Ad

புதன், 3 பிப்ரவரி, 2021

'வேண்டாம் காருண்யா நகர்.. பெயரை மாற்றுங்க..' - போராட்டத்தில் குதித்த கோவை நல்லூர்வயல் மக்கள்

கோவை மாவட்டம், சிறுவாணி அருகே, மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட, நல்லூர்வயல் என்ற கிராமம் இருக்கிறது. விவசாயம் தான் அங்கு பிரதானம். கிறிஸ்துவ மதபோதகர் பால்தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம் இங்குதான் இருக்கிறது. இதுதவிர, காருண்யா மருத்துவமனை, ஜெபக்கூடம் என்று காருண்யா குழுமத்துக்கு சொந்தமாக கட்டங்களும், இடங்களும் அங்கு அதிகம் இருக்கின்றன.

காருண்யா

Also Read: ``நொய்யல் ஆற்றை அசுத்தப்படுத்துவதா?” - காருண்யா முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

நொய்யல் வழித்தட ஆக்கிரமிப்பு, யானை வழித்தட ஆக்கிரமிப்பு, பழங்குடி மக்களுக்கு எதிரான நடவடிக்கை, மதமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியது காருண்யா குழுமம். சமீபத்தில் அந்த குழுமத்தில் வருமானவரி சோதனையும் நடைபெற்றது.

இதனிடையே, நல்லூர்வயல் என்றழைக்கப்பட்ட அந்த கிராமம், நாளடைவில் காருண்யா நகர் என்று மாறியது. காவல்நிலையம், தபால்நிலையம் என்று முக்கிய அரசு அலுவலகங்களே காருண்யாநகர் பெயருக்கு மாறின. இதனால், நல்லூர்வயல் என்ற பெயர் பயன்பாட்டில் இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகும் என புகார் எழுந்தது.

நல்லூர்வயல் போராட்டம்
நல்லூர்வயல் போராட்டம்

இதையடுத்து, நல்லூர்வயல் மற்றும் மத்வராயபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், அந்தப் பகுதியை காருண்யா நகர் என்பதை மாற்றி மீண்டும் நல்லூர்வயல் என்றே அழைக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்காக, மத்வராயபுரம் தொடங்கி நல்லூர்வயல் வரை பேரணி செல்ல முடிவெடுத்து குவிந்தனர். ஆனால், போலீஸார் தடுத்ததால், சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், காருண்யா நகர் என்ற ஊர் பலகைக்கு முன்பு, நல்லூர்வயல் என்ற பலகையை வைத்துவிட்டனர். அதேபோல, கூகுள் மேப்பில், காருண்யாநகர் என்பதை நல்லூர்வயல் என்று மாற்றுவதற்கான முயற்சிகளில் அந்தப் பகுதி இளைஞர்கள் இறங்கியுள்ளனர்.

நல்லூர்வயல்

இதுகுறித்து நல்லூர்வயல் மக்கள் கூறுகையில், “1986 ஆம் ஆண்டு இங்கு காருண்யா கல்லூரி தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1990-களில் அனைத்து அரசுத் துறைகளிலும் பயன்படுத்தி வந்த நல்லூர்வயல் பெயரை, காருண்யா நகர் என்று மாற்றினர். 28-02-1992-இல் நல்லூர்வயல் அஞ்சல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு 1995-ஆம் ஆண்டு அது காருண்யா நகர் அஞ்சல் நிலையம் என்று மாற்றப்பட்டது.

அதேபோல, அரசின் பல்வேறு துறைகளிலும் நல்லூர்வயல், காருண்யா நகர் என்று மாற்றப்பட்டது. வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட அனைத்திலும் காருண்யா நகர் கொண்டுவரப்பட்டது. மேலும், பொதுத்துறை வங்கி, பி.எஸ்.என்.எல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், காவல் நிலையம், மின் வாரியம் ஆகிய அலுவலகங்கள் காருண்யா நகர் என்றே குறிப்பிட்டுள்ளனர். காருண்யா கல்லூரி நிர்வாகம், தனது பலத்தால் நல்லூர்வயல் என்னும் பூர்வீகக் கிராம பெயரை அழித்து, அவர்களின் சுயநலத்துக்காக காருண்யா நகர் என்று மாற்றியுள்ளனர்.

நல்லூர்வயல்

அதேநேரத்தில், ஊராட்சி அலுவலகங்களில் எங்கள் கிராமம் இப்போதும் நல்லூர்வயல் என்றே பதிவாகியுள்ளது. காருண்யா நகர் என்பதை, நல்லூர்வயல் என்று மாற்ற வலியுறுத்தி மத்வராயபுரம் ஊராட்சியில், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனவே, அனைத்து அரசு அட்டைகள், அரசின் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் நல்லூர்வயல் என்ற பெயரையே மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும்” என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-village-people-protest-to-change-name

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக