Ad

சனி, 27 ஜூன், 2020

`கிராமத்துக்கு சவால்; வளையல் விற்கும் தாய்’ - ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி உருவான கதை

``ஒருவரின் வெற்றிக்குக் கடந்தகால வரலாறுகளைவிட, எதிர்காலக் கனவுகளே அவசியமானது” - என்ற தாமஸ் ஜெபர்சனின் வரி மிகவும் பிரபலமானது. ஆனால், எதிர்காலக் கனவுகளை நோக்கிய பயணத்தில் கடந்தகாலங்களில் ஏற்பட்ட வலிகள் மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கக்கூடியவை. வலிகளைச் சுமந்து கடுமையாக உழைத்து வாழ்க்கையில் சிகரங்களை அடைந்தவர்கள் மிகவும் குறைவான நபர்கள்தான். அவ்வாறு சிகரத்தை அடைந்தவர்களில் ரமேஷ் கோலாப் என்பவரும் ஒருவர்.

யார் இந்த ரமேஷ் கோலாப்? திடீரென இவர் ஏன் வைரல் ஆனார்? இவரைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்.

ரமேஷ் கோலாப்., ஐஏஎஸ்

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மஹாகான் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ் கோலாப். சிறுவயது முதலே திறமையான ஒரு குழந்தையாக இருந்த ரமேஷ், மிகவும் வறுமையான சூழலில் வளர்ந்து வந்தார். ரமேஷின் தந்தை சைக்கிள் கடை ஒன்றை நடத்தி வந்தார். அந்தக் கடையின் வழியாக வரும் வருமானம், ரமேஷ் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்குப் போதுமானதாக இருந்தாலும் அவரது குடிப்பழக்கம் மிகப்பெரிய தடையாக இருந்தது.

இதனால், ரமேஷின் தாய் விமல் கோலாப் தன்னுடைய குடும்பத்தைக் காப்பற்றுவதற்காக அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வளையல்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். தனது தாயுடன் இணைந்து ரமேஷ் மற்றும் அவரது சகோதரரும் வளையல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ரமேஷின் இடதுகால் போலியோவால் பாதிப்படைந்ததும் குறிப்பிடத்தக்கது. வறுமை, உடல்நிலை பாதிப்பு போன்ற சூழ்நிலையிலும் ரமேஷ் தனது படிப்பைப் பாதியில் நிறுத்தவில்லை.

Also Read: `சேவை செய்ய பதவி தேவையில்லை!’ -ஐ.ஏ.எஸ் பணிக்கு திரும்ப அழைப்பு.. மறுத்த கண்ணன் கோபிநாதன்

தன்னுடைய கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருந்ததால், மேற்கொண்டு படிப்பைத் தொடர தனது உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கி தனது படிப்பைத் தொடர்ந்தார். ரமேஷின் நேர்மையான குணமும் படிப்பின் மீதான அர்ப்பணிப்பும் ஆசிரியர்களிடையே அவருக்கு நற்பெயரை வாங்கிக் கொடுத்தது. 2005-ம் ஆண்டு தனது 12-ம் வகுப்புக்கான மாதிரித்தேர்வுகள் நடந்துகொண்டிருந்தபோது ரமேஷின் தந்தை இறந்துவிட்டதாக அவருக்குச் செய்தி கிடைத்தது. ஆனால், அவர் தங்கியிருந்த பார்ஷி பகுதியிலிருந்து தனது கிராமத்துக்கு வர அவரிடம் பணம் இல்லை. மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் அவருக்கு இருந்ததால், அன்றைக்கு அவருக்கான பேருந்துக் கட்டணம் ரூ 2. இந்தக் குறைந்தபட்ச பணம்கூட இல்லாமல் தவித்துள்ளார். தன்னுடைய தாயின் வற்புறுத்தலால் பொதுத்தேர்வுகளை எழுதினார். எழுதியது மட்டுமல்லாமல் அந்தத் தேர்வில் 88.5 சதவிகிதம் மதிப்பெண்ணையும் பெற்றார்.

ரமேஷ் கோலாப்., ஐஏஎஸ்

பள்ளிப்படிப்பை முடித்ததும் பொருளாதார நெருக்கடியால் அவரால் பட்டப்படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தன்னுடைய சூழலுக்கு ஏற்றவகையில் டி.எட் படித்தார். அதேநேரம் திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் வழியாக பட்டப்படிப்பை மேற்கொண்டார். படிப்புகளை முடித்த பின்னர் 2009-ல் ஆசிரியராக அவருக்குப் பணி கிடைத்தது. அவரது குடும்பத்தினருக்கு இந்தப் பணி `மிகப்பெரிய கனவு நிஜமாகியது’ போன்ற உணர்வைக் கொடுத்தது.

ஆனால், ரமேஷ் விரும்பியது இதனை அல்ல. வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருந்தும் உதவி கிடைக்காத நிலை, ஏழைக் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காமல் திருட்டுத்தனமாக விற்கும் ரேஷன் கடைக்காரர்கள் ஆகியவற்றைப் பார்த்து கோபமடைந்தார். அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவரது தந்தைக்கு மருத்துவர்கள் அதிகக் கவனம் கொடுக்காமல் அலட்சியமாக இருந்த கோபமும் அவருக்குள் இருந்தது.

தனது கல்லூரிக் காலங்களில் மாணவர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த ரமேஷ், கல்லூரியில் நடக்கும் சில விஷயங்களுக்காக அனுமதிகளைப் பெற தாசில்தார் அலுவலகத்துக்கு அடிக்கடி சென்றுள்ளார். அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதைப் பார்த்து தானும் அரசாங்க அதிகாரியாக வரவேண்டும் என முடிவு செய்துள்ளார். தனது கனவை நோக்கிய முதல் படியை 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுத்துவைத்தார். தாய் பெற்றுத் தந்த கடன்தொகையை எடுத்துக்கொண்டு யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராக தனது கிராமத்திலிருந்து புனேவுக்குச் சென்றுள்ளார். தனது ஆசிரியர் பணியிலிருந்து ஆறு மாதங்கள் விடுப்பும் எடுத்தார். ``எனது கிராமத்தில் இருக்கும்வரை யுபிஎஸ்சி மற்றும் எம்பிஎஸ்சி போன்றவற்றுக்கு அர்த்தம்கூட தெரியாது” என்று குறிப்பிடுகிறார், ரமேஷ்.

பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் அளவுக்கு ரமேஷிடம் பணம் இல்லாததால் ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் தொடர்ந்து படித்துள்ளார். இந்தத் தேர்வுக்கு தான் தகுதியானவனா? என்னால் இந்தத் தேர்வில் வெற்றிபெற முடியுமா? போன்ற கேள்விகள் அவருக்குள் இருந்தாலும் தன்னால் முடியும் என்பதை உறுதி செய்துகொண்டு தொடர்ந்து படித்துள்ளார்.

2010-ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்றார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதனிடையே, தனது கிராமத்தில் நண்பர்களின் உதவியுடன் சிறிய கட்சி ஒன்றையும் தொடங்கியுள்ளார். பஞ்சாயத்து அளவில் நடந்த தேர்தலில் அவரது தாயார் போட்டியிட்டார். போட்டியின் முடிவுகள் அக்டோபர் 23, 2010 அன்று வெளிவந்தது. ஆனால், அவரது தாய் இதில் வெற்றி பெறவில்லை. இந்தத் தோல்வி அவருக்கு இன்னும் அதிக உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. அதேநாளில் அவர் கிராமத்தைவிட்டு வெளியேறுவதாகவும் உயர் அதிகாரியாகத்தான் மீண்டும் கிராமத்துக்கு வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். தனது வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தநாள் அமைந்தது என ரமேஷ் குறிப்பிடுகிறார்.

ஆசிரியர் பணியை விட்டு எஸ்ஐஏசி தேர்வை எழுதி அதில் வெற்றிபெற்றார். இதனால், அவருக்கு உதவித்தொகை கிடைத்தது. தனது செலவுகளைக் கவனித்துக்கொள்ள சுவரொட்டிகளை வரைதல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்துள்ளார். மறுபக்கம், தீவிரமாகப் படித்துள்ளார். அதற்கு அடுத்த ஆண்டு நடந்த தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய அளவில் 287-வது இடத்தைப் பிடித்தார்.

எம்பிஎஸ்சி தேர்விலும் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ரமேஷின் வெற்றியை அவரது கிராமமே கொண்டாடியது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடெர்மா எனும் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். ஏழைகளுக்கு உதவி செய்யும்போதெல்லாம், தன்னுடைய மோசமான காலங்களை நினைவுகூர்கிறார். ஐ.ஏ.எஸ் ஆக விரும்பும் ஒவ்வொருவருக்கும் ரமேஷின் கதை இன்று மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது.

ரமேஷ் தற்போது வைரலாகக் காரணம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்த ஒரு தகவல்தான். தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்த ரமேஷ் அதன் கேப்ஷனில், ``நான் கடந்த எட்டு ஆண்டுகளாக ஐ.ஏ.ஏஸ் ஆகப் பணிபுரிந்து வருகிறேன். ஆனால், என்னுடைய அம்மா இன்னும் வளையல்களை விற்று வருகிறார்.

அதற்கு அவர், `இந்த வளையல்களை விற்று வந்த பணத்தைதான் உங்களின் கல்விக்காகப் பயன்படுத்தினேன். அதனால்தான், உன்னால் கலெக்டராக முடிந்தது. எனது உடல்நிலை அனுமதிக்கும்வரை நான் வளையல் விற்பனை செய்வேன்’ என்கிறார். கடினமான சூழ்நிலைகளில் உங்களுக்கு ஆதரவளித்தவர்களை ஒருபோதும் நீங்கள் மறக்கக்கூடாது. அவர்கள் தேவை” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட், முகநூல் மற்றும் ட்விட்டரில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

Also Read: `மெசேஜ் அனுப்பிய 4 மணி நேரத்தில் உதவி’ - மேற்குவங்கத் தொழிலாளர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்



source https://www.vikatan.com/news/india/a-success-story-of-ramesh-gholap-ias

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக