Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

`ஒரே தொகுதியில் அதிக வேட்பாளர்கள்; வாக்குப்பதிவிலும் முதலிடம்!' - கரூர் நிலவரம் என்ன?

ஏற்கனவே, தமிழக அளவில், கரூர் தொகுதியில் 77 பேர்கள் போட்டியிட்டு, 'தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஒரு தொகுதியில் அதிகம் பேர் போட்டியிட்ட தொகுதி இதுதான்' என்ற பெயர் பெற்றது. இந்த நிலையில், கடந்த 6 - ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவிலும் தமிழக அளவில் கரூர் மாவட்டம் முதலிடம் பிடித்து, அசத்தியிருக்கிறது.

அரவக்குறிச்சி

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல், கடந்த 6 - ம் தேதி தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி, இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை என நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தேர்தல் நடந்து முடிந்தது. நான்கு தொகுதிகளிலும், மொத்த ஆண் வாக்காளர்கள் 4,33,016, பெண் வாக்காளர்கள் 4,66,140, மூன்றாம் பாலினத்தவர் 80 என மொத்தம் வாக்காளர்கள் 8,99,236 வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த நிலையில், விறுவிறுப்பாக நடந்த முடிந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, ஏப்ரல் 6 - ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், ஆண் வாக்காளர்கள் 3,37,389 பேர், பெண் வாக்காளர்கள் 3,87,630 பேர், மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் என மொத்தம் 7,55,034 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம்

இதனால், கரூர் மாவட்ட வாக்குப்பதிவு 83.92 சதவீத வாக்குகள் பதிவாகி, தமிழகத்தில் கரூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இல்லாத அளவுக்கு, கரூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். தமிழக அளவில் உள்ள தொகுதிகளில், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் இவ்வளவு பேர் போட்டியிட்டது கரூர் தொகுதியில் மட்டும் தான். இதனால், 'அதிகம் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி அடிப்படையில், தமிழகத்தில் கரூர் தொகுதி முதலிடம் பெற்றுள்ளது' என்று சொல்லப்பட்டது. இப்போது, வாக்குப்பதிவிலும் கரூர் மாவட்டம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

Also Read: கரூர்: வாக்களிக்க வந்த 91 வயது மூதாட்டி... கைகூப்பி வணங்கிய மாவட்ட ஆட்சியர்!

அதேபோல், அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்களும், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 26 வேட்பாளர்களும், குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் 18 வேட்பாளர்களும் என கரூர் மாவட்டத்தில், மொத்தம் 161 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தலில் தேர்தல் பணி மேற்கொள்ளும் அரசு ஊழியர் மட்டுமல்லாது, மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களும், மாலை 6மணி முதல் 7 மணி வரை வாக்குப்பதிவு செய்ய உரிய பாதுகாப்பு உடைகள் அணிந்து, வாக்களிப்பதற்கு வசதிகள் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டது.

குளித்தலை

இதனால், கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் 6 கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு, புகளூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனர். இதேபோல, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா ஒருவர் என மொத்தமாக 9 கொரோனா நோயாளிகள் வாக்களித்தனர். இப்படி, எல்லா தரப்பு வாக்காளர்களும், திரளாக வந்து வாக்களித்ததால், தமிழக அளவில் கரூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/election/karur-district-first-place-in-vote-poling

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக