எரிமலை வெடித்தால் என்ன நிகழும்? மிகப் பெரும் அழிவும் சுற்றுச்சூழல் சீர்கேடும்தான் ஏற்படும். ஆனால், ஒரு எரிமலை வெடித்ததும், வெடித்த எரிமலைக் குழம்புகளே சிவலிங்கமாகவும் நந்தியாகவும் மாறிய ஒரு மலையைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா... அப்படி ஒரு அற்புதத் தலம் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டைக்கு அருகில் லாலாப்பேட்டை என்ற ஊருக்கு அருகில் அமைந்திருக்கிறது காஞ்சனகிரி. காஞ்சனகிரியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பாடல் பெற்ற திருத்தலமான திருவலம்.
அடர்ந்த செடிகொடிகளுக்கிடையில், நீண்டு வளைந்த மலைப் பாதை. மலைப் பாதையில் ஆங்கங்கே தென்பட்ட பாறைகள், அந்த மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது என்பதை நிரூபிப்பதுபோல் காணப்பட்டன.
காஞ்சனகிரியின் உச்சியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருந்த ஒரு சமவெளி உள்ளது. சமவெளியின் ஒருபுறம் பிரமாண்டமான சிவலிங்கமும், நந்தியும் அமைந்திருந்த காட்சி காண்பதற்குப் பரவசத்தை ஏற்படுத்தும். மலையில் ஓரிடத்தில் சுமார் 600 ஆண்டுகளைக் கடந்த பிரமாண்டமான ஆலமரமும், அதன் அருகில் சப்த கன்னியர் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகளும் அமைந்திருக்கின்றன.
மலையெங்கும் ஆச்சாள், செந்தூரம், சரக்கொன்றை, மயில்கொன்றை போன்ற மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. மலையின் மேல் பரந்து விரிந்த திருக்குளத்தையும், அதன் எதிரில் முருகப் பெருமானின் திருக்கோயிலையும் காணலாம். விநாயகர் மற்றும் நாகர் சிலைகளும் ஆங்கங்கே காணப்பட்டன.
மலையின் இடப்புறமாக அமைந்திருக்கும் படிகளைக் கடந்து சென்றதுமே, அதிசயக் காட்சியைக் காணலாம். ஆம். நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு சிவலிங்கங்களும், எண்ணற்ற நந்தி சிலைகளும் வரிசையாகக் காட்சி தருகின்றன. இயற்கையாகவே உருவான இந்த சிவ வடிவங்கள் காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
அவற்றின் எதிரிலேயே சுயம்புவாக எழுந்தருளிய காஞ்சனகிரீஸ்வரரும், நந்தி தேவரும் திருக்காட்சி தருகிறார்கள். அந்த இடத்தில் ஒரு சமாதியும் அமைந்திருந்தது. அது ஸ்ரீலஸ்ரீ சிவஞான சுவாமிகளின் ஜீவசமாதி என்கின்றனர் பக்தர்கள்.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, ஈசனின் அருளால் இந்த மலையைப்பற்றி அறிந்து கொண்ட மலேசியத் தொழிலதிபர் சிவஞானம், 1938-ம் ஆண்டு முதல் தனது ஆயுள், உழைப்பு, சொத்துகள் முழுவதையும் இந்த மலைக்காகவே அர்ப்பணித்து இங்கேயே வாழ்ந்தார். அவரது அர்ப்பணிப்பால்தான் நாம் இங்கே தரிசித்த முருகன் கோயில், திருக்குளம், சப்த கன்னியர், ஆஞ்சநேயர் சந்நிதி எல்லாம் உருவானது. அவரே பிற்காலத்தில் தாம் பெற்ற சித்துகளால் பலரின் கஷ்டங்களையும் போக்கி அருளிய ஶ்ரீலஶ்ரீ சிவஞான ஸ்வாமிகள் 1973-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் நாள் ஸ்வாமிகள் சிவபதம் அடைந்ததும் அவரது சிஷ்யை கெங்கம்மாள் இந்தக் கோயிலை நிர்வகிக்கத் தொடங்கினார்.
அமைதியே உருவாகக் காட்சி தரும் இந்தக் காஞ்சனகிரியின் புராணம் மிகப் பழைமையானது. கஞ்சன் எனும் அசுரன் இந்த மலையில் இருந்தபடி, திருவலநாதரைப் பிரார்த்தித்து தவமியற்றி வந்தான். வெகுகாலம் தவமிருந்தும் காட்சி தராத ஈசனிடம் கோபம் கொண்ட கஞ்சன், திருவலநாதர் அபிஷேகத்துக்குத் தீர்த்தம் எடுக்க வந்த அர்ச்சகரை அடித்து உதைத்து விரட்டி விட்டான். நாளும் தம்மை பூஜிக்கும் அர்ச்சகரை அடித்துத் துன்புறுத்திய கஞ்சனின் செயல் சிவபெருமானுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அசுரனை வதம் செய்து வரும்படி நந்திதேவருக்கு உத்தரவிட்டார்.
நந்தியெம்பெருமானும் அசுரனை 10 துண்டுகளாக்கி வீசினார். அசுரனின் எந்த உறுப்பு எங்கே விழுந்ததோ அந்த உறுப்பின் பெயரிலேயே இன்றும் அங்கு ஊர்கள் இருக்கின்றன. தெங்கால், வடகால், மணி(க்கை) யம்பட்டு, அவரக்கரை (ஈரக்குலை) லாலாபேட்டை (இதயம்) சிகைராஜபுரம் (தலை) குகையநல்லூர் (இடுப்பு), மாவேரி (மார்பு) என ஊர்கள் அமைந்துள்ளன.
வதம் செய்யப்பட்ட பிறகு, அசுரனின் ஆன்மா ஈசனிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டது. மனமிரங்கிய ஈசன், அந்த அசுரன் வேண்டியபடி தைத்திங்கள் 10-ம் நாளன்று, அசுரனின் உடல் பாகங்கள் விழுந்த அத்தனை ஊர்களுக்கும் சென்று அசுரனுக்கு திதி கொடுப்பது ஆச்சர்யமான விஷயம். கஞ்சனை அழித்துவிட்டாலும், அவனைப் போன்ற இன்னும் வேறு யாரேனும் அசுரர்கள் வந்துவிடுவார்களோ என்று நினைத்தவராக, இன்றும் திருவலம் கோயிலில் நந்தி திரும்பிப் பார்த்தபடியே அமர்ந்துள்ளது என்கிறது திருவலம் தலவரலாறு.
காஞ்சனகிரி மலையில் உள்ளது அற்புதமான மணிப்பாறை. அந்தப் பாறையைத் தட்டிப் பார்த்தால் வெண்கல மணிச் சத்தம் வெளிப்பட்டு எதிரொலித்தது. அசுரனின் கண்டப் (கழுத்து) பகுதியே இந்தப் பாறை என்று சொல்லப்படுகிறது. அந்தப் பாறையைத் தட்டினால் வெளிப்படும் வெண்கல மணிச் சத்தம், திருவலம் வில்வநாத ஈஸ்வரர் கோயிலில் கேட்கிறது என்கிறார்கள்.
கஞ்சன் தவமிருந்ததால் அவன் பெயரால் காஞ்சனகிரி என்று அழைக்கப்படும் இந்த மலையில் பௌர்ணமி, சிவராத்திரி, கார்த்திகை தீபம் போன்றவை விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. இயற்கை அழகும், ஈசனின் அருளாட்சியும் ஒருசேர விளங்கும் இந்தக் காஞ்சனகிரி காண்பவரைக் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்டது. மலைக்கோயில்களுக்குப் புகழ்பெற்ற இந்த வேலூர் மாவட்டத்தில், அமைதியாகக் காட்சி தரும் மலைக்கோயில் இது. அசுரனுக்கே இரங்கி அருள் செய்த காஞ்சனகிரீஸ்வரன் நமக்கும் நல்லாசியை வழங்கி நலமே செய்வார்.
source https://www.vikatan.com/spiritual/temples/hill-temple-for-lord-siva-in-vellore-district-kanjanagiri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக