அதாவது தினமும் ஏதேனும் ஒரு காய்கறியைச் சமைத்து அந்த வீடியோவையும், அந்தக் காய்கறி பற்றிய தகவல்களையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட முடிவு செய்தார். அவர் சமைக்க எடுத்துக்கொண்ட காய்கறிகள் அனைத்தும் நம்மால் மறக்கப்பட்ட நம் பாரம்பர்ய காய்கறிகள். அவற்றில் பெரும்பாலானவை இப்போது சமையலில் பயன்படுத்தப்படுவதே இல்லை.
மறக்கப்பட்டு வரும் நம் தமிழக பாரம்பர்ய காய்கறிகளை அனைவருக்கும் நினைவுபடுத்தவும், தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஆகாஷ் இந்த முயற்சியை மேற்கொண்டார். மார்ச் மாதம் தொடங்கிய இந்த டாஸ்க் ஜூன் மாதத்தில் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 100 நாள்கள்; 100 காய்கறிகள் என அவரின் இன்ஸ்டா பக்கம் களைகட்டியது. ஆகாஷின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு அனைவரும் ஆதரவும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
100 நாள் தமிழக பாரம்பர்ய காய்கறிகள் டாஸ்க் குறித்து மேலும் தெரிந்துகொள்ள ஆகாஷ் முரளிதரனிடம் பேசினோம்.
``நான் படிச்சது ஆர்கிடெக்சர். படிப்பு முடிஞ்சதும் கொஞ்ச நாள் சென்னையிலேயே உதவிப் பேராசிரியரா இருந்தேன். ஆனா, எந்த வேலையும் சரியா செட் ஆகல. சின்ன வயசில் இருந்தே எனக்கு சமையல் கலையில் ஆர்வம் அதிகம். வேலை தேடிக்கொண்டு இருந்த நேரத்துல `மாஸ்டர் செஃப் ஃபுட் டிசைனிங்' படிக்கிறதுக்கான ஒரு வாய்ப்பு கிடைச்சுது. அதுக்காக இத்தாலிக்குப் போனேன். படிப்பு முடிஞ்சு கடந்த 2020 ஜனவரி மாதம்தான் சென்னைக்கு வந்தேன்.
ஒருநாள் வீட்டைச் சுத்தம் செய்தபோது மீனாட்சி அம்மாள் 1951-ல் எழுதிய `சமைத்துப்பார்' புத்தகம் கண்ணுல பட்டுச்சு. சைவ சமையல் குறித்த அந்தப் புத்தகம் மொத்தம் மூணு பாகம். என் அம்மா எழுதி வைத்திருந்த சமையல் குறிப்புகள் உள்ள நோட்டுப் புத்தகமும் கிடைச்சது. ரெண்டையும் ஆர்வத்தோட படிக்க ஆரம்பிச்சேன். படிக்க படிக்கதான் நம்ம நாட்டு பாரம்பர்ய சைவ உணவுகள் பற்றி தெரிஞ்சுக்க முடிஞ்சது. நிறைய காய்கறிகள் பயன்படுத்தி விதவிதமா சமையல் செஞ்சிருக்காங்க. அப்போ பயன்படுத்தின பெரும்பாலான காய்கறிகளை இப்போது சமையலுக்குப் பயன்படுத்தப்படுறதே இல்ல. ஆனா, எல்லாமே நம்ம நாட்டுல விளையக்கூடிய பாரம்பர்யமான காய்கறிகள். இப்போகூட கிராமங்கள்ல விளைய வெச்சுப் பயன்படுத்திகிட்டுதான் இருக்காங்க.
Also Read: சிறியவர்கள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை... நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வது எப்படி?
இந்தத் தலைமுறையினரால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வரும் நம் பாரம்பர்ய காய்கறிகள் பற்றிய விழிப்புணர்வை எல்லாருக்கும் ஏற்படுத்தணும்னு ஓர் எண்ணம் உருவானது. அப்போ கொரோனா தொற்று தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியிருந்த நேரம். லாக்டௌன் வேற ஸ்டார்ட் ஆயிடுச்சு. வெளியிலபோய் எதுவும் செய்ய முடியாத நிலை. வீட்டுல இருந்தே என்ன செய்யலாம்ன்னு யோசிச்சேன். லாக்டௌன் ஆரம்பமானதுல இருந்து எல்லாரும் சோஷியல் மீடியாவுல ஆக்ட்டிவா இருந்தாங்க.
அதனால, `சமைத்துப்பார்' புத்தகத்துல குறிப்பிடப்பட்டிருந்த காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்து என் இன்ஸ்டா பக்கத்துல பதிவிடத் தொடங்கினேன். ஆரம்பத்துல எளிதில் கிடைக்கக்கூடிய 25 காய்களைக் கொண்டுதான் இந்த டாஸ்க்கை ஆரம்பிச்சேன். தினமும் ஒரு காயை எடுத்துக்கிட்டேன். மொதல்ல அந்தக் காயைப் பற்றிய விளக்கம், பிறகு அந்தக் காயை வைத்து எளிதில் சமைக்கக்கூடிய ஏதாவது ஒரு டிஷ்ன்னு டாஸ்க் ஆரம்பிச்சது. அந்தக் காய்கறிகளை வைத்து நானே சமையல் செய்து அதை வீடியோவாக எடுத்தும் இன்ஸ்டாவுல போஸ்ட் பண்ணினேன்.
இந்த போஸ்ட் எல்லாத்தையும் பார்த்த நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் எனக்கு போன் பண்ணி நம்ம பாரம்பர்ய காய்கறிகள் பற்றியும், அவற்றைச் சமைக்கிற விதத்தைப் பற்றியும் கேட்கத் தொடங்கினாங்க. சிலர் தங்களுக்குத் தெரிஞ்ச காய்கறிகளோட பெயர்களைச் சொல்லி அவற்றைப் பற்றியும் எழுதச் சொன்னாங்க.
இன்னும் சிலர் தங்களோட வீட்டுல விளையுற காய்கறிகளை எடுத்துக்கொண்டு வந்தும் கொடுத்தாங்க. இப்படியே அவரைக்காய் வகைகள், கிழங்கு வகைகள், சுண்டைக்காய், வேப்பம்பூ, முருங்கைப்பூ, பிரண்டை, நெல்லிக்காய், மணித்தக்காளி, பீர்க்கங்காய், பரங்கிக்காய், சுரைக்காய், கற்றாழை, வெற்றிலை, கொய்யா இலை, கோவைக்காய், வாழைப்பூனு 100 காய்கறிகள் கிடைச்சது. மார்ச் மாதம் தொடங்குன என்னோட டாஸ்க் ஜூன் மாதம் நிறைவடைந்தது.
நிறையபேர் இன்ஸ்டா போஸ்ட் எல்லாம் பாத்துவிட்டு இந்தக் காய்கறிகள் எல்லாம் மார்க்கெட்டுகள்ல கிடைக்கிறது இல்லைன்னு சொன்னாங்க. சென்னையில் உள்ள மார்க்கெட்களிலேயே இவையெல்லாம் கிடைக்குது. நாம தேடுறது இல்லைங்குறதுதான் நிஜம்.
Also Read: கொரோனா பரவலின்போது, முட்டை, சிக்கன், மட்டன் சாப்பிடலாமா? - அசைவம் குறித்த அலர்ட்!
மார்க்கெட்டுக்கு போனாலே தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர்னு குறிப்பிட்ட காய்கறிகளை மட்டும்தான் வாங்கிட்டு வர்றோம். அவற்றைத்தான் மாற்றி மாற்றி சமைச்சும் சாப்பிடுறோம். நாம நினைச்சா வருஷம் 365 நாள்களுக்கு 365 புது காய்கறிகளைச் சமையலுக்குப் பயன்படுத்த முடியும். அவ்ளோ காய்கறிகள் இருக்கு நம்ம நாட்டுல. நாமதான் தேடி வாங்கணும். இந்தக் காய்கறிகள் மூலமாகக் கிடைக்கிற சத்துகள் ஏராளம். குழந்தைகளையும் இந்தக் காய்கறிகளைச் சாப்பிடப் பழக்கணும்.
மணித்தக்காளி, பீர்க்கங்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ, முருங்கைப்பூ, பிரண்டை எல்லாம் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுறதே இல்ல. யாருமே விரும்பி வாங்குறதே இல்லைங்குற காரணத்தால இவற்றைச் சாகுபடி செய்யுறதும் குறைஞ்சிட்டு வருது. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஒரு கட்டத்துல இந்தக் காய்கறிகள் எல்லாம் அழிஞ்சே போய்டும். அதனால நம்ம பாரம்பர்ய காய்கறிகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். கொரோனா பிரச்னை, லாக்டௌன் எல்லாம் முடிஞ்சு, ஓரளவு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு இந்த பாரம்பர்ய காய்கறிகள் பற்றிய விழிப்புணர்வைத் தமிழக மக்கள் அனைவரிடமும் பெரிய அளவில் எடுத்துச்செல்ல முயல்வேன்" என்கிறார் ஆகாஷ் முரளிதரன்.
source https://www.vikatan.com/health/food/meet-aakash-a-youngster-who-introduced-100-rare-native-vegetables-in-instagram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக