Ad

சனி, 27 ஜூன், 2020

`அறிகுறியே இல்லை!’ -கே.என்.நேரு சந்திப்பில் கலந்துகொண்ட நிருபருக்கு கொரோனா

திருச்சியில் கே.என்.நேரு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நிருபருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்சிக்காரர்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரை அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதில் பங்கேற்ற ஊடகத்துறையினரும் தி.மு.க நிர்வாகிகளும் தங்களைப் பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

கொரோனா

கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மட்டும் அதிகளவில் பாதிப்பு இருந்துவந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. கிராமப்புறங்களிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: `அன்று சிரித்தார்; இன்று முதல்வர் அலுவலகத்துக்குள்ளேயே கொரோனா!' -கே.என்.நேரு

இந்தநிலையில், நேற்று திருச்சிக்கு வந்த முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் குடிமராமத்துப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதன்பின் முக்கொம்பில் கட்டப்படும் புதிய அணை கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு சேலம் சென்றார். இதனிடையே, நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்தார். இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கும் வகையில் தில்லை நகரிலுள்ள தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் நேற்று காலை பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டம் அதிகமாக இருந்தால் கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாகத் தினசரி பத்திரிகையாளர்களைக் கூப்பிடாமல் ஒரு சில தொலைக்காட்சிகளின் நிருபர்கள் மற்றும் வீடியோகிராபர்களை மட்டுமே அழைத்து கே.என்.நேரு பேட்டி கொடுத்தார். அறை முழுவதும் ஏ.சி-யில் 45 நிமிடம் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 15-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இதில் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்த சில மணிநேரத்தில் அரசு மருத்துவமனையில் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

கொரோனா பரிசோதனை

இதுகுறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளரிடம் பேசினோம். அப்போது அவர், ``கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தொண்டை வலி வருவது போல் இருந்தது. உடனே சந்தேகத்தின் பேரில் அரசு மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்தேன். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அது சம்பந்தமான செய்திகளை எடுக்கச் செல்லவில்லை.

எனது உடம்பில் எந்தவிதமான அறிகுறியும் இல்லை. மருத்துவமனையில் என்னை பரிசோதனை செய்தவர்கள் உங்களுக்கு கொரோனா இருக்க வாய்ப்பிருக்காது என்றார்கள். அதன் காரணமாகத்தான் கே.என்.நேரு நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில்கூட கலந்துகொண்டேன். இந்நிலையில் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்தபோது எனக்கு மருத்துவமனை தரப்பிலிருந்து போன் வந்தது. உடனே நண்பர்கள் சிலரிடம் மட்டும் சொல்லிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தேன்” என்றார்.

Also Read: டாக்டர் கிருஷ்ணசாமி மனைவிக்கு கொரோனா! -சீல் வைக்கப்பட்ட கோவை மருத்துவமனை



source https://www.vikatan.com/news/tamilnadu/reporter-tested-corona-positive-after-attend-kn-nehru-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக