Ad

சனி, 27 ஜூன், 2020

`பெண் பார்க்க வீட்டுக்கு வந்தார்கள்!' - மிரட்டல் கும்பல் அதிர்ச்சி; மீளாத நடிகை பூர்ணா

மலையாள திரை உலகில் முன்னணி நடிகையான ஷம்னா காஸிம் தமிழ் திரை உலகில் பூர்ணா என்ற பெயரில் நடித்து வருகிறார். கேரள மாநிலம் கொல்லம் மரட் பகுதியில் வசித்துவரும் பூர்ணாவின் திருமணத்துக்கு வரன் பார்ப்பதாகக் கூறி ரபீக், அஷ்ரப், சரத், ரமேஷ் ஆகியோர் தொடர்புகொண்டுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக பூர்ணாவின் உறவினர் ஒருவர் பெயரைக் கூறி அவர் கூறியதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து பூர்ணாவின் பெற்றோர் அவர்களிடம் தொடர்ந்து பேசியுள்ளனர். இதற்கிடையில் இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பூர்ணாவுக்கு போன் செய்து துபாயில் நடக்கும் பிசினஸுக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். பெற்றோரிடம் கேட்டுவிட்டு பணம் தருவதாக பூர்ணா கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது வீடியோ காலில் அழையுங்கள் எனவும் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தக் கும்பல் பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து பூர்ணாவின் தந்தை காஸிம், மரட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரபீக், அஷ்ரப், சரத், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பார்த்த ஆலப்புழாவைச் சேர்ந்த மாடலிங் பெண் ஒருவர் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து இவர்கள் தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும். தங்கம் கடத்துவதற்காகப் பிரபல நடிகைகள், மாடலிங் துறையைச் சேர்ந்தவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவரை சில மாதங்களுக்கு முன்பு பாலக்காட்டுக்கு வரவழைத்து தங்கம் கடத்த உதவும்படி கூறியதாகவும். அதற்கு சம்மதிக்காததால் எட்டு நாள்கள் தனி அறையில் அடைத்து வைத்ததாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். தனி அறையில் மேலும் ஏழு பெண்கள் இருந்ததாகவும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மலையாள திரை உலகமே அதிர்ச்சியில் உள்ளது.

நடிகை பூர்ணா மிரட்டப்பட்ட வழக்கில் கைதானவர்கள்

இந்த நிலையில் நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளியான ஷபீக் என்பவர் கோர்ட்டில் சரணடைய வந்த சமயத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து நடிகை பூர்ணா விரிவாகப் பேசினார். நடிகை பூர்ணா கூறுகையில், "பாதுகாப்பு கருதிதான் போலீஸில் புகார் கொடுத்தோம். புகார் கொடுக்கும் சமயத்தில் இவர்களது பின்னணி இவ்வளவு பெரியதாக இருக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை. எங்கள் புகாரால் பெரிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய பிரச்னையில் சிக்கிக்கொள்ள இருந்தோம் என நினைத்தாலே அதிர்ச்சியாக உள்ளது. அதே சமயம் பெரிய பிரச்னையில் இருந்து தப்பியதை நினைத்து ஆறுதலாகவும் உள்ளது.

அன்வர் அலி, முஹம்மது அலி என்பதுபோன்ற போலி பெயர்களில் எங்களிடம் பேசினார்கள். என்னிடம் போனில் பணம் கேட்டது ஷமீமா அல்லது ரபீக்கா என எனக்கு தெரியவில்லை. எங்களிடம் மோசடி செய்வதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு என்னிடமும் பெற்றோரிடமும் பேசினார்கள். மலபாரில் ஒரு நல்ல குடும்பத்தில் உள்ள சம்பந்தம் என்றுதான் முதலில் எங்களைத் தொடர்புகொண்டார்கள். என் அப்பாவிடமும் சகோதரனிடனிடமும் அவர்கள் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் எனச் சொன்னார்கள். அத்துடன் ஒரு முகவரியையும் கொடுத்தார்கள். லாக்டெளன் காரணமாக அந்த முகவரியில் வசிப்பவர்கள் குறித்து முழுமையாக விசாரிக்க முடியவில்லை. பையனின் பெற்றோர் உங்கள் வீட்டுக்கு வரலாமா என எங்களிடம் கேட்டதுடன், அவர்களின் புகைப்படங்களையும் அனுப்பித் தந்தனர். மிகவும் மரியாதையோடு போனில் பேசியதால் அவர்களை வீட்டுக்கு வருமாறு அழைத்தோம்.

பெற்றோருடன் நடிகை பூர்ணா

வீட்டுக்கு வந்தவர்களை நேரில் சந்தித்தபோதுதான் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரமேஷ், சரத் ஆகியோர் டிரைவர் எனக் கூறினர். அவர்களைப் பார்த்தபோதுதான் சந்தேகம் வலுத்தது. எனவே, டிரைவர் என்றால் வீட்டுக்கு வெளியே நிற்கட்டும் என்று அவர்களிடம் நான் கூறினேன். அவர்கள் வீட்டில் வந்து எங்களைத் தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. வீட்டில் அப்போது நிறைய பேர் இருந்ததால் அவர்கள் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டிருக்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் பெண் பார்க்க வருவதாகக் கூறி என் வீட்டுக்கு ஏன் வந்தார்கள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இவ்வளவு சம்பவங்களும் ஒரு வாரத்துக்குள் நடந்து முடிந்துவிட்டன.

Also Read: `10 லட்சம் வராவிட்டால் கேரியர் நாசம்!' -நடிகை பூர்ணாவை மிரட்டிய கடத்தல் கும்பல்

எனது புகாரைத் தொடர்ந்து பலர் புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு இந்தக் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. சத்தியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் எனப் புகார் அளித்தவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். கேரள போலீஸை நம்பி நாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லுவோம். நான் உறுப்பினராக உள்ள மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா இந்த விஷயத்தில் எனக்கு பின் துணையாக உள்ளது. மோகன்லால் உள்ளிட்ட சிலர் என்னை அழைத்து தைரியம் கொடுத்தார்கள். வேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த கேரள காவல்துறைக்கு பெருமையோடு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/actress-poorna-speaks-about-blackmailing-gang

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக