கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், மின்சாரத் தேவையை இயற்கை முறையில் உற்பத்திசெய்ய ஏதுவாக, 3000 வாட் மின்சாரம் வழங்கக்கூடிய சூரிய ஒளி தகடுகளை அரசே முன்வந்து அமைத்திருப்பது, பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.
Also Read: `எதிரிக்குக்கூட என் நிலைமை வரக்கூடாது!' -டெக்ஸ்டைல் தொழிலாளி டு பொரிகடலை வியாபாரம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, பஞ்சப்பட்டி. இந்தக் கிராமத்தில் செயல்பட்டுவருகிறது, ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி. மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் இருக்கும் இந்த அரசுப் பள்ளியில், சுமார் 890 மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளி, சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. அதனால், இந்தப் பள்ளி வளாகத்தில் பூவரசு, புங்கன், வேம்பு என்று 300 நாட்டு மரங்களை நட்டு, பள்ளியின் இயற்கைச் சூழலை செம்மையாக்கியிருக்கிறார்கள்.
அதோடு, இந்தப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், சிறப்பான இயற்பியல் ஆய்வகம், கணினி முறையில் கற்பித்தல் என்று தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனால், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இருந்தாலும், பள்ளியின் சிறப்புகளால் மாவட்ட அளவில் பலரின் கவனத்தை ஈர்க்கும் பள்ளியாக இருந்துவருகிறது.
இந்தச் சூழலில், பஞ்சப்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும்பொருட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட நிதியின் மூலம், ரூ. 4 லட்சம் மதிப்பில், பள்ளியின் அலுவலகம், ஸ்மார்ட் வகுப்பறை, அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் ஆகியவை 3000 வாட் சூரிய மின்சாரம் உற்பத்தி மூலம், வரும் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், பள்ளியின் மாடியில் சூரிய சக்தியைப் பெற்றுத்தரும் சூரிய மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் மின்கட்டணம் செலுத்துவது வெகுவாகக் குறைவதுடன், தடையற்ற மின்சாரமும் கிடைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம், நகர்புறத்திற்கு இணையாக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வம் மிகும்.
இதுகுறித்து பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றிவரும் தனபாலிடம் பேசினோம்.
"எங்க பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெய்பீம்ராணி வழிகாட்டுதலில், பள்ளியில் எண்ணற்ற விசயங்களைச் செய்துள்ளோம். கரூர் மாவட்ட அளவில் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஓர் அரசுப் பள்ளி, எங்க பள்ளிதான். அதனால், பள்ளி வளாகம் முழுக்க நாட்டு மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அதோடு, பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கல்வியை ஸ்மார்ட்டாகக் கற்கும் வகையில் பல வசதிகளைச் செய்திருக்கிறோம்.
எங்க பள்ளியின் வளர்ச்சியைப் பாராட்டி, அரசு தரப்பில் எங்கள் பள்ளியின் மின்சாரத் தேவையை உணர்ந்து, அதற்கு பயனளிக்கும் வகையில், 3000 வாட் மின்சாரத்தை பெற்றுத் தரக்கூடிய சூரிய ஒளி மின்தகடுகளை அமைத்திருக்கிறார்கள். இது, எங்களின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்" என்றார், மகிழ்ச்சியாக!
source https://www.vikatan.com/news/education/government-school-implement-solar-energy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக