கொரோனா என்ற ஒன்றையே மறந்து சமூக இடைவெளியையும் முகக் கசவத்தையும் துறந்து மக்கள் தேர்தல் பரபரப்புகளில் மூழ்கியிருக்கும் சமயத்தில் சத்தமில்லாமல் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது கொரோனா. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதையொட்டி வரும் தகவல்களும் அச்சமூட்டுகின்றன. தடுப்பூசி ஓரளவுக்குக் கைகொடுத்தாலும் மக்கள் தற்போது விழித்துக்கொள்ளவில்லையெனில் மீண்டும் நிலைமை மோசமாகும் என்று எச்சரிக்கின்றனர் பல மருத்துவ வல்லுநர்கள்.
தற்போதுள்ள சூழல் குறித்து தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் பேசினோம், ``இப்போது பரவிவரும் கொரோனா வைரஸ் இளைஞர்களை அதிகளவில் தாக்குகிறது. முன்பு வயதானவர்கள் 10 பேர் பாதிக்கப்பட்டால் இளைஞர்கள் ஒன்றிரண்டு பேர்தான் பாதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது அப்படியில்லை. வயதானவர்கள் 10 பேர் பாதிக்கப்பட்டால் ஐந்து அல்லது ஆறு இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சமமான அளவில் இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் கொரோனா தொற்றை அதி வேகமாகப் பரப்புகின்றனர். அவர்களை `Super Spreaders’ என்று அழைக்கிறோம். அவர்களுக்குப் பெரியளவில் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் அவர்களோடு தொடர்பிலிருக்கும் வயதானவர்களுக்கு ஆபத்து இருக்கிறது. கொரோனா வைரஸ் இப்போது இளைஞர்களை அதிகமாகத் தாக்குவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று, இவர்கள் மிகவும் அலட்சியமாக இருப்பது. வெளியில் செல்வதற்கான நிறைய வாய்ப்புகள் இருப்பதால் யாரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. கை கழுவுவதையும், முகக்கவசம் அணிவதையும் மக்கள் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.
இரண்டாவது, வைரஸ் வேமகாக உருமாறிக்கொண்டிருப்பது. சுமார் 200 வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள் தற்போது இந்தியாவில் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில வேரியன்ட்கள் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவுகின்றன.
என்னென்ன வகையான கொரோனா வைரஸ்கள் இப்போது பரவி வருகின்றன, அவை என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்து கின்றன என்பதை அரசாங்கம்தான் கண்டுபிடித்து நமக்குச் சொல்ல வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்தான் அதை ஆராய்ந்து சொல்வார்கள். தற்போது யு.கே வேரியன்ட் மற்றும் தென்னாப்பிரிக்கா வேரியன்ட் இந்தியாவில் பரவியிருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். வேறு என்னென்ன வேரியன்ட்கள் பரவி இருக்கின்றன என்பது முழுமையாகத் தெரியவில்லை.
Also Read: ஏன் இந்த 3 கொரோனா வேரியன்ட்கள் மட்டும் ஆபத்தானவையாக இருக்கின்றன? - விளக்கும் மருத்துவர்
பல மாநிலங்களில் தேர்தல் நடந்துகொண்டிருப்பதால் அதற்கான ஆய்வுகளைச் செய்யாமல் இருக்கிறார்களா அல்லது ஆய்வு செய்துவிட்டு முடிவுகளை வெளியிடாமல் உள்ளார்களா எனத் தெரியவில்லை. அதை ஆய்வு செய்யாமலிருந்தால் அது பிரச்னைதான். ஆய்வு செய்தால்தான் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
ஏனெனில், முன்பைவிட தற்போது கொரோனா பரவலின் வேகம் அதிகரித்திருக்கிறது. பழையபடி மருத்துவமனைகளெல்லாம் வேகமாக நிறைகின்றன. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமெனில், கொரோனா உச்சத்திலிருந்தபோதே எங்கள் மருத்துவமனையில் 45 படுக்கைகள் வைத்திருந்த நாங்கள் இப்போது 65 படுக்கைகள் வைத்திருக்கிறோம். அனைத்திலும் கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், முன்பு பரவிய கொரோனா வைரஸ் இரண்டு வாரத்திலிருந்து மூன்று வாரத்தில் அறிகுறிகளை வெளிக்காட்டும்.
ஆனால், இப்போது பரவும் கொரோனா வைரஸ் ஒரு வாரத்திலயே காட்டுகிறது. இதில் ஒரே ஆறுதல் உயிரிழப்புகள் முன்பைவிட குறைவாக இருக்கின்றன என்பது மட்டும்தான். ஆகவே, முன்பு லாக்டெளன் ஆரம்பித்த காலத்தில் நாம் எப்படிக் கட்டுப்பாட்டுடன் இருந்தோமோ அதேபோல இப்போதும் பின்பற்ற வேண்டும். அலட்சியமாகக் கடந்து சென்றால் மீண்டும் கடினமான சூழல் உருவாகக்கூட வாய்ப்பிருக்கிறது. எனவே, அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்.
அடுத்ததாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம், ``மருத்துவமனைகள் விரைவாக நிரம்பி வருவதாகச் சொல்லப்படும் தகவல் உண்மைதான். ஓமந்தூரார் மருத்துவமனையில் இடமில்லாத சூழல் நிலவுவதாகவும் எழும்பூர் கண் மருத்துவமனையில் 300 படுக்கைகள் தயார்ப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் பல இடங்களில் மருத்துவமனைகள் பழையபடி நிரம்ப ஆரம்பித்துள்ளன. அதேபோல பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.
ராமேஸ்வரம், சாத்தூர், சென்னை மேடவாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளிலெல்லாம் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக ஓரிரு தினங்களுக்கு முன்பு தகவல் வந்தது. கூடுதல் படுக்கைகள் ஒதுக்குவது, வென்டிலேட்டர் வசதிகள் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்துவது, தடுப்பூசி தடையின்றி கிடைக்கச் செய்வது ஆகிய பணிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் களைத்துப்போய்விட்டார்கள். கூடுதலாக மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/news/healthy/covid-19-situation-getting-worse-in-tamilnadu-experts-alert
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக