Ad

திங்கள், 26 ஏப்ரல், 2021

தலைக்கேறிய குடி போதை; கொலையில் முடிந்த வாக்குவாதம் - அம்பத்தூரில் அதிர்ச்சி!

சென்னை அம்பத்தூரை அடுத்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திரகுமார். இவர் அதே பகுதியில் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். சத்தியேந்திரகுமாரின் உணவகத்தில் வட மாநிலங்களிலிருந்தும், நேபாளத்திலிருந்தும் சுமார் 5 இளைஞர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். உணவகத்திற்கு டீ மாஸ்டர் வேலைக்கு ஆள் இல்லாததால் உணவக உரிமையாளர் டீ மாஸ்டர் தேடி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உணவகத்தில் டீ மாஸ்டர் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். உணவகத்தில் பல மாதங்களாக வேலை பார்த்து வரும் நேபாள இளைஞர்கள் சிலர் புதிதாக வேலைக்குச் சேர்ந்த டீ மாஸ்டரை பிடிக்காமல் அவரிடம் வீண் வம்பு இழுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நபர் உணவக உரிமையாளரிடம் புகார் அளித்திருக்கிறார். அதனால், ஆத்திரமடைந்த நேபாள இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு உணவகத்தை மூடிய பிறகு மாடியில் மது அருந்திவிட்டு டீ மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது, டீ மாஸ்டருக்கும் உணவகத்தில் பணி புரிந்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் வினோத் என்பவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து நள்ளிரவு நேரத்தில் மீண்டும் உணவகத்திற்கு வந்த உரிமையாளர் சத்யேந்திரகுமார் மோதலில் ஈடுபட்ட இருவரையும் சமாதானம் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

சண்டை

அடுத்த நாள் உணவகத்தில் இருவரும் வழக்கம் போல் பணிபுரிந்திருக்கின்றனனர். காலை 11 மணியளவில் மீண்டும் டீ மாஸ்டருக்கும் நேபாள வாலிபர் வினோத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, வினோத் குடி போதையில் பணியிலிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து டீ மாஸ்டர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த வினோத், அருகிலிருந்த பிரைடு ரைஸ் கரண்டியை எடுத்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டீ மாஸ்டரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். கரண்டியால் தலையில் பலமாகத் தாக்கியதில் டீ மாஸ்டரின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உணவகத்திலேயே சரிந்து விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து உணவகத்திற்கு விரைந்த உரிமையாளர், கொலை செய்த நேபாள வாலிபரைப் பிடித்து வைத்துக்கொண்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

கொலை

சம்பவம் தொடர்பாகக் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் விரைந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட டீ மாஸ்டரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலையாளி வினோத்தைக் கைது செய்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் ஆய்வாளர் கிருபாநிதி தலைமையில் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சமையல் மாஸ்டர் வினோத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் முன்பாக டீ மாஸ்டர் ஒருவர் கரண்டியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/police-arrested-youngster-who-killed-tea-master-in-a-hotel-in-ambattur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக