தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் விற்பனைக் கடை நடத்திவந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தால் கொந்தளித்த வணிகர்கள், இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.
Also Read: சாத்தான்குளம்:`அப்பா, மகன் தரையில் புரண்டதால் ஏற்பட்ட காயம்!'- எஃப்.ஐ.ஆர் சர்ச்சை
உடற்கூறு பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினர் நெல்லை மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்களின் உறவினர்களும் ஏராளமானோர் குவிந்திருந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
பென்னிக்ஸின் சகோதரி பெர்சி என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் விஜயவாடாவில் இருக்கிறேன். இன்னொரு சகோதரி பொள்ளாச்சியிலும் மற்றொருவர் சென்னையிலும் இருக்கிறார்கள். என் தந்தை, தாய், அண்ணன் மட்டுமே இங்கு இருந்தார்கள். அண்ணனையும் அப்பாவையும் போலீஸ் அடித்துக் கொன்றுவிட்டதால், எங்கம்மா நிர்கதியாகி இருக்கிறார்.
எந்தத் தப்பும் செய்யாத என் அண்ணனையும் அப்பாவையும் போலீஸார் எதற்கு அடித்தார்கள்? அவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர் அவர்களைப் பார்த்ததும் சிகிச்சை அளித்திருக்க வேண்டாமா?
ரத்தப்போக்குடன் இருந்த என் அண்ணனையும் காயத்துடன் இருந்த அப்பாவையும் எப்படி சிறையில் அடைத்தார்கள்? இந்தச் சம்பவத்துக்குக் காரணமான போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம். அதன் பின்னரே நாங்கள் உடலை வாங்குவோம்” என்று அழுதபடியே தெரிவித்தார்.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவுப்படி மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவினர் உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின்னர், உடலில் உள்ள காயங்கள் குறித்து நீதிபதி ஆய்வு செய்தார். உடலைப் பெறுவது தொடர்பாக உறவினர்கள் முடிவெடுக்காததால், போலீஸார் நெருக்கடியில் உள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/death/family-members-of-lock-up-death-victims-are-demanding-to-file-case-against-police-in-sathankulam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக