Ad

சனி, 27 ஜூன், 2020

உதயநிதியை வைத்து கனிமொழிக்கு `செக்'? - கழக குடும்பத்தில் அரசியல் ஆடுபுலி

``கனிமொழியின் அரசியல் பயணத்தில் அவருக்கு நெருக்கடியைக் கொடுக்க அவருடைய அண்ணன் மகனையே ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்” என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர் கனிமொழியின் ஆதரவாளர்கள்.

ஆறுதல் கூறிய கனிமொழி

தூத்துக்குடி வியாபாரிகள் இறப்பில் கனிமொழியின் இந்த அதிரடி நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு ஒருபுறம் நெருக்கடியை ஏற்படுத்தியது. மற்றொருபுறம் உட்கட்சிக்குள்ளும் சத்தமில்லாமல் ஒரு புகைச்சலை உண்டு பண்ணியிருக்கிறது. கருணாநிதி இருந்தவரை ஸ்டாலினுக்கு என்று தனி ஆதரவாளர்கள் இருந்தது போலவே கனிமொழிக்கும் தனி ஆதரவாளர்கள் வட்டம் இருந்தது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் இப்போது ஸ்டாலின் பக்கம் வந்துவிட்டனர். கனிமொழிக்கு என்று பெரிதாக ஆதரவு வட்டம் கட்சிக்குள் இல்லை. மேலும், அவர் சொல்லி இனிகட்சிக்குள் பெரிதாக எதுவும் நடக்காது என்கிற நிலையையும் கட்சியினர் மத்தியில் வந்துவிட்டது.

இந்நிலையில்தான் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றது முதல் அந்தத் தொகுதியில் தொடர்ந்து விசிட் செய்துவருகிறார். இந்த எம்.பி பதவியை வைத்து கட்சிக்குள் தான் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார் கனிமொழி. தனது தொகுதியில் கணிசமாக இருக்கும் நாடார் சமூக மக்களை தன்வயப்படுத்தும் முயற்சியில் கனிமொழி இறங்கியுள்ளார் என்று தலைமைக்கும் அவ்வப்போது தகவல்கள் வந்தன. கனிமொழியின் வளர்ச்சியைப் பார்த்து அவரைக் கொஞ்சம் அடக்கிவாசிக்கச் சொல்லுங்கள் என்று சித்தரஞ்சன் சாலை வீட்டிலிருந்து அடிக்கடி அறிவுரைகள் சென்றுள்ளன என்கிறார்கள். இந்த நிலையில் கனிமொழி தூத்துக்குடி வியாபாரிகள் மரணத்தில் இரண்டு நாள்களாகச் சுற்றி சுழன்று பணியாற்றியது மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டது. குறிப்பாக, வட இந்திய ஊடகங்களிலும் கனிமொழியின் பேட்டி ஒளிப்பரப்பானது. இது தலைமைக்குக் கொஞ்சம் கிலியை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள்.

ஆறுதல் கூறும் உதயநிதி ஸ்டாலின்

இதன் ரியாக்ஷனே தூத்துக்குடிக்கு சனிக்கிழமை மாலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் அவசர விசிட் அடிக்கக் காரணம் என்கிறார்கள். தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி சனிக்கிழமை மதியம் சென்னையிலிருந்து கிளம்பி மாலை சாத்தான்குளம் சென்றார். இந்தத் தகவல் சென்னையிலிருந்து அவர் கிளம்பிய பிறகே அங்குள்ள நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உதயநிதியை இறந்தவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் குடும்பத்தினருடன் சந்திப்பு முடிந்த பிறகு, தனது ட்விட்டர் பக்கத்தில், ``சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறினேன். அப்பா, தம்பியைப் பற்றி விசாரிங்க சார். ஒருத்தர்கூட தப்பா சொல்ல மாட்டார்கள். தம்பி பலமுறை ரத்ததானம் பண்ணியிருக்கிறான் அவ்வளவு நல்லவன். எங்களுக்கு நீதி வேண்டும் சார்” என்றனர். `நீதி கிடைக்க கழகம் துணை நிற்கும்' என்று முடித்துள்ளார். கனிமொழி சந்திப்புக்குப் பிறகு எதற்காக தான் சந்தித்தேன் என்றோ, தலைவரின் அனுமதியோடு இந்தச் சந்திப்பு நடந்ததா என்றோ உதயநிதி தரப்பில் தெரிவிக்கவில்லை.

இதுதான் இப்போது கட்சியினருக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ``இரண்டு நாள்களாக கனிமொழி இந்த வீட்டிலே பல மணிநேரம் இருந்து ஆறுதல் சொல்லிவிட்டு, கட்சி அளித்த நிதியையும் வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு எதற்காக உதயநிதி திடீர் விசிட்டாக வர வேண்டும்” என்று பேச ஆரம்பித்துள்ளனர். ஏற்கெனவே இந்தப் பகுதியில் சமூகரீதியாக கிறிஸ்துவ நாடார், இந்துநாடார் என்கிற சிக்கலும் இருக்கிறது. தலைவரின் தங்கையே வந்து சென்ற பிறகு, எதற்கு தனையனையும் அனுப்ப வேண்டும் என்று கட்சிக்குள் முணுமுணுப்பும் கேட்கிறது. ``உதயநிதி தானாக விரும்பி தூத்துக்குடி வரவில்லை என்றும் அவரைப் போகச்சொல்லியதே அவரது வீட்டில் உள்ளவர்கள்தாம்” என்றும் ஒருபுறம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள்.

ஏற்கெனவே டெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள் தாக்கப்பட்டபோது அந்த மாணவர்களைக் கனிமொழி எம்.பி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். `தி.மு.க உங்களுக்குத் துணை நிற்கும்' என்று உறுதியையும் அந்த மாணவர்களிடம் வழங்கினார். ஆனால், அவர் சந்தித்த அடுத்த சில நாள்களில் தமிழகத்திலிருந்து புறப்பட்டு டெல்லி சென்ற உதயநிதியும் மாணவர் சங்க பிரதிநிதிகளைச் சந்தித்தார். அப்போதே கனிமொழி கடும் அப்செட் என்று செய்திகள் வெளியானது. ``கட்சி சார்பாக நான் சந்தித்த பிறகு எதற்காக உதயநிதியை எதற்கு அனுப்ப வேண்டும்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் கனிமொழி. அந்த விவகாரம் சிறிது நாள்களில் மறைந்துபோனது. இப்போது தூத்துக்குடி விவகாரத்தில் மீண்டும் அதே போன்று ஒரு நிலை கனிமொழிக்கு ஏற்பட்டுள்ளது.

கனிமொழி - ஸ்டாலின்

கனிமொழிக்கு நெருக்கமானவர்கள், ``கனிமொழி கட்சியில் இருக்கலாம். எம்.பி-யாகச் செயல்படலாம். ஆனால், ஆளுமை செலுத்தக் கூடாது என்பதில் ஒரு சிலர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். கனிமொழிக்கு நெருக்கமான சமூகம்தான் தற்போது இறந்தவர்களின் சமூகமும். எனவே, கனிமொழி இந்தத் துக்கத்தில் கலந்து கொண்டது கட்சிக்கும் ஒரு நற்பெயரை பெற்றுத்தரும். அதே நேரம் அந்தச் சமூகத்தினர் மத்தியிலும் அவருடைய இமேஜ் உயர்ந்துவிடும். அவர் அந்தச் சமூதாயத்தினரிடம் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே உதயநிதியை அடுத்த நாளே அனுப்பியிருக்கிறார்கள்” என்று புலம்புகிறார்கள்.

மற்றொருபுறமோ, ``உண்மையில் சாத்தான் குளத்துக்கு ஸ்டாலினே நேரடியாகச் செல்ல நினைத்தார். ஆனால், கொரோனா காலமாக இருப்பதால் அவர் செல்ல வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் தடுத்துவிட்டனர். அவர் சார்பாக அவரின் மகனை அனுப்பி ஆறுதல் சொல்லச் சொல்லியிருக்கிறார். இதில் தவறு ஒன்றும் இல்லை. கனிமொழிதான் தனி ஆவர்த்தனம் செய்ய நினைக்கிறார். தனது ஆதரவாளர்கள் மூலம் தூத்துக்குடி பகுதியில் `இளந்தலைவி' என்று போஸ்டர் ஒட்டச் சொல்கிறார் என்றுகூட செய்திகள் வருகின்றன” என்கிறார்கள் கனிமொழிக்கு எதிர் தரப்பினர்.

Also Read: `அன்று சிரித்தார்; இன்று முதல்வர் அலுவலகத்துக்குள்ளேயே கொரோனா!' -கே.என்.நேரு

Kanimozhi, Udhayanidhi Stalin

கனிமொழிக்கு எதிராக உதயநிதியை வைத்து அரசியல் நடத்தப்பார்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இப்போது பலமாக எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி சுற்றுப்பயணம் செய்தால், அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருப்பார். ஆனால், கனிமொழியுடன் இப்போது கீதா ஜீவன் நெருக்கமாக இருப்பதால் அனிதா சுற்றுப்பயணத்தில் அடிக்கடி தலைகாட்டுவதைத் தவிர்த்துவருகிறார். காரணம், கனிமொழியுடன் அதிக நெருக்கத்தைக் காட்டி எதற்காகத் தலைமையின் கண்களை உறுத்த வேண்டும் என்றும் அனிதா நினைக்க ஆரம்பித்துவிட்டாராம்.

ஸ்டாலின், கருணாநிதி, கனிமொழி

கருணாநிதி இருந்தவரை கனிமொழியைத் தலைவரின் மகளாகப் பார்த்தவர்கள், இப்போது தலைவரின் தங்கையாகப் பார்ப்பதைவிட தூத்துக்குடி எம்.பியாக மட்டும் பார்ப்பதே சாலச்சிறந்தது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்று வருத்தத்தோடு சொல்கிறார்கள் கனிமொழிக்கு நெருக்கமானவர்கள். கனிமொழியும் தன்னால் கழகத்துக்குள் எந்தக் கலகமும் வந்துவிடக் கூடாது என்பதால் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துவருகிறாராம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kanimozhi-supporters-upsets-over-udhayanidhis-new-moves-within-the-party

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக