Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

``நாலு பனைமரத்தை நட்டுட்டுப் போங்க... உங்க சந்ததி நல்லா இருக்கும்!'' - `பனை' பாண்டியன்

``என்னோட பனங்காட்டுக்குள்ள இருக்க ஒவ்வொரு பனையும் எனக்கு எங்க ஆத்தா மாதிரிங்க. 90 வருஷமா எங்களுக்காக உழைச்சுருக்கு. இன்னும் ரெண்டு தலைமுறைக்கு எங்க புள்ள குட்டிகளோட இருக்கும். எங்க சந்ததிக்கு நாங்க சேர்த்து வைக்கிற சொத்துனா அது பனைமரங்கள்தான். `புள்ளைங்க காப்பத்தலனாலும், பனை காப்பாத்தும்'னு ஒரு பழமொழி சொல்லுவாக. ஆனா இன்னைக்கு பனை மரத்தைக் காப்பத்தவே யாரும் இல்ல" - பனை மரத்தைக் கட்டியணைத்தபடி பேசத் தொடங்கினார் பாண்டியன். விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூரில் பனை மரங்களைப் பராமரித்து, அதன் பலனை அனுபவித்து வருகிறார்.

பனை மரங்கள்

``விவசாயிகள், விவசாயம்னு எல்லாரும் பேசுறாங்க. அப்படி பேசுறது இப்ப ஒரு பேஃஷன் ஆகிப்போச்சு. ஆனா, விவசாயிகளோட நிலையைத் தெரிஞ்சுக்க விவசாயிகளோட குடிசையில வந்து ஒரு நாள் வாழ்ந்து பாருங்க. அப்பத்தான் பேசுறத நிறுத்திட்டு ஏதாவது செய்ய ஆரம்பிப்பீங்க. விவசாயிகளோட குடும்பம் என்னைக்குமே முழுசா வயிறு நிரம்பி படுத்ததே இல்ல. அரை வயிறும், கால் வயிறும்தான். இப்பக்கூட எங்க மண்ணு எங்கள ஏமாத்துச்சுனு சொல்ல மாட்டேன். மனுஷங்கதான் எங்க மண்ணை மலடாக்கிட்டு இருக்காங்க. டெக்னாலஜி பத்திப் பேசுறவங்ககிட்ட மண்ணோட மகத்துவத்தைப் புரியவைக்க விவசாயிக போராடிட்டு இருக்கோம்.

பொட்டல் காடா இருக்க இந்த இடத்துல சில வருஷத்துக்கு முன்னாடி திரும்புன திசையெல்லாம் பனைமரம் இருக்கும். சிலு சிலுனு காத்து, `ஓ'ன்னு ஒலிக்கிற சத்தம், பசங்களோட ஆர்ப்பாட்டம்னு பாசமும் இயற்கையும் நிறைஞ்சு வழிஞ்ச இடம் இது. பாத்துக்க ஆள் இல்லாம இங்க இருந்த நூற்றுக்கணக்கான மரத்தை வெட்டிட்டாங்க. ஊரும் வெறிச்சோடி கிடக்கு.

டாஸ்மாக் வருமானத்துக்காக அரசாங்கம் முதல்ல கைவெச்சது பனை மரத்துலதான். கள்ளு இறக்கத் தடை விதிச்சாங்க. அப்பவே பனைத் தொழில் அழிய ஆரம்பிச்சுது. பனை நம்ம பாரம்பர்யம் மட்டும் இல்ல. ஆரோக்கியமும்கூட. குளுளுனு தொண்டையில இறங்குற கூல்ட்ரிங்க்ஸோட பதநீரால் போட்டி போட முடியல. ஆரோக்கியம் நிறைஞ்ச கருப்பட்டி தொழில், பிரம்மாண்டமா எழுந்த சர்க்கரை ஆலைகளோட போட்டி போட முடியல. சத்து நிறைஞ்ச பனங்கிழங்கால் சத்துமாவு நிறுவனத்துக்கு ஈடு கொடுக்க முடியல. ஒரு கட்டத்துக்கு மேல போராட முடியாம எங்க ஜனங்க இந்தத் தொழிலை விட்டுட்டு வேற தொழிலுக்குப் போக ஆரம்பிச்சாங்க.

குழந்தைகளோட பசிக்கு முன்னாடி பாரம்பர்யத்தைப் பத்தி யோசிக்க முடியல. ஐம்பதுக்கும் நூறுக்கும் மரத்தை வித்தாங்க. 200 வருஷம் கம்பீரமா நின்ன மரத்தை வெட்டுறதைப் பார்க்கும் போது மனசு நொறுங்கிப் போயிடுது. ஆனா, இதுதான் எங்க தலை எழுத்து. பனை நம்ம மாநில மரம். அதுக்கான எந்த மரியாதையாவது பனைக்கும், பனை சார்ந்த தொழில் செய்றவங்களுக்கும் இருக்கா சொல்லுங்க. இதுதாங்க தமிழ்நாட்டோட தலை எழுத்து. பனை மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரம்பர்யமும் அழிஞ்சாகூட இங்க இருக்கவங்க அதைப் பத்தி கவலைப்பட மாட்டாங்க. அதுக்குதான் நவீனம், உலகமயமாக்கல்னு ஏகப்பட்ட பேரு வெச்சுக்கிறாங்களே" - பாண்டியன் வார்த்தைகளில் உண்மையான கோபம் எதிரொலிக்கிறது.

பாண்டியன்

சிறிய அமைதிக்குப் பிறகு பேசியவர், ``எங்ககிட்ட ஒன்றரை எக்கர் நிலத்துல 130 பனை மரங்கள் இருக்கு. அந்தக் காலத்துல எங்க அப்பாவும் தாத்தாவும் மரம் ஏறி கள்ளு இறக்குவாங்க. அப்படி கள்ளு இறக்குனதுக்கு போலீஸ்காரங்க அப்பாவையும் தாத்தாவையும் அடிச்சு இழுத்துட்டு போனாங்க. அப்ப எனக்கு வெவரம் தெரியாத வயசு. இது ஏதோ தப்பான தொழிலுனு நினைச்சுக்குவேன். எனக்கு மட்டுமில்ல... என் வயசுல இருந்த நிறைய பேரோட மனசுல அப்படிதான் பதிஞ்சுது. அதனாலயே எங்க தலைமுறையில நிறைய பேர் மரம் ஏற கத்துக்கல. பனை தொழிலை விட்டுட்டு எங்களுக்கு இருந்த நிலத்துல விவசாயம் பண்ணிட்டு இருந்தோம். சிலர் ஊரவிட்டே போயிட்டாங்க.

சில வருஷத்துக்கு முன்னாடிதான் பனையோட அருமையைப் பற்றி நம்மாழ்வார் ஐயா பேசுறதைக் கேட்டேன். அது என்னை உலுக்கிடுச்சு. மறுபடியும் பனை ஏற ஆரம்பிச்சேன். பனையோட அருமை லேட்டாதான் புரிஞ்சுது. பனையைப் பொறுத்தவரை வறண்ட நிலப் பயிர். ஆனா, ஆயிரம் அடிக்கு கீழே போயி தண்ணீரை உறிஞ்சி வெச்சுக்கும். ஒரு கிணத்தச் சுத்தி அஞ்சு பனை மரம் இருந்தா போதும் கிணத்துல தண்ணீ வத்தவே வத்தாது. வானம் பாத்த பூமியைக்கூட செழிக்க வைக்குற சக்தி பனைக்கு இருக்கு.

Also Read: பனை சீசனைப் பாதித்த ஊரடங்கு... கருப்பட்டி தேக்கத்தால் கலங்கும் உற்பத்தியாளர்கள்!

அஞ்சு சதுரடி இடத்துல, ஒரு பனை மரம் வெச்சாலே100 லிட்டர் பதநீர், ஓலைகள், தும்பு, ஈர்க்கு, கிழங்கு, நுங்குனு ஒரு வருஷத்துக்கு 40,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஆனா, காலுக்கடியில இருக்க புதையலை விட்டுட்டு உலகம் முழுக்க பிச்சை எடுத்த கதைக்கு நம்மளதான் உதாரணமா சொல்லணும். ஆனா மத்த தொழில்கள் மாதிரி உடனே லாபம் கிடைக்காது. இப்ப விதைச்சா உங்க சந்ததிங்கத்தான் பலனை அனுபவிப்பாங்க" என்ற பாண்டியன் பனை குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகிறார். அதைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

``பனையை எப்படியாவது காப்பத்தணும்னு நானும் என் நண்பர்களும் சேர்ந்து இயங்க ஆரம்பிச்சுருக்கோம். பனை ஏற, எங்க ஊரு பொண்ணுங்க, பசங்க எல்லாத்துக்கும் கத்துக்கொடுத்துக்கிட்டு இருக்கோம். வெளியூரிலிருந்து யாராவது வந்து பனை ஏற கத்துக்கணும்னு ஆசைப்பட்டா அவங்களுக்கும் கத்துக் கொடுக்குறோம். சமூகவலைதளங்களில் பனை பத்தி சின்ன வீடியோக்கள் ஷேர் பண்றோம்.

பனை ஏறும் பயிற்சி

ஒரு பனை விதை ரெண்டு ரூபாய்னு இதுவரை 20,000 விதைகளை வித்துருக்கோம். அதை வாங்குறவங்களுக்கு எப்படி விதைக்கணும், பராமரிப்புனு பனை வளர்க்கத் தேவையான எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துருவோம். பனை ஓலையில பொருள்கள் செய்யவும் குழந்தைகளுக்கு கத்துக்கொடுக்க ஆரம்பிச்சுருக்கோம். பனைத் தொழிலை விட்டுட்டு போனவங்க திரும்பி இந்தத் தொழிலுக்கு வரணும். அரசும் பனை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கணும். தமிழ் சொந்தங்கள் நினைச்சால் நிச்சயமாகப் பனைங்கிற நம்மளோட பாரம்பர்யத்தை மீட்டெடுக்க முடியும். பனை காலூன்ற உதவுங்க சாமீ... நாலு பனைமரத்தை நட்டுட்டுப் போங்க... உங்க சந்ததி நல்லா இருக்கும்." எனச் சொல்லி விடைபெற்றார் பாண்டியன்.



source https://www.vikatan.com/oddities/miscellaneous/palm-farmer-pandian-explains-benefits-of-palm-tree

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக