Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

`10-வகுப்பில் நல்ல மார்க் போடணுமா?' -மாணவர்களை மிரட்டும் தனியார் பள்ளிகள்

தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளிகள் தங்களிடம் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களிடம், `பிளஸ் 1, பிளஸ் 2 தங்களது பள்ளியிலேயே சேர வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படிச் சேர்ந்தால் மட்டுமே பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வழங்க முடியும். இல்லையென்றால் குறைந்த மதிப்பெண் கிடைக்கும்' எனக் கூறி மிரட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணன்

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்ணை வழங்குவதாகக் கூறி, தங்களிடம் பயின்ற மாணவர்களை மீண்டும் மேல்நிலைக் கல்வியில் சேருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள் என இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

இதுபற்றி இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், ''கொரோனா பேரிடர் காலத்தின் அசாதாரணச் சூழ்நிலையால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தக் கல்வியாண்டில் நடைபெறவில்லை. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை மையமாக வைத்து, மதிப்பெண் வழங்கத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையைத் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் தங்களுக்குச் சாதகமாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளிகள் தங்களிடம் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களிடம் மேல்நிலைக் கல்வி அதாவது பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தங்களது பள்ளியிலேயே சேர வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படிச் சேர்ந்தால் மட்டுமே பத்தாம் வகுப்பில் நிறைந்த மதிப்பெண் வழங்க முடியும். இல்லையென்றால் குறைந்த மதிப்பெண் கிடைக்கும். நாங்கள் கொடுக்கும் மதிப்பெண் மற்றும் வருகைப் பதிவேட்டை வைத்துத்தான் கல்வித் துறை மதிப்பெண் வழங்கும்.

மேலும், உன்னுடைய மதிப்பெண் எங்களுக்குத் தெரியும். சீக்கிரமாக தொகையைச் செலுத்தி மேல்நிலைக் கல்விக்கு அட்மிஷன் போட்டுக் கொள்ளுங்கள், இல்லையென்றால் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் கிடைக்கும் என்று தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் மதிப்பெண் வழங்குவதைச் சொல்லி அச்சுறுத்துகிறார்கள். இதனால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். இப்படிப்பட்ட தனியார் பள்ளிகள் மீது அரசு கவனம் செலுத்துவதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்திய மாணவர் சங்கம் போராட்டம் செய்வதோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுப்போம்'' என்றார்.

தேர்வு எழுதும் மாணவிகள்

இதுபற்றி நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமாரிடம் பேசினோம். ''அரசு உத்தரவுப்படி காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப் பதிவேட்டை வைத்து மதிப்பெண் வழங்குகிறோம். சில பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுத் தாள்கள் இல்லாமல் உள்ளன. அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு ரேங்க் பட்டியலை வைத்து மதிப்பெண் வழங்கி வருகிறோம். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எழுத்துப் பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ வரவில்லை. வந்தால் நிச்சயம் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/education/tn-private-schools-threatening-10th-std-students-regarding-their-marks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக