Ad

திங்கள், 29 ஜூன், 2020

கொரோனா: `ஆமாம், நான்தான் ஊசி போட்டேன்!' -போலி மருத்துவரால் கரூரில் நேர்ந்த துயரம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர், போலி மருத்துவர் ஒருவரிடம் தொடர்ச்சியாக ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் இறந்துபோன சம்பவம், கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புன்னம் சத்திரம்

கரூர் மாவட்டத்தில் இதுவரை 137 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர்களில் பெரும்பாலானோர் பூரண குணமடைந்து, அவரவர் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.

Also Read: கொரோனா: அடுத்தடுத்த நாள்களில் இருவர் மரணம்! - அதிர்ச்சி தரும் கரூர் நிலவரம்

இந்த நிலையில், சென்னையிலிருந்து கரூருக்குத் திரும்பிய, வெங்கமேட்டைச் சேர்ந்த 40 வயது நிரம்பிய ஒருவரும், பள்ளபட்டியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரும் அடுத்தடுத்த நாள்களில் இறந்துபோக, கரூர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

இந்த நிலையில், போலி மருத்துவர் ஒருவரிடம் ஒரு வார காலமாக சிகிச்சைபெற்றுவந்த, புன்னம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா தொற்றால் இறந்திருப்பது, இன்னும் அதிர்ச்சியைக் கூட்டியிருக்கிறது.

போலி மருத்துவரிடம் சிகிச்சை

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவரும் அவர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு, ஊராட்சிமன்ற உறுப்பினராகவும் வெற்றிபெற்றிருக்கிறார்.

இந்தச் சூழலில், கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சலும் சளிப்பிரச்னையும் ஏற்பட்டிருக்கிறது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, நொய்யல் பகுதியில் மருத்துவம் படிக்காமலேயே கிளினிக் நடத்திவரும் சண்முகம் என்பவரிடம் சென்று, காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கடந்த ஒரு வார காலமாக சண்முகத்திடம் சிகிச்சை எடுத்தும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

இதனால் பயந்துபோன அவர், மூன்று தினங்களுக்கு முன்பு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்குச் சென்று காண்பித்திருக்கிறார். அங்கே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். அதன்பிறகுதான், அவர் போலி மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றதை சுகாதாரத்துறை இணை இயக்குநர், மருத்துவர்கள் எல்லோரும் அறிய நேர்ந்தது.

Also Read: கொரோனா: ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு பாசிட்டிவ்! - மனைவிக்கும் தொற்று உறுதி

இதனால், இணை இயக்குநர் சந்தோஷ்குமார் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினரும், சண்முகத்தின் கிளினிக்கிற்குச் சென்றனர். அவர்களிடமும், 'நான்தான் அவருக்கு காய்ச்சல் குறைய தொடர்ந்து ஊசி போட்டேன்' என்று சண்முகம் தைரியமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் மருத்துவம் படிக்காமலேயே கடந்த 30 வருடங்களாக வைத்தியம் பார்த்து வந்ததை அறிந்து, ஆய்வுக்குச் சென்ற அனைவரும் அதிர்ந்துபோனார்கள்.

அதோடு, கடந்த ஜனவரி மாதம் சண்முகத்திடம் சிகிச்சைபெற்ற ஒருவர் இறந்துபோயிருக்கும் தகவலையும் அங்குள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சண்முகத்தின் மகள், தற்போது மருத்துவம் படித்து முடித்துள்ளார்.

புன்னம்சத்திரம் பகுதியில் மருத்துவக் குழுவினர்...

ஆனால், சண்முகம் மருத்துவம் படிக்காமலேயே கடந்த 30 வருடங்களாக வைத்தியம் பார்த்துவந்ததை உறுதிப்படுத்திக் கொண்டபின், சண்முகத்தின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைதுசெய்தனர்.

இன்னொருபக்கம், புன்னம் சத்திரம் பகுதியை கட்டைகளை வைத்து அடைத்ததோடு, அங்கு மருத்துவக் குழுவினர் மக்களுக்கு கொரோனோ டெஸ்ட் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா தொற்றுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதால், மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் இறந்து போயிருப்பது, அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/karur-village-ward-member-died-due-to-corona-positive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக