Ad

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை! - வியாபாரிகள் தொடர் போராட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு நேற்று (8.4.2021) பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உத்தரவிட்டது. அதில், திரையரங்குகள், ஷாப்பிங்மால் உள்ளிட்ட பெரு வணிக வளாகங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி, கோயில், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் போன்ற பல முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நாளை (10.4.2021) முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.

கோயம்பேடு

குறிப்பாக, சென்னை கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசின் இந்த தீர்ப்பால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும், இந்த உத்தரவை மறுபரிசீனை செய்யவேண்டும் என்று கூறி கோயம்பேடு சில்லரை வியாபாரிகள், பணியாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் என அனைவரும் கோயம்பேடு வணிக வளாக அலுவலகத்தை (சி.எம்.டி.ஏ) முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவிவந்ததையடுத்து நாடுமுழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சிறு வியாபாரிகள் பொருளாதார ரீதியில் பெருமளவு பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில், குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தை முற்றிலுமாக மூடப்பட்டது. பின்னர் கொரோனா தீவிரம் குறைந்த வந்த நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு 8 மாதங்கள் கழித்துதான் முழுமையாக திறந்துவிடப்பட்டது.

கோயம்பேடு

சுமார் 1,800-க்கும் மேற்பட்ட சிறியரக காய்கறி கடைகள், 850-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் என நிரம்பியிருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் 2,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தொழில்செய்து வருகின்றனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தொழிலாளர்கள் என இத்தொழிலை சார்ந்து வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், அரசின் இந்த அறிவிப்பால் கொதிப்படைந்த அவர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இன்று காலையிலிருந்து போராட்டம் செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறி வியாபாரிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

கோயம்பேடு

முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், இன்று மாலை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளின் இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, சிறு மொத்த வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/small-scale-vegetable-vendors-protest-against-government-decision-to-close-market

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக