Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

`சாத்தான்குளம் வழக்கும், தமிழக அரசின் தந்திரங்களும்..!' - விளக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி

`சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணை செய்யும்' என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து, `குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைத்துவிடும்' என்ற பொதுமக்களின் நிம்மதிப் பெருமூச்சை நீடிக்கவிடாமல் செய்திருக்கிறது, தமிழக அரசின் `உள்ளடி' வேலைகள். இந்தநிலையில், `சி.பி.ஐ விசாரணை, நீதியைத் தாமதப்படுத்தும் தந்திரம்' என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளும் இங்கே குறிப்பிடத்தகுந்தவை.

ப.சிதம்பரம் - கே.எஸ்.அழகிரி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்து வியாபாரம் செய்ததாக, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணைக்குப் பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்த நாள்களில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இதையடுத்து, `காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலால்தான் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர்' என்ற செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவர, நாடே அதிர்ந்துபோனது. உலகையே உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாயிட், மரணத்தைப்போல கொடூர தாக்குதலாகக் கருதப்படும் சாத்தான் குளம் சம்பவத்துக்கு எதிராக, பொதுமக்களும் பிரபலங்களும் சமூக ஊடகம் வழியே காவல்துறைக்கு எதிரான கோபத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தானே முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது. இந்தநிலையில், `காவல்துறையின் அட்டூழியங்களை மூடி மறைக்க அரசு முயல்வதாக' ஆளுங்கட்சி மீது சரமாரியான புகார்களை முன்வைத்தன எதிர்க்கட்சிகள். `சாத்தான்குளம் மர்ம சாவு சம்பவத்தை, தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்' என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கொடுத்துவந்த அழுத்தத்தையடுத்து, வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

கமல்ஹாசன்

அதேநேரம், `சி.பி.ஐ வசம் வழக்கு மாற்றம் செய்யப்பட்டால், நீதி கிடைப்பதில் தாமதமாகும்' என்ற எதிர்ப்புக் குரல்களும் எழத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், `சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி, பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே' என்ற தலைப்பில் சமூக ஊடகம் வழியே தமிழக அரசைச் சாடியுள்ளார். அதில், `குற்றவாளிகள் மேல் ஐ.பி.சி 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். சி.பி.ஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்துவிடுவார்கள் எனக் காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள்! ஏனெனில், காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி!' என்று உதாரணங்களோடு எச்சரித்திருக்கிறார் கமல்ஹாசன்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், `சி.பி.ஐ விசாரணை'யை வரவேற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி, `சி.பி.ஐ விசாரிக்கப் பரிந்துரைப்பது, நீதி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும்' என எதிர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சி.பி.ஐ விசாரணையை வரவேற்பதும் எதிர்ப்பதுமாக கட்சிகளுக்கிடையே வேறுபாடுகள் இருக்கலாம். கட்சிக்குள்ளேயே வேறுவேறு நிலைப்பாடுகள் இருக்கலாமா... என்ற நமது சந்தேகத்தை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடமே கேட்டோம்... ``அப்படி எந்தக் கருத்தையும் நான் சொல்லவில்லையே...'' என்று அடியோடு மறுத்தார். ஆனால், இதுகுறித்த பத்திரிகைச் செய்தியைக் காட்டி நாம் விளக்கம் கேட்டதும்,

கே.எஸ்.அழகிரி

``என்னுடைய பேச்சைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. சாத்தான் குளம் சம்பவத்தில், `இதை சி.பி.ஐ விசாரணைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்' என்று நாங்கள்தான் முதன்முதலில் கூறினோம்.

ஏனெனில், இது மிகவும் சென்சிட்டிவானதொரு வழக்கு. சம்பவத்தில் இறந்துபோன அந்தத் தந்தையும் மகனும் எந்தவிதக் குற்றப் பின்னணியும் இல்லாத அப்பாவிகள். திருட்டு, பாலியல் வன்கொடுமை, கட்டப் பஞ்சாயத்து என இதுவரை எந்தவொரு வழக்கிலும்கூட சம்பந்தப்படாத சாதாரணச் சிறு வியாபாரிகள்.

பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சாத்தான்குளம் சென்றிருந்தேன். அங்கே அவர்களது வீடு என்பது சின்னதொரு குடில்தான். 2 பேர் நிற்பதற்குத்தான் இடம் இருக்கிறதே தவிர, உட்காருவதற்குக்கூட அங்கே இடமில்லை. ஆனால், அவ்வளவு ஏழ்மையான சூழலிலும்கூட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துவந்த குடும்பம் அது.

`மனமறிந்து எந்தவொரு தவறையுமே செய்யாத நாங்கள் இப்படியொரு கொடுமையை அனுபவிக்க நேர்ந்துவிட்டதே... இனி எங்களுக்கு கர்த்தர்தான் வழிகாட்ட வேண்டும்' என்று கதறியழுகிறார்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்.

அவர்களைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த நான் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, `இயேசு கிறிஸ்து எப்படி சிலுவை ஏந்தி ரத்தம் சிந்தினாரோ, அதேபோன்று அப்பாவியான தந்தையும் மகனும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ரத்தம் சிந்த சிந்த அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்' என்றேன்.

பாதிக்கப்பட்ட குடும்பம்

16 கி.மீ தூரத்துக்குள்ளாகவே பாளையங்கோட்டை கிளைச் சிறைச்சாலை இருக்கிறபோது, அதை விட்டுவிட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் 100 கி.மீ தூரத்துக்கு அப்பால் உள்ள கோவில்பட்டி சிறைச்சாலைக்கு போலீஸ் அழைத்துச்சென்றது ஏன்?

அதுமட்டுமல்ல... இருவரையும் மிகக் கொடூரமாக போலீஸ் தாக்கியதால், இரண்டு, மூன்று லுங்கிகள் ரத்தத்தாலேயே நனைந்திருக்கின்றன. இப்படியொரு கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானவர்களைப் பரிசோதிக்காமலேயே மருத்துவர் எப்படிச் சான்றிதழ் வழங்கினார்?

இவையெல்லாவற்றையும்விட கொடுமையாக, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட், `குற்றவாளிகள் எனப்படுபவர்களைப் பார்க்காமலேயே எப்படி கஸ்டடி கொடுத்தார்?'

இப்படி இந்த வழக்கு மிகப்பெரிய கொடூர குற்றப்பின்னணியைக் கொண்ட வழக்காக இருக்கிறது. எனவே, இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்குத்தான் போகவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறிவந்தோம்.

ஆனால், ஆரம்ப கட்டத்தில் இதுகுறித்துப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் கருத்தைக் கேட்டறிந்துவிட்டு சி.பி.ஐ விசாரணைக்குச் செல்வோம்' என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து நிருபர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, `இந்த வழக்கை காலம் தாழ்த்துவதற்காக அதிபுத்திசாலித்தனமான விளையாட்டை விளையாடுகிறார் நமது முதல்வர். அதாவது `மக்களுடைய கோரிக்கை நிறைவேறுகிற மாதிரியும் இருக்கவேண்டும். அதேசமயம் அந்தக் கோரிக்கை நிறைவேறாததாகவே இருக்கவேண்டும்' என்ற பாணியை முதல்வர் கையாண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

உயர் நீதிமன்றத்தில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வழக்குகள் இருக்கலாம். அதற்காக உயர் நீதிமன்றத்திடம் கருத்து கேட்டுவிட்டுத்தான் சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்றுவதென்றால், அதற்கு நிறைய காலதாமதமாகும். `தலையைச் சுற்றித்தான் மூக்கைத் தொடவேண்டும் என்பது இல்லை. நேரடியாகவே மத்திய அரசிடமும் சி.பி.ஐ-யிடமும் இவ்வழக்கை எடுத்துக்கொள்ளும்படி அரசே முறையீடு செய்தால் போதும்' என்றும் தெளிவாகக் கூறினேன். நீதிமன்றமும்கூட, தற்போது இதைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதாவது, `வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுவது என்பது அரசின் முடிவு. இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை' என்று சொல்லியிருக்கிறது.

ஆனால், என்னிடம் பேட்டி எடுத்து செய்தியை எழுதிய நிருபர், `வழக்கு சி.பி.ஐ-க்குச் சென்றால் காலதாமதமாகும்' என்று நான் சொன்னதாக அப்படியே மாற்றி எழுதிவிட்டார்'' என்றார் விளக்கமாக.

தொடர்ந்து, `சி.பி.ஐ-க்கு வழக்கைக் கொண்டுசெல்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சி.பி.ஐ வழக்குகளின் காலதாமதங்களுக்கான காரணங்கள் குறித்த தனது கருத்தையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார் கே.எஸ்.அழகிரி...

``பொதுவாக சி.பி.ஐ-க்குச் செல்லும் வழக்குகள் காலதாமதமாகிறது என்றால், அதற்கான முக்கியக் காரணம் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததாகத்தான் இருக்கும். இந்த வழக்கிலும்கூட நமது மாநில அரசின் ஒத்துழைப்பு நல்லவிதத்தில் இருந்தால்தான் வழக்கை சீக்கிரமாக முடிக்க முடியும். அதற்கான அழுத்தத்தை அரசுக்கு மக்களாகிய நாம்தான் கொடுக்கவேண்டும். இதை நாம் பின்னடைவாகப் பார்க்கக்கூடாது.

ஜெயராஜ் - பென்னிக்ஸ்

ஏனெனில், சி.பி.ஐ-க்கு வழக்கு போனால், குறைந்தபட்சம் ஆவணங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யமுடியாது என்ற நன்மையாவது கிடைக்கும். ஆனால், நம்மூர் போலீஸே வழக்கை விசாரிக்கட்டும் என்று விட்டுவிட்டால், ஒட்டுமொத்தமாக வழக்கின் போக்கையே திசைதிருப்பி, `தந்தையும் மகனும் தற்கொலை செய்துவிட்டார்கள்' என்றுகூட வழக்கை முடித்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

உதாரணமாகக் கீழமை நீதிமன்றத்தில், ஒரு வழக்குக்குப் பாதகமான தீர்ப்பு கிடைக்கிறது என்று மேல்முறையீட்டுக்குச் சென்றால் அங்கே நமக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம் அல்லவா? ஒரேயடியாக `இந்த நீதிமன்றங்களே இப்படித்தான்...' என்று நம் பிரச்னையை எடுத்துச்செல்லாமலேயே விட்டுவிட முடியுமா என்ன? எனவே, இந்த வழக்கைப் பொறுத்தவரையில், உள்ளூர் போலீஸிடம் போவதைவிடவும் சி.பி.ஐ-க்குச் சென்றால், `நல்லதொரு தீர்வு கிடைக்கலாம்' என்ற நம்பிக்கையில்தான் செல்கிறோம்.

சி.பி.ஐ விசாரணைக்குச் சென்றதால் நீதி கிடைக்கத் தாமதமாகிறது என்பதாலேயே சி.பி.ஐ விசாரணைக்குப் போகாமல் இருந்துவிட முடியாது. ஒருவேளை அப்படி காலதாமதமானால், அதற்கான காரணம் என்னவென்று கண்டறிந்து அதை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளில் சம்பந்தப்பட்ட துறைகளும் மாநில அரசும்தான் கவனம் செலுத்தவேண்டும்'' என்றார் தெளிவாக.

இதையடுத்து `சாத்தான்குளம் வழக்கு சி.பி.ஐ-க்குச் சென்றால், வழக்கின் முடிவுகளைத் தெரிந்துகொள்ளவும் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனை பெறவும் காலதாமதமாகுமா....' என்ற கேள்வியை சி.பி.ஐ-யின் முன்னாள் எஸ்.பி-யும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியுமான ரகோத்தமனிடம் கேட்டோம்...

ரகோத்தமன்

``சாத்தான் குளம் வழக்கை மற்ற வழக்குகளோடு ஒப்பிட்டுப் பேசமுடியாது. ஏனெனில், இது மற்ற வழக்குகளைப் போன்று தனிப்பட்டதொரு வழக்காக இல்லாமல், இந்தியா முழுவதுமே பரபரப்பாகப் பேசப்படுகிற வழக்காக மாறிவிட்டது. அமெரிக்காவின் ஜார்ஜ் ஃப்ளாயிட் வழக்குக்கு இணையாக சாத்தான்குளம் வழக்கு பற்றியும் மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். எனவே, வழக்கை எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ அந்தளவுக்கு விரைவுப்படுத்தி நல்லதொரு தீர்வைத் தருவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

இது கொரோனா காலகட்டமாக இருப்பதால், விசாரணை அதிகாரிகள் டெல்லியிலிருந்து இங்கே வருவதற்குக் கொஞ்சம் காலதாமதமாகலாம். அதற்காக இங்கே உள்ள சி.பி.ஐ அதிகாரிகளே விசாரணை செய்யலாம் என்றால், அதில் குறுக்கீடு எதுவும் நிகழ்ந்துவிட வாய்ப்பிருப்பதால், டெல்லியிலிருந்துதான் அதிகாரிகள் வருவார்கள். நிச்சயம் அதற்குக் கொஞ்சம் காலதாமதமாகலாம்.

Also Read: சாத்தான்குளம்: `விடிய விடிய அடி; லத்தி, டேபிளில் ரத்தக்கறை’ -மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

சாத்தான் குளம் மர்ம மரணங்கள் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், அரசு கொடுத்திருக்கும் நோட்டிபிகேஷனில், சாத்தான்குளம் க்ரைம் நம்பரே கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஜெயராஜும் பென்னிக்ஸும் இறந்துபோன பிறகு கோவில்பட்டி ஜெயில் சூப்பிரன்டென்ட் கொடுத்த புகார்களின் அடிப்படையிலான `க்ரைம் நம்பர் 649 மற்றும் 650' என இந்த இரண்டு எண்கள் மட்டுமே அரசின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும்கூட `இயற்கைக்கு மாறான மரணம்' எனும் பிரிவில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக இது சரியானதுதான் என்றாலும்கூட, இது வழக்கை தாமதப்படுத்துவதற்கான முயற்சிதான்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள்

ஏனெனில், இந்த வழக்கின் முக்கிய அம்சமே சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவங்கள்தான். எனவே சாத்தான்குளத்தில் பதிவான க்ரைம் நம்பர்தான் முக்கியமாகக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், கோவில்பட்டியில் பதிவான புகார் எண்களை மட்டுமே அரசுத் தரப்பிலான அறிவிப்பில் கொடுத்திருக்கிறார்கள். எனவே, சி.பி.ஐ., இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும்போது, `இவ்வழக்கின் முக்கிய சம்பவமான சாத்தான்குளம் க்ரைம் நம்பர்கள் கொடுக்கப்பட வேண்டும்' என்று கேட்பார்கள். இப்படியெல்லாம் கேட்டு வாங்கி விசாரணை செய்வதற்கு நிச்சயம் காலதாமதம் ஆகத்தான் செய்யும்.

`சாத்தான்குளம் க்ரைம் விவகாரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என்றுதான் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு, மிகத்தெளிவாக சாத்தான்குளம் க்ரைம் நம்பரை மட்டும் கொடுக்காமல் மறைத்து, கோவில்பட்டி சம்பவங்களிலிருந்து மட்டுமே சி.பி.ஐ விசாரணையை ஆரம்பிப்பதற்கான வேலைகளைச் செய்திருக்கிறது!'' என்றார் தெளிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-cbi-enquiry-delay-justice-in-sathankulam-police-brutality-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக