Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

`சாக்டெங் சரணாலயம்!’ -இந்தியாவைத் தொடர்ந்து பூட்டான் எல்லையில் அத்துமீறும் சீனா

சீனா மிகப்பெரிய நாடு என்பதால் பல்வேறு நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து வருகிறது. இதனால், எல்லையில் உள்ள சில நாடுகளுடன் எல்லைப் பிரச்னை தொடர்பாக மோதியும் வருகிறது. குறிப்பாக தென் சீனக்கடல் முதல் லடாக் வரை உள்ள பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏற்கெனவே, இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை அதிக பதற்றத்தை இருநாட்டு எல்லைகளிலும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீனா தற்போது பூட்டான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. இதனால், பூட்டான் மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்னை தொடர்பான பதற்றங்கள் தற்போது தொடங்கியுள்ளன.

உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சில்

உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின் 58-வது கூட்டத்தில் சீனா, பூட்டானில் அமைந்துள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற உள்ள புதிய திட்டம் ஒன்றுக்கு நிதி ஒதுக்குவதை தடுத்து நிறுத்த முயன்றதோடு அந்த நிலப்பகுதி `சர்ச்சைக்கு உரியது’ என்றும் கூறியுள்ளது.

பூட்டான் மற்றும் சீனா இடையிலான எல்லையில் அமைந்துள்ள சாக்டெங் சரணாலயத்தின் நிலப்பகுதி தொடர்பான எந்தப் பிரச்னையும் கடந்த காலங்களில் ஏற்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இந்த சர்ச்சைக்குரிய பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் பூட்டான், ``சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் ஒருங்கிணைந்த மற்றும் இறையாண்மைக்கு உரிய பகுதியாகும்” என்று கூறியுள்ளது.

Also Read: ``இந்திய மக்களின் பலத்தை சீனா உணரவில்லை!" - விகடனுக்கு 1962ல் பாதுகாப்பு அமைச்சர் சவான் அளித்த பேட்டி

பிரச்னைகளுக்கு இடையே உள்ள சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்துக்கு இதுவரை உலகளாவிய அளவில் இருந்து எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே, சர்வதேச அளவில் இருந்து முதன்முறையாக அந்த வனவிலங்கு சரணாலயம் தொடர்பான திட்டம் ஒன்றுக்கு நிதி ஒதுக்கப்படும் நிலையில் சீனா அந்த சரணாலயம் அமைந்துள்ள நிலத்தை உரிமை கோருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனா இந்தத் திட்டத்துக்குப் பல எதிர்ப்புகளைக் கூறினாலும் கவுன்சிலின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த கவுன்சிலில் சீனாவுக்கான ஒரு பிரதிநிதி உள்ளார். ஆனால், பூட்டானுக்கென நேரடியாக ஒரு பிரதிநிதிகூட இந்த கவுன்சிலில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த விஷயம் பூட்டானுக்கு பாதகமாக உள்ளது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை நாடுகளின் உலக வங்கியின் பொறுப்பாளராக இருக்கும் இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரியான அபர்ணா சுப்ரமணிதான் பூட்டானின் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த கலந்துரையாடலின்போது சீனாவின் கவுன்சில் உறுப்பினர் ஜாங்ஜிங் வாங், பூட்டானில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம் குறித்து முறையான சான்றுகள் அளிக்கப்பட வேண்டும் என்று கூறி தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பூட்டான் சார்பாக உள்ள இந்திய அதிகாரி அபர்ணா, சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் நியாயமில்லாதவை என்று கூறினார். கவுன்சிலின் தலைவரான நவோகோ இஷி, இருநாடுகளில் கருத்துகளையும் கேட்டு நடுநிலைமையான ஒரு முடிவுக்கு வர முயன்றார். ஆனால், சீனப் பிரதிநிதிகள் பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்தநாள் இந்தப் பிரச்னை மீண்டும் விவாதிக்கப்பட்டுள்ளது. இறுதியாக சபையின் பெரும்பாலான ஆதரவுடன் சரணாலயம் திட்டம் தொடர்பாக பூட்டானுக்கு நிதி வழங்குவது உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இத்தகைய நிலைப்பாடுகள் பலருக்கும் அதிருப்தி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read: `அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்!’ - போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்



source https://www.vikatan.com/news/world/china-claims-bhutans-sakteng-wildlife-sanctuary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக