சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸாரின் தாக்குதலில் தந்தையும் மகனும் மரணமடைந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
சாத்தான்குளத்தில் இந்த வழக்கு விசாரணையை கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வரும் நிலையில், அவருக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் ஒத்துழைக்க மறுத்ததாகவும், `உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' என்று காவலர் மகாராஜன் இழிவுபடுத்தி பேசியதாகவும், மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் நேற்று புகார் அளித்தார்.
Also Read: சாத்தான்குளம்: `உழைப்பைத் தவிர வேறெதுவும் தெரியாதுண்ணே!' -உதயநிதியிடம் கலங்கிய சகோதரி
இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டு பின்பு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், மூவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இன்று காலை வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் மாஜிஸ்திரேட்டிடம் நடந்துகொண்ட விதத்துக்காக காவல்துறை தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கப்பட்டது.
மன அழுத்தத்தினால் அப்படிக் காவலர் நடந்துகொண்டதாக நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. `மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது' என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், அவமதிப்பு செய்த மூவரும் வழக்கறிஞர்கள் மூலம் தங்கள் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
``இந்த வழக்கில் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. ஜெயராஜ்-பென்னிக்ஸ் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் அவர்களுக்கு மோசமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது” என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு, சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை நெல்லை சரக ஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? எனக் கேள்வி எழுப்பியது. `சி.பி.ஐ பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
`அனைத்து காவல்துறையினரும் மோசமானவர்கள் அல்ல என்றாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகளால் இதுபோன்ற பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது’ எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஜெயராஜ்-பென்னிக்ஸ் முதல்நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து `அதனடிப்படையில் பார்க்கும்போது, சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருந்ததும், ஐ.பி.சி 302-வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யவும் முகாந்திரம் உள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சாட்சி அளிக்கையில் காவலர் ரேவதி மிகவும் அச்சமடைந்து காணப்பட்டதாக நீதித்துறை நடுவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
``பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கிக் காத்துள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை, ஒரு நொடிகூட வீணாகக் கூடாது. சி.பி.ஐ விசாரணையைத் தொடங்கும் முன் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும். நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி அனில்குமார் இன்றே விசாரணையை துவக்க வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-hc-order-on-sathankulam-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக