கொரோனா பொது முடக்கத்தால், வடமாநிலங்களில் தவித்த தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ‘சங்கமித்ரா’ சிறப்பு ரயிலில் சொந்த ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவு, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அந்த ரயில் வந்தடைந்தது. அப்போது, ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட 90-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸார் தடியடி நடத்தி, ‘இறங்கக் கூடாது’ என்று மிரட்டினர்.
‘சார், நாங்கள் வட மாநிலத்தவர்கள் இல்லை. மதுரை, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று தெரிவித்தும், ரயில்வே போலீஸார் ‘இங்கு ரயிலுக்கான நிறுத்தம்’ இல்லை என்றுகூறி லத்தியால் தாக்கி, அதே ரயிலில் தொடர்ந்து பயணப்பட வைத்தனர். சிறப்பு ரயில் இறுதியாக ஆந்திர மாநிலம் குப்பத்துக்குச் சென்று நின்றது. அதில் இருந்து இறங்கிய 93 பேரை அங்கிருந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரித்தனர்.
தமிழர்கள் என்று தெரியவந்ததால், லாரியில் ஆட்டுமந்தையைப் போல் அடைத்து தமிழக எல்லையான பச்சூரில் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளனர். அங்கிருந்து பொடி நடையாக அவர்கள் திருப்பத்தூருக்கு நடந்துவந்தனர். இதுகுறித்து, திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதிர்ந்துபோன கலெக்டர், உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.
அனைவருக்கும் தொற்று இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, மதுரை கலெக்டரிடம் விவரத்தைச் சொல்லி, 3 பேருந்துகள் மூலம் இரவோடு இரவாக 93 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார் திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள். ‘வந்தோரை வாழவைக்கும்’ தமிழகத்தில், சொந்த மக்களே அகதிகளாக ஆந்திராவுக்கு துரத்தியடிக்கப்பட்டு மீண்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/jolarpet-railway-police-who-sent-tamil-peoples-to-andhra-pradesh-who-came-in-special-train
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக