Ad

சனி, 27 ஜூன், 2020

பிறந்த குழந்தைக்குக் காலில் கட்டி; 3 மணிநேரப் போராட்டம்! -அசத்திய அரசு மருத்துவர்கள்

ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்-புவனேஸ்வரி தம்பதிக்கு ஜூன் 8-ம் தேதி, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்தபோதே வலது முழங்காலில் ரத்தக்கட்டி இருந்ததால், உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைக்கு இருந்த பெரியதொரு ரத்தநாள கட்டியை 3 நேரம் தொடர் போராட்டத்துக்குப் பிறகு மருத்துவர்கள் குழு அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளது.

ரத்தக்கட்டி பாதிப்பு

டீன் மீனாட்சி சுந்தரம் தலைமையில், நுண்கதிர் மருத்துவர் ஸ்டாலின், இருதய நோய் நிபுணர் நாச்சியப்பன், மயக்கவியல் மருத்துவ தலைமை மருத்துவர் சாய்பிரபா, குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியம், தலைமை குழந்தை மருத்துவர் இங்கர்சால், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. குறிப்பாக, எந்த ரத்தக்குழாயிலிருந்து இந்த ரத்தநாள முடிச்சுகள் உருவாகின எனக் கண்டறிந்து அந்த ரத்த நாளத்திலிருந்து மிக நுண்ணிய அளவிலான அறுவைசிகிச்சை மூலம் கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.

Also Read: சிசேரியனால் சுயநினைவை இழந்த தாய்! -மீட்டெடுத்த புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்

இதுபற்றி மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, "குழந்தைக்கு அல்ட்ராசவுண்ட், சி.டி ஸ்கேன், எக்கோ, எம்.ஆர்.ஐ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்தக் குழாயை உருவாக்கும் திசுக்கள் தோலிலும் தோலின் அடிப்பகுதியிலும் புகுந்துவிடுவதால், ரத்த நாளங்கள் ஒரு முடிச்சாக மாறி கட்டியாக மாறிவிடும். இதை ஹீமாஞ்ச்சியோமா என்று சொல்வார்கள். இந்தக் கட்டியில் காயம் ஏதும் ஏற்பட்டால், அந்த இடத்தில் புண் உருவாகி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ரத்தக் கசிவு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. காலில் ரத்தக்கட்டி உள்ள நிலையில், குழந்தையின் கால் தரையில் பட்டாலே ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்தன.

எனவே, மிக நுண்ணிய அளவிலான அறுவைசிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும், தொடைப்பகுதியிலிருந்து தோல் எடுத்து ஒட்டாமல் இருக்கும் இடத்திலேயே நவீன முறையில் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த வகையான பிறவிக் குறைபாடு பெண் குழந்தைகளுக்குத்தான் அதிகளவில் காணப்படும். தனியார் மருத்துவமனைகளில் 1 லட்சம் வரையிலும் ஆகும் இந்த சிகிச்சை அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. குழந்தை தற்போது கட்டி அகற்றப்பட்டு நலமுடன் உள்ளது" என்றார் உற்சாகத்துடன்.

Also Read: கொரோனா:`1 கோடி பேர் பாதிப்பு; 5 லட்சம் பேர் பலி!’ - திணறும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா



source https://www.vikatan.com/government-and-politics/healthy/pudukkottai-government-doctors-save-newborn-babys-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக