம், கண்டியன் தெரு ஊராட்சித்தலைவர் சித்ரா, எடகீழையூர் மற்றும் நடுத்தெரு ஊராட்சித்தலைவர்களான மல்லிகா, ஜெயா.. இவங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, டாஸ்மாக் கடையை மூடணும்னு மாவட்ட நிர்வாகத்துக்கும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் அதிகாரபூர்வமாக கோரிக்கை வச்சாங்க. இதனால், உடனடியா டாஸ்மாக்கை மூடிட்டாங்க. இங்க வந்து மது வாங்கிய பலருக்கும், கொரோனா பரவியிருக்குமோனு இந்த சுற்றுவட்டார கிராம மக்கள் எல்லாருமே அச்சத்துல இருக்காங்க. கொரோனா பிரச்னை முடியுற வரைக்கும் இது மூடிக்கிடக்கணும்னு அதிகாரிகள்கிட்ட ஊர்மக்கள் வலியுறுத்திக்கிட்டு இருக்கோம்” என தெரிவித்தார்கள். இங்கு மட்டுமல்ல, மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையுமே தமிழக அரசு மூட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/women-representatives-took-action-against-tasmac
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக