கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மீனச்சல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கி சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் நிறைந்துள்ள குப்பைகளை அகற்றி நிலத்தை மீட்பதற்காக வளம் மீட்பு பூங்கா என்ற திட்டம் அமைக்கப்பட்டும் குப்பைகள் அகன்றபாடில்லை. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்படாமல் ஒன்றாக போடப்பட்டுள்ளதால் குப்பைகள் மலை போன்று குவிந்துள்ளன.
இந்தக் குப்பைக் கிடங்கின் மத்தியில்தான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பல பேரூரட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் சேகரிப்பு தொட்டியும் உள்ளது. கிடங்கில் குப்பைகள் நிறைந்து அந்தப்பகுதி முழுவதும் மாசு ஏற்படுத்தி வருகிறது. எனவே, இந்தக் குப்பைகளை விரைந்து அகற்றி சுகாதாரம் பேண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இந்த நிலையில், களியக்காவிளை உள்ளிட்ட கேரள எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட்டுகளில் இருந்து வரும் மாஸ்க் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளும் சேர்ந்துகொண்டதால் இந்தக் குப்பைக்கிடங்கில் மேலும் குப்பைகள் சேர்ந்து சுகாதாரகேட்டை ஏற்படுத்திவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மீனச்சல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ``தமிழக கேரளா எல்லையில் உள்ள சாலைகளில் கேரளாவிலிருந்து வருபவர்களை சோதனை செய்ய பல்வேறு கொரோனை சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அங்கு பணியில் இருக்கிறார்கள். அதுபோக கேரளாவிலிருந்து வருபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொச்சி விமான நிலையங்கள் வழியாக தமிழகம் வருபவர்களும் களியக்காவிளை பகுதிகளில் அமைந்துள்ள செக்போஸ்ட் வழியாக வருகிறார்கள். சோதனைக்காக அவர்கள் அங்கு காத்திருக்கும் நிலையும் உள்ளது.
இதனால் கேரள எல்லை செக்போஸ்ட்டுகளில் அதிக கழிவுகள் உருவாகின்றன. சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் பயணிகள் பயன்படுத்திய மாஸ்க், கிளவுஸ் போன்ற மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மீனச்சல் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் சேர்க்கப்படுகின்றன. அவற்றை முறையாக அழிக்காமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் குப்பைக் கிடங்கு நிரம்பி வழிந்து சாலையில் குப்பைகள் சிதறிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்துவரும் மழை காரணமாக குப்பைகள் மழைநீர் வடிகால் ஓடை வழியாக மக்கள் பயன்படுத்தும் குளங்களில் சேரும் நிலை உள்ளது. கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேரள எல்லை செக்போஸ்ட் கழிவுகளால் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி களியக்காவிளை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை" என்றனர்.
என்ன சொல்கிறார் பேரூராட்சி செயல் அலுவலர்?
இதுகுறித்து களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ஏசுபாலனிடம் பேசினோம், ``வளம் மீட்புத் திட்டத்தின் கீழ் குப்பைக் கிடங்கிலிருந்து குப்பைகளை அகற்றி, நிலத்தை மீட்பதற்காக கோவையைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குப்பைகளைப் பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரித்து விற்பனை செய்யவும். மக்கா குப்பைகளை மறு சுழற்சி செய்வதும் இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்த நிலையில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க லாக்டெளன் பிறப்பிக்கப்பட்டதால் அந்த கம்பெனியினர் இங்கு வந்து பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மற்றபடி கேரள எல்லை செக்போஸ்ட்களில் இருந்து வரும் மாஸ்க் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை தினமும் பாதுகாப்பாக எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/corona-prevention-related-medical-waste-issue-in-kaliyakkavilai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக