“2017-ம் ஆண்டு சபாநாயகருக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எதிரான கருத்துகளைத் தேர்தல் ஆணையத்தில் சொல்லிவிட்டு, 2020-ல் அதற்கு மாறான மற்றொரு கருத்தை எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார். இது அவருக்கே சிக்கலை ஏற்படுத்தப்போகிறது” என்று எச்சரிக்கை செய்ய ஆரம்பித்துள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள்.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இன்றைய துணை முதல்வர் பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். இதனால் அ.தி.மு.கவுக்குள் பிளவு ஏற்பட்டது. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக 11 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அதே பிப்ரவரி மாதம் எடப்பாடி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் அவர் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி அரசு வெற்றிபெற்றது. ஆனால், பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 11 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அன்றைக்கு எடப்பாடி அணியிலிருந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் மனு அளித்தனர். ஆனால் அப்போது அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன்பிறகு தினகரன் தரப்பு எடப்பாடிக்கு எதிராக அணிதிரண்டது. அந்த அணியில் எடப்பாடியிடம் இருந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். எடப்பாடிக்கு எதிராக தொடர்ந்து அந்த 18 பேரும் செயல்பட்டு வந்ததால், அவர்களை ஒருகட்டத்தில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தரப்பிலிருந்து சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில் ''எங்கள் மீது தகுதிநீக்கம் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். ஆனால், அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த பதினோர் பேர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் தினகரன் அணியிலிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுகுறித்து வழக்கும் தாக்கல் செய்தார். அதேபோல் தி.மு.க கொறடா சக்கரபாணியும், ''பன்னீர் அணியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யவேண்டும்'' என்று மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுக்களை அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து தி.மு.க தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “சபாநாயகர் உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. அதே நேரம் மூன்று ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மூன்று மாதத்துக்குள் முடிவு எடுக்கவேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
மூன்று மாதங்கள் கடந்தும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மீண்டும் தி.மு.க உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த விவகாரம்தான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில், “11 சட்டமன்ற உறுப்பினர்கள்மீது புகார் அளித்த ஆறு பேரிடம் இதுகுறித்து சபாநாயகர் விளக்கம் கேட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆறுபேரில் இருவர் எடப்பாடி அணியிலும், மூவர் தினகரன் அணியிலும், தங்க தமிழ்செல்வன் தி.மு.கவிலும் தற்போது உள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், எனவே அவர்களைத் தகுதி நீக்கம் செய்யும் தேவை எழவில்லை என்றும், மேலும் அவர்கள் தற்போது அ.தி.மு.கவில் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம்தான் இப்போது எடப்பாடிக்கு எதிராகச் சிக்கலாக மாறப்போகிறது என்கிறார்கள்.
இதுகுறித்து தினகரன் அணியில் உள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் வழக்குத் தாக்கல் செய்ய இருக்கிறார். அதில் முன்னுக்குப் பின் முரணாக ஒரே சம்பவத்தை ஒருமுறை உண்மையாகவும், ஒருமுறை பொய்யாகவும் எடப்பாடி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று சொல்லி அதற்கு ஆதரமாக சில ஆவணங்களையும் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தினகரன் அணியைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது, “2017-ம் ஆண்டு மார்ச் மாதம் ஓ.பி.எஸ் சார்பில் செம்மலை தேர்தல் ஆணையத்திடம் தனி மனு ஒன்றைத் தாக்கல் செய்து 'அ.தி.மு.கவில் நாங்கள் தனி அணி' என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் எடப்பாடியால் தாக்கல் செய்யப்பட்ட சத்திய பிரமாண வாக்குமூலத்தில் ஓ.பி.எஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது, பன்னீர் அணியினருக்கு அ.தி.மு.க கொறடா எந்த உத்தரவும் அப்போது கொடுக்கவில்லை என்று எடப்பாடி குறிப்பிட்டிருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோதே அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன், “134 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எடப்பாடி அரசுக்கு ஆதரவளிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியிருந்தார்.
அதேபோல் அன்றைக்குப் பன்னீர் அணியிலிருந்த செம்மலையால் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அ.தி.மு.க கட்சி முத்திரையோடு கொறடா உத்தரவிட்டிருந்ததையும், ஓ.பி.எஸ் தரப்பு எதிர்த்து வாக்களித்ததையும் தேர்தல் ஆணையத்தில் சத்தியப் பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அப்போது தேர்தல் ஆணையத்தில் பன்னீர் அணிக்கு எதிராக வாக்குமூலத்தை அளித்த எடப்பாடி, இப்போது பன்னீர் அணிக்கு ஆதரவாக சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 340-ன் படி, தான் கொடுத்த வாக்குமூலத்திற்கு எதிராக மற்றொரு வாக்குமூலத்தைக் கொடுத்தது குற்றம். அதையே இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கையாளப்போகிறோம்.
எடப்பாடி தரப்பு ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த சத்திய பிரமாண வாக்குமூலத்தையும், அன்றைய காலகட்டத்தில் அ.தி.மு.க கொறடா செய்தியாளர்களுக்குக் கொடுத்த பேட்டியையும் இணைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்” என்கிறார்கள்.
Also Read: சசிகலா `விடுதலை' ரகசியம்; முதல்வருக்கு ஆபத்தா? உளவுத்துறை பதில் என்ன? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்
தி.மு.க தரப்பில் ஏற்கெனவே இந்த வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சில ஆவணங்களைத் தாக்கல் செய்ய இருக்கிறது. இந்நிலையில், அன்றைக்கு எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்த பார்த்திபன், வெற்றிவேல் உள்ளிட்ட மூவர் சார்பில் இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் தாக்கலாக உள்ளது. அப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் சபாநாயகர் மற்றும் எடப்பாடி ஆகிய இருவருக்குமே சிக்கல் வரும் என்கிறார்கள். மேலும், அன்றைக்குப் பன்னீர் அணிக்கு எதிராக சபாநாயகரிடம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அவர்களிடம் அந்தப் புகார் குறித்து இப்போது சபாநாயகர் விளக்கம் கேட்டுள்ளார். அதில் தினகரன் அணியில் உள்ள பார்த்திபன், வெற்றிவேல், ரங்கசாமி ஆகியோர், 18-2-2017-ம் தேதியன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த பதினோரு பேரையும் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று மீண்டும் குறிப்பிட்டு பதில் அளித்துள்ளனர்.
அதே நேரம் அ.தி.மு.க தரப்பில் வேறு விதமாகச் சொல்கிறார்கள். “11 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து சபாநாயகரிடம் கொடுத்த புகார் மனு மீது இதுவரைச் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே, இதை எந்த நீதிமன்றமும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளமுடியாது. சபாநாயகர் தரப்பிலிருந்து விளக்கம் கேட்பார்கள். இந்தச் சட்டச்சிக்கலை அப்போது பார்த்துக்கொள்வோம்” என்கிறார்கள் தெம்பாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/a-new-controversy-against-edappadi-palaniswami
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக