Ad

சனி, 10 ஏப்ரல், 2021

"ஏங்க ஓட்டு மெஷினையே உத்து பார்க்குறீங்க..?"- கிராமத்து வாக்குச்சாவடி சுவாரஸ்யங்கள் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உரிமையுள்ள ஒவ்வொரு வாக்கும் அதிகாரமாக மாறுவதே ஜனநாயகம் என்பார் அம்பேத்கர். 1919ம் ஆண்டு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் இந்தியர்களும் பங்கேற்கும் வகையில் சட்டமியற்றப்பட்டு சொத்துள்ளவர்களுக்கு மட்டும் வாக்குரிமை கொடுத்தது ஆங்கில அரசு.

சுதந்திரத்திற்கு பின் வந்த தேர்தலில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது அரசு. இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த வாக்குரிமையில் எப்போதும் நகரத்தினரை விட கிராமத்தினர் அதிகம் ஓட்டளித்தனர். அப்படி ஓட்டளிக்க வரும்போது கிராமத்து வாக்குச்சாவடிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழும். பள்ளி ஆசிரியரான நானும் எலக்‌ஷன் பணியில் ஈடுபட்டிருந்தேன். என் அனுபவத்தில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்...

Election 2021

ஓட்டுப்பதிவிற்கு முந்தையநாள்

ஒட்டுப்பதிவிற்கு முந்தைய நாள் ஊருக்குள் புதிதாக வந்த பத்து பேர் பள்ளிக்கூடத்தை பற்றி விசாரிக்கும் போதே தெரிந்து கொள்கிறார்கள்... இவர்கள் வாத்திகளாகத்தான் இருப்பார்கள் என்று!

ஆடத்தெரியாதவர்கள் அனிருத் மியூசிக்கிற்கு ஆடுவது மாதிரி, முந்தைய நாள் வாக்குப்பதிவு இயந்திரம் லாரியில் வந்த உடனேயே மதராசபட்டினத்தில 'குண்டு போடுறானு' கத்திக் கொண்டு ஓடுவது மாதிரி, ஒரு சிறுவன் ஊருக்குள் ஓடிப்போய், "பொட்டி வந்திருச்சு பொட்டி வந்திருச்சு’’ என்று சொல்லி ஓடினான்.

சிறிது நேரத்தில் சினிமாவில் வருவது போல் ஐந்தாறு பேர் வந்து "கடை இங்கதான இருக்கு’’ என்று கவுண்டமணி மாதிரி விசிட் செய்துவிட்டு போனார்கள்... கையில் துப்பாக்கியுடன் ராணுவ உடை அணிந்து வந்த வீரர்களை அதிசயமாய் பார்த்து.. "இதுல குண்டு இருக்கா, இந்த துப்பாக்கி எத்தனை ரூபாய் இருக்கும்’’ என்று அவர்களிடமே வெள்ளந்தியாய் கேட்க... அவர்கள் தமிழ்த் தெரியாமல் வெகுளியாய்ச் சிரித்தனர்.

ஓட்டுப்பதிவு நாளில் காலை ஐந்து மணிக்கே தயாராகி, செய்ய வேண்டிய பணிகளை முடித்து ஏழு மணிக்கு ரெடியானோம். காலை முதல் மாலைவரை பல்வேறு சுவாரஸ்யமான அனுபவங்கள்.

வாக்குச்சாவடியில்...

* க்ளைமாக்ஸில் வெடிகுண்டை வெடிக்கவைக்க வில்லன் சிவப்பு ஒயரை கனெக்ட் செய்வது மாதிரி எல்லா ஒயரையும் இணைத்து ஓட்டுப் போட ஆரம்பித்தால்தான் ஒரு திருப்தி வருகிறது!

* வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் பான்ட்ஸ் பவுடரில் மேக்கப் போட்டுக்கொண்டு, டரிக்கி துண்டு போட்டுக்கொண்டு ஒரு கடமைதவறாத இந்தியன் தாத்தா ஏழு மணிக்கே வந்து வாசலில் நின்றார். முதல் ஓட்டை இட்ட பெருமிதத்துடன் சென்றார்.

* சுவரில் ஓட்டு இயந்திரம் குறித்த படங்கள் இருந்தாலும், சிலர் நுழைந்தவுடன்... ஏதோ வித்தியாசமான மிருகத்தைப் பார்க்கிற மாதிரி... ஓட்டு மெஷினை வெறிக்க வெறிக்க பார்த்து விட்டு மெய்மறந்து நின்றார்கள்.

* தருமி நாகேஷ் போன்று ஆர்வக்கோளாறில் ஒருவர் எடுத்த உடனே மிஷின் பக்கம் போவார். அப்புறம் மூன்றாம் அலுவலரிடம் வருவார், அப்புறம் இரண்டாம் அலுவலரிடம் வருவார். கடைசியாக ஒன்றாம் எண் அலுவலரிடம் வருவார்.

Election 2021

* வயசான பாட்டிகள் ஏழுகடல், ஏழுமலை, தாண்டி கிளியின் உடலுக்குள் உயிர் இருப்பது மாதிரி மஞ்சள் பை அதற்குள் சுருக்குப்பை, அதற்குள் வெத்தலைப் பை, அதற்குள் பாலிதின் கவர். அதில்தான் நாம் எதிர்பார்த்த அடையாள அட்டை இருக்கும்.

* சிலர் பூத் சிலிப்பை அருகில் வந்து காண்பிக்காமல், பத்தாயிரம் வாலா பட்டாசை ஊதுபத்தியில் பத்த வைப்பது போல் எட்ட நின்றே நீட்டுவார்கள்.

* ஏஜென்ட்டிடம் போய் 'இதுக்கு ஈயம் பூசிக்குடு' என்று கேட்பது மாதிரி 'இந்த பூத்து எங்க இருக்குன்னு பார்த்துச் சொல்லு' என்று சிலர் கேட்பார்கள்.

* ஓட்டு மிஷின் உள்ளே கம்பார்ட்மென்ட்க்கு உள்ளே போய் கொத்தமல்லிபோட்டு ஆவி பிடிப்பது மாதிரி குனிந்து குனிந்து நிமிருவார்கள். பாஸ் எந்த வேட்பாளர்னு ஒரு முடிவுக்கு வாங்க!

* சிலர் ஓட்டுமெஷின் இருக்குமிடம் போய் நின்று எல்லாரையும் பாத்து சிரிப்பார்கள். ஏதோ ஒரு பட்டனை கிளிக் செய்ததும், ஸ்டார்ட் மியூசிக் டிவி ப்ரோகிராமில் ரூமுக்குள் போய் அஞ்சு லட்சம் ரூபாய் பட்டனை அழுத்திய சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரியும்.

* மிஷின் பக்கத்தில் போய் நின்று கொண்டு ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவதை போல குனிந்தவர்கள் வெளியே வர ரொம்ப நேரம் ஆகும். ஐயா என்று கூப்பிட்டால்தான் அட்டென்டன்ஸ் போடுவார்கள்.

* எந்த பூத் என்று தெரியாமல் வேறு பூத் வரிசையில் மணிக்கணக்கில் நின்று கனத்த நெஞ்சுடன் திரும்பிப் போனார் ஒருவர்.

* "ரேசன் கார்டில் பேர் இருக்கு. ஏன் ஓட்டுப் போட அனுமதிக்க மாட்டீங்களா?" என்று உரிமைப் பிரச்னை எழுப்பினார் ஒருவர்.

* தொகுதி... கூட்டணிக்கு ஒதுக்கியது கூட தெரியாமல் "இதுல எங்க சின்னம் இல்லயே.. எல்லாரும் என்னை ஏமாத்துறீங்களா?" என்று ஒரு வயதான பெண் கூக்குரல் எழுப்பினார்.

* ஆரம்பத்திலிருந்தே கடுகடு என்றுருந்தவர், "நானெல்லாம் பரம்பரை பரம்பரையா ஓட்டுப்போடறவ’’ என்று நெஞ்சை நிமிர்த்தி... கடைசிவரை முகத்தை முறைத்தப்படி வைத்துகொண்டு பூத்தை விட்டு வெளியே போனார்.

* பதினொரு ஆவணத்தையும் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு 'சிலர் எங்ககிட்டயும் சீப்பு இருக்கு நானும் சீவுவேன்' எக்ஸ்பிரஷனை முகத்தில் கூட்டினார்கள்.

* கைரேகை வைக்கும் சிலர்... ஓங்கி அழுத்தினா ஒன்றரை டன் வெயிட் என்பது மாதிரி அதிக இங்க் உள்ள பேடில் அழுத்தி புக் முழுக்க இங்க் கரை செய்தார்கள்.

Election 2021

* மை வச்ச உடனே தலையில தேய்த்துக்கொள்வதால் கேமரா முன் காட்ட மை இருக்காது. எனவே, திரும்ப ரிட்டர்ன் வந்து மை வைப்பார்கள்.

* சிலர் ஓட்டு போட்டால் அங்கயே நின்று அந்த ஓட்டெல்லாம் எங்க போகுது என்று 'கத்தி' பட விஜய் மாதிரி டேபிளுக்கு கீழ பார்ப்பார்கள்.

* மிஷினில் மேலிருந்து கீழ்வரை வேட்பாளர்கள் பெயரை படித்துவிட்டு என்னவோ பத்துமார்க் கேள்வி போல பத்து முறை யோசிப்பார்கள்.

* பலரும் மிஷினில் ஓட்டுப் போடத்தெரியாமல் தண்ணியில் விழுந்தவனை தூக்கி வந்து வயித்தை அமுக்கி தண்ணி எடுப்பது மாதிரி சிவப்பு கலர் லைட்டையே தம்கட்டி அழுத்துவார்கள். வெளியிலிருந்து நீலக்கலர் பட்டன் என்று சொன்னதும்தான் ஓட்டுப்போடுவார்கள்.

* முதல் முறை ஓட்டுப்போடும் இளைஞர்களை ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம். சூயிங்கம் மெல்வார்கள். கையெழுதுப்போடச் சொன்னால் 'எங்க' என்று வெறப்பாக கேட்டுவிட்டு பத்து வருடமாக ஓட்டுப்போட்டது மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுப்பார்கள்.

* சில பெரியவர்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோருக்கும் வாஞ்சையோடு வணக்கம் வைப்பார்கள். அந்த அன்பிலேயே நெகிழ்ந்து போகலாம்.

இவர்களின் முகங்கள் வேறு வேறாயினும் அனைவரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். எந்த ஒரு சமூக ஊடகத்திலும் இல்லாதவர்கள். தினம் ஒரு ஹேஷ்டேக் போட்டு நாடு முழுக்க ட்ரென்ட் செய்யாதவர்கள். யாரும் சரியில்லை என நினைத்து விரக்தியுடன் வீட்டில் முடங்கி இருக்காதவர்கள். மெத்த படித்தவர்கள் இவர்களிடம்தான் படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஓட்டே போடாமல் விடுமுறையை டிவி பார்த்து கழிப்பவருக்கு மத்தியில் தேர்தல் திருவிழாவில் பங்கெடுத்த உத்தமர்கள்... இவர்கள் வணங்கப்பட வேண்டியர்கள்!

உயருபவன் தன்னிலிருந்தே உயர்கிறான்

தாழ்பவன் தன்னிலிருந்தே தாழ்கிறான்

என்பது ஒரு ஜென் வரி. இது ஜனநாயக கடமையான தேர்தலில் நேர்மையாக ஓட்டளிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

அடுத்த தேர்தலில் இன்னும் ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்கச் செய்வோம். வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட!

- மணிகண்டபிரபு

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

விகடன் தேர்தல் களம் 2021

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle



source https://www.vikatan.com/government-and-politics/election/tn-election-2021-village-election-scenario-some-interesting-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக