தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன், கார்த்திக் (வயது 30). இவர், கடந்த 2017-ம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் தேனியிலிருந்து பெரியகுளம் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்லை எறிந்து உடைத்துள்ளார். அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரைப் பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பி, பெரியகுளம் வறட்டாறு அருகே நின்றுகொண்டு, தேனி நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு அரசுப் பேருந்தின் கண்ணாடியையும் கல்லால் உடைத்துள்ளார். இது தொடர்பாக, அல்லிநகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். வழக்கு, தேனி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.
Also Read: காதலர்களைக் கொன்றவருக்குத் தூக்குத்தண்டனை! தேனி நீதிமன்றத்தின் முதல் அதிரடி தீர்ப்பு
போக்ஸோ வழக்கு:
கடந்த 2015-ம் ஆண்டு, பெரியகுளம் தென்கரை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கார்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணையின்போது ஜாமீனில் வெளியே வந்த கார்த்தி, 2017-ம் ஆண்டு, அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்துள்ளார் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், கார்த்திக் மீதான போக்ஸோ வழக்கை விசாரித்த தேனி மகிளா நீதிமன்றம், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம், கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிபதி திலகம் தனது தீர்ப்பில், சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், சிறுமியைக் கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மிரட்டியதற்காக 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ 11 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், 3 ஆண்டுகள், 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் கார்த்திக்.
இந்நிலையில், அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து, நேற்று தேனி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பளித்தார். மதுரை மத்திய சிறையில் இருந்த கார்த்திக், காணொளிக் காட்சி வாயிலாக, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ10,500 அபராதமும் விதித்த நீதிபதி, அபராதத் தொகையை கட்டத் தவறினால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். மேலும், போக்ஸோ வழக்கில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்த பிறகு, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.
Also Read: கட்டப் பஞ்சாயத்து..கடத்தல்! - தேனி பேராசிரியருக்கு 3 மாதங்களாக நடந்த கொடுமை
source https://www.vikatan.com/social-affairs/crime/bus-mirror-breaking-case-theni-court-sentenced-to-10-years-imprisonment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக