Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

`23 வருஷமா இவங்கதான் என் உலகம்!' - நகைகளை விற்று தெரு நாய்களுகளுக்கு உணவளித்து வரும் விஜயலட்சுமி

சென்னை, நீலாங்கரையை அடுத்த சி.எல்.ஆர்.ஐ நகரில் விஜயலட்சுமி அம்மாவைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த நகரின் தெருக்களில் தினமும் இருமுறை மாலை 5 மணி மற்றும் இரவு 10 மணிக்கு, இடுப்பிலும் கைகளிலும் தூக்க முடியாமல் சாப்பாட்டுப் பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு அலைந்து திரியும் விஜயலட்சுமியை அங்கே விசித்திரமாகப் பார்ப்பவர்கள் பலர். புயலோ, மழையோ, வெள்ளமோ... கையில் சுடச் சுடக் கறி சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு `சின்னவனே... பெரியவனே...' என்று, தெருக்களில் தன் வருகைக்காகக் காத்துக் கிடக்கும் தெரு நாய்களைப் பேர் சொல்லி அழைத்து உணவளித்துப் பராமரித்து வருகிறார் 56 வயதான விஜயலட்சுமி.

வளர்ப்பு பிராணிகள் மீது அளவு கடந்த அன்பு செலுத்தும் விஜயலட்சுமி, கடந்த 23 வருடங்களாகத் தன் பகுதியில் இருக்கும் ஆதரவற்ற தெரு நாய்களுக்கு உணவளித்து அவற்றைப் பராமரித்து வருகிறார். தனது வீட்டில் மட்டும் 8 தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வரும் விஜயலட்சுமி, சி.எல்.ஆர்.ஐ நகரின் 5 தெருக்களில் மொத்தம் 100-க்கும் அதிகமான தெரு நாய்களுக்கு ஒரு நாள்கூட தவறாமல் உணவளித்து வருகிறார். நோய்வாய்ப்பட்ட கணவர் வீட்டில் இருக்க, அந்தச் சூழ்நிலையிலும் இவர் அந்தப் பிராணிகளுக்காகச் செலவிடும் பணமும் நேரமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

தெரு நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வரும் விஜயலட்சுமி

ஒரு மாலைப் பொழுதில் நாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்த விஜயலட்சுமியைச் சந்தித்துப் பேசினோம்.

``எனக்குப் பூர்வீகம் தஞ்சாவூரு. கல்யாணம் கட்டிக்கிட்டு இங்க வந்துட்டோம். இங்க நீலாங்கரையில 25 வருஷமா இருக்குறோம். என்னோட வீட்டுக்காரர் பேரு சீனிவாசன். கார் டிரைவரா இருக்குறாரு. எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஆண் குழந்தை பிறந்து 2 வருஷத்துலயே இறந்துடுச்சு. அடுத்த குழந்தை சில வருஷம் கழிச்சு தங்குச்சு. ஆனா, அதுவும் வயித்துலயே இறந்துடுச்சு. கல்யாணம் ஆகி பல வருஷமா குழந்தை இல்லாம இருந்த எங்களுக்கு அடுத்தடுத்து 2 குழந்தைங்க இறந்து போயிட்டதால வாழ்க்கையே வெறுத்துப் போயிருச்சு. இருந்தாலும், என்னோட வீட்டுக்காரருக்காக நானும் எனக்காக அவரும் வாழுறதுனு முடிவு செஞ்சோம்.

ஆரம்பத்துல இங்க நீலாங்கரைல வாடகை வீட்டுலதான் இருந்தோம். எனக்குச் சின்ன வயசுல இருந்தே வளர்ப்பு பிராணிகள் மேல கொள்ளை பிரியம். அதுலயும் நாய்னா உசுரு. எங்க வீட்டுக்காரர் காலையில வேலைக்குப் போனாருன்னா ராத்திரி 11, 12 மணிக்குதான் வருவாரு. குழந்தைங்க இல்லாத ஏக்கம், தனியா இருக்கும்போது என்னை ரொம்ப உறுத்திட்டே இருந்துச்சு. அதனால, தெருவுல திரிஞ்ச ஒரு நாய்க்குட்டிய வீட்டுக்குக் கொண்டாந்து வளர்த்தேன்.

வாடகை வீடுங்குறதால வீட்டுக்காரங்க எப்ப பார்த்தாலும் சத்தம் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அதனால, வீட்டுக்கு எடுத்து வந்த அந்தக் குட்டிய ஒரு வாரத்துலயே திரும்பவும் தெருவுல விட்டுட்டேன். அப்பதான் ஒரு யோசனை வந்துச்சு. வாடகை வீட்ல இருக்குற வரைக்கும் நம்மளால நாய் வளர்க்க முடியாது. ஆனா, தெருவுல இருக்குற ஆதரவற்ற அந்த ஜீவன்களுக்கு நிச்சயம் ஒரு வேளை உணவளிக்க முடியும்னு தோணுச்சு. அதைப் பத்தி எங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லிட்டு, அடுத்த நாளே அவங்களுக்குனு சாப்பாடு தயாரிக்க ஆரம்பிச்சேன். நாங்க சாப்பிடுறதையே அவங்களுக்கும் போடாம, அவங்களுக்குனு தனியா உணவு தயார் செஞ்சேன்.

ஆரம்பத்துல தினமும் அரை கிலோ கோழிக்கறி எடுத்து கறி சாதம் செஞ்சு தெருவுல இருக்குற நாலஞ்சு பேருக்கு போட்டேன். இன்னைக்கு ஒரு நாளைக்கு 10 கிலோ கறி சாதம் சமைக்குறேன்" என்று முகம் மலர்ந்தார்.

நாய்களை வார்த்தைக்கு வார்த்தை தனது பிள்ளைகள் என்றழைக்கும் விஜயலட்சுமி அவற்றுக்கு வழங்கும் உணவு குறித்து நம்மிடத்தில் பகிர்ந்துகொண்டார்.

``தினமும் காலையில 10 மணிக்கெல்லாம் கறி கடைக்குப் போயிடுவேன். கறி வாங்கிட்டு வந்து சுத்தம் செஞ்சு, அதுங்க எலும்புகளுக்கு வலுவூட்ட கடலை எண்ணெய், பால், தயிர், ஐயோடின் சத்துக்கு உப்பு, சீரணமாக சீரகப் பொடி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலைனு எல்லாமே பக்குவமா பார்த்து உணவு தயாரிப்பேன். தினமும், சாயங்காலம் 5 மணி ஆயிடுச்சுனா எனக்காக எல்லா பசங்களும் காத்துட்டு இருப்பாங்க. கொஞ்சம் லேட் ஆகிட்டாலும் என்னைத் தேடி வீட்டுக்கே வந்திடுவாங்க. சாயங்கால நேரத்துல கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கும். அதனால, நெறைய பசங்க பயந்துட்டு சாப்பிடவே வரமாட்டானுங்க. அதுக்காகவே மறுபடியும் ராத்திரி 10 மணிக்கு மேல கிளம்பி திரும்பவும் சாப்பாடு எடுத்துட்டுப் போவேன்.

1998-ல இந்தப் பசங்களுக்கு உணவளிக்க ஆரம்பிச்சேன். 23 வருஷமாகிடுச்சு. இப்ப வரைக்கும் மழையோ, புயலோ ஒரு நாள் கூட அவங்கள பட்டினி போட்டதில்ல.

விஜயலட்சுமி

நான் சாப்பாடு போடுறத பார்த்துட்டு பக்கத்துல இருக்குறவங்களும் எங்க தெருவுக்கு வர தொடங்கினாங்க. நெறைய பேர் வந்ததால ஒன்றரை கிலோ கறி சாதம் போதுமானதா இல்ல. அதனால, ஒன்றரை கிலோ கறி வாங்கி மூணு கிலோ சாதம் செஞ்சு கொண்டு போய் பிள்ளைங்களுக்குப் போட்டேன்.

ஆரம்பத்துல தெருவாசிங்க எல்லாம் என்னை ஏதோ பைத்தியம் போல பார்த்தாங்க. இப்பவும் பல பேர் அப்படிதான் பார்க்குறாங்க. அதைப் பத்தி எனக்குக் கவலையில்ல. ரெண்டு பிள்ளைங்கள பறிகொடுத்துட்டு தவிச்சிட்டு இருந்த எனக்கு, அந்த ஜீவனுங்க கிட்ட பழகுறதும், உணவளிக்குறதும் ரொம்ப மன நிறைவா இருந்துச்சு. மூணு வருஷமா, ரெண்டு தெரு முழுக்க இருக்குற பசங்களுக்கு உணவு அளிச்சுக்கிட்டு இருந்தேன். நான் சாப்பாட்டுப் பாத்திரத்தை எடுத்துட்டு ரோட்டுக்கு வந்தாலே, மக்கள் என்கிட்ட சண்டைக்கு வந்திடுவாங்க. எங்கேயுமே சாப்பாடு வைக்க விடமாட்டாங்க.

பிறகு, அதே பகுதியிலேயே சொந்த வீடு கட்டிட்டுக் குடியேறினோம். சொந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் ஒரு துணிச்சல் வந்துச்சு. நம்ம வீடு, யார் நம்மளக் கேட்பாங்கனு தெருவுல அனாதரவா இருந்த 3 நாய்குட்டிகளை எடுத்துட்டு வந்து வளர்த்தோம். அதுங்க எங்க மேல ரொம்ப பாசமா இருந்துச்சுங்க. அதுங்களுக்கு பேர் வெச்சு பிள்ளைங்கள போல வளர்த்துட்டு இருந்தோம். அந்த நேரத்துல நானும் நெறைய வியாபாரம் செஞ்சுட்டு இருந்தேன். அதனால, கொஞ்சம் வருமானம் நல்லாவே கெடச்சுது.

அதுல 3 கிலோ கறி சாதத்தை 5 கிலோவா ஆக்கினோம். வெறுமனே, சாப்பாடு மட்டும் போடாம தெருவுல இருக்குற பிள்ளைங்க எல்லாருக்கும் ஊசி போட்டு, மாத்திரை மருந்து எல்லாம் முறையா கொடுத்துப் பராமரிக்கத் தொடங்கினேன். அப்போ, வீட்ல வளர்த்துட்டு இருந்த மூணு பசங்கள்ல மூத்தவன் உடம்பு சரியில்லாம சாவக் கிடக்க ஆயிட்டான். பதறி போயிட்டு, அவன ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். அவனை காப்பாத்துறதுக்கு கழுத்துல இருந்த நகையெல்லாம் வித்து 1,20,000 செலவு செஞ்சேன். இதைச் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. ஆனா உண்மை. கொஞ்ச நாள் உயிரோட இருந்தான், அப்புறம் இறந்துட்டான்.

தெரு நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வரும் விஜயலட்சுமி

Also Read: `5 மணிக்கு அலாரம் வச்ச மாதிரி வந்துடுவாங்க!' - தினமும் 1000 கிளிகளுக்கு உணவளிக்கும் தம்பதி

அவனோட இழப்பை எங்களால கொஞ்சமும் தாங்க முடியல. அவனுக்கு உடம்பு முழுக்க மஞ்சள் தடவி, குங்குமம் வெச்சு, பூ, ஊதுவத்தி எல்லாம் வெச்சி வீட்டிலேயே சமாதி எழுப்பினோம். அவனோட போட்டோவ வீட்டு பூஜையறையில வெச்சு சாமியா கும்பிட்டுட்டு இருக்குறோம்" என்றார் கண்களை கசக்கியபடி.

``அவனுக்குப் பிறகு, இறந்த எல்லா பசங்க போட்டோவையும் எங்க வீட்டு பூஜை அறையில வெச்சுருக்கோம். எங்க கூட, எங்களுக்காகவே இருந்து உயிர விட்ட அந்த ஜீவனுங்கதான் எங்களுக்கு முதல் சாமி. இதுங்களதான் நாங்க கும்பிட்டுட்டு இருக்குறோம். அப்படியே தெருவுல இருந்த நாய்களோட எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சிட்டே வந்தது. இப்ப 100 பிள்ளைங்ககிட்ட நான் பாத்துக்குறேன்.

3 கிலோ, 5 கிலோனு கொஞ்சம் கொஞ்சமா அதிகப்படுத்தி இப்ப 10 கிலோ கறி சாதம் அவங்களுக்காக தினமும் தயார் செஞ்சுட்டு இருக்கேன். இப்ப எங்க வீட்ல 10 பசங்க இருக்காங்க. அவங்க இல்லாம தெருவுல என்ன நம்பி 100 பேர் இருக்காங்க. ஆனா, இப்பவும் இந்த ஜீவன்களுக்கு சாப்பாடு போட விடாம நெறைய பேர் தடுக்குறாங்க. ஞாயிற்றுக்கிழமைகள்ல திருவிழா மாதிரி கறி, மீன் செஞ்சு சாப்பிடுற ஜனங்க எலும்புத்துண்ட கூட இந்த ஜீவனுங்களுக்குப் போட மாட்றாங்க. அவங்களும் போடாம, என்ன மாதிரி உணவளிக்குறவங்களையும் தடுக்குறதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு" என்றார் மிகுந்த ஆதங்கத்துடன்.

Also Read: ``நாய்களைப் பார்த்தால்தான் எனக்கு உயிரே வரும்!" - ஐ.டி ஊழியரின் நாட்டு நாய் வளர்ப்பு

மாலை 5 மணி ஆகிவிட்டதும் விஜயலட்சுமியின் வருகைக்காக காத்துக் கிடக்கும் நாய்கள் அவரை பார்த்ததும் ஓடிச் சென்று நாக்கால் நக்கி ஆனந்த பூரிப்புடன் அவரை சுற்றி வருகின்றன. நாய்களுக்கு உணவு மற்றும் மருந்து மாத்திரைகளுக்கான செலவு மட்டும் மாதம் 20,000-ஐ தாண்டும் நிலையில், விஜயலட்சுமியின் கணவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் போய் விடவே குடும்பத்தின் வருமானம் பூஜ்ஜியமாகிவிட்டது. தன்னை நம்பி சி.எல்.ஆர்.ஐ நகரின் தெருக்களில் முகாமிட்டிருக்கும் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவில்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காகத் தனது நகைகளை விற்று தற்போது அந்த ஜீவன்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் விஜயலட்சுமி, நாய்களுக்குத் தொடர்ந்து தொய்வின்றி உணவளித்திட மற்றவர்களின் உதவியை நாடிக் கொண்டிருக்கிறார்.

தொடர்புக்கு விஜயலட்சுமியின் அலைபேசி எண்: 90031 41842



source https://www.vikatan.com/news/tamilnadu/meet-vijayalakshmi-a-woman-who-feeds-for-stray-dogs-over-23-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக