Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

மான் கி பாத்: `2020-ம் ஆண்டு, எல்லைப் பிரச்னை, கொரோனா!’ -பிரதமர் மோடி உரை

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,953-லிருந்து 5,28,859 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685-லிருந்து 16,095 அதிகரித்திருக்கிறது. இதனால், வைரஸ் பரவல் தொடர்பான அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர். மறுபக்கம், லடாக் எல்லைப் பகுதியிலும் இந்தியா, சீனா இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், `மனதின் குரல்’ அதாவது `மான்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்த இரண்டு பிரச்னைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி

2020 :

அதிகமான பிரச்னைகளும் இழப்புகளும் 2020-ம் ஆண்டு தொடக்கம் முதலே ஏற்பட்டு வருவதால், இந்த ஆண்டை மக்கள் பலரும் அதிருப்தியோடு அணுகி வருகின்றனர். இதனால், மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, ``இந்தியா எப்போதும் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை வாய்ப்பாக மாற்றியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு சவால்களை எதிர்த்துப் போராட வேண்டும். 130 கோடி இந்தியர்களும் இந்தியர் என்ற உணர்வோடு முன்னேற்ற பாதையில் நடந்தால், இந்த ஆண்டை சாதனை ஆண்டாக மாற்ற முடியும்.

கொரோனா, எல்லைப் பிரச்னை, பூகம்பங்கள், புயல், வெட்டுக்கிளி தாக்குதல் என இந்தியா பல சவால்களைச் சந்தித்து வருகிறது. ஒரேநேரத்தில் இவ்வளவு பேரழிவுகள் நடப்பதை அரிதாகவே கேள்விப்பட்டிருப்போம். நெருக்கடியான சூழலும் பிரச்னைகளும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளன. இதனால், 2020-ம் ஆண்டை மோசமான ஆண்டாக முத்திரைக் குத்த வேண்டுமா? முதல் ஆறு மாதங்களைப் போலவே அந்த ஆண்டு முழுவதும் இருக்கும் என நினைப்பது சரிதானா? நிச்சயமாக இல்லை” என்று பேசினார்.

Also Read: International yoga day:`கொரோனா நோயாளிகள் யோகாவால் பலனடைகிறார்கள்!’ - பிரதமர் மோடி

எல்லைப் பிரச்னை :

இந்தியா, சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், ``லடாக் பகுதியில் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நட்பை எவ்வாறு தொடர வேண்டும் என இந்தியாவுக்கு தெரியும். அதேபோல, ஒருவரை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் தக்க பதிலடியும் கொடுக்கும். நமது துணிச்சலான வீரர்கள் இந்தியாவின் பெருமைக்கு எந்தவித களங்கத்தையும் ஏற்படுத்த விடமாட்டார்கள் என்பதைக் காட்டியுள்ளனர்.

லடாக் பகுதியில் சீனா, இந்தியாவுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்ட பிறகு, சீனப் பொருள்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருள்களை வாங்க அனைவரும் உறுதி ஏற்கின்றனர். இந்தியா சுயசார்பை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் சாத்தியம் ஆகாது. எனவே, தற்போதைய நிலையில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது” என்று கூறியுள்ளார். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்தியாவுக்கு இருக்கும் உறுதிப்பாட்டை உலகம் தற்போது பார்த்ததாகவும் குறிப்பிட்டார்

லடாக்

சீன தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாம் கடமைப்பட்டிருப்பதாகவும் வீரர்களை இழந்த குடும்பத்தினர் வருத்தப்படுவதைப் போலவே ஒவ்வொரு இந்தியரும் வருத்தப்படுவதாகவும் தியாகமும் நாட்டின் மீதான பற்றும்தான் நமது உண்மையான பலம் என்றும் குறிப்பிட்டார். மேலும், லடாக் பகுதியில் இறந்த வீரர்களின் பெற்றோர் தங்களது மற்ற மகன்களையும் அவர்களது குழந்தைகளையும் ராணுவத்தில் சேர்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

``பீகாரைச் சேர்ந்த குண்டன்குமாரின் தந்தை தன் பேரன்களை நாட்டைப் பாதுகாக்க ராணுவத்துக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார். வீரர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்தின் எண்ணமும் இதுவாகத்தான் உள்ளது. நாட்டை வலிமையாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற்றுவதற்கான வழியில் நாம் செல்ல வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் இதைத் தங்களது வாழ்க்கையின் இலக்காக மாற்ற வேண்டும். அதுதான் தங்களது உயிர்களை நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களுக்கான உண்மையான அஞ்சலி” என்று மோடி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் :

கொரோனா பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி பேசும்போது, ``நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்குகள் தளர்த்தப்பட உள்ளதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை மக்கள் பராமரிக்க வேண்டும். கைகளைக் கழுவது உட்பட தனிமனித அளவில் சுகாதாரங்களைப் பராமரிக்க வேண்டும். முகக்கவசங்களை அணிய வேண்டும். இல்லையெனில், உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வைரஸை எதிர்த்துப் போராடியுள்ளனர். தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை மாற்றியமைத்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். தொற்றுநோயை எதிர்த்துப் போராடத்தூண்டும் வகையில் பல மனிதர்களின் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தத் தொற்றுநோய் வாழ்க்கையை மதிக்க கற்றுக்கொடுத்துள்ளது. நம்மையும் நமது குடும்ப உறவுகளையும் மீட்டெடுக்க உதவியுள்ளது. மழைக்காலங்களில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா

இவற்றைத் தவிர பாரம்பர்ய விளையாட்டுகள், விண்வெளித்துறை, தொழில்நுட்பத்துறை ஆகியன குறைத்தும் தன்னுடைய உரையில் பேசியுள்ளார். மேலும், உலகளவில் அமைதி மற்றும் ஒற்றுமையை உருவாக்க இந்தியா வலிமையுடன் செயல்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: இந்திய சீன பிரச்னை... பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?



source https://www.vikatan.com/news/india/pm-modi-talks-about-2020-border-tension-and-coronavirus-in-manki-bat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக