Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

"ஸ்மார்ட் போன் தயாரிப்பிலிருந்து முழுவதுமாக விலகுகிறோம்!"- அதிகாரப்பூர்வமாக அறிவித்த எல்.ஜி

ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து தங்கள் நிறுவனம் வெளியேறுவது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது எல்.ஜி. நிறுவனம்.

கடந்த சில மாதங்களாகவே எல்.ஜி. நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையை விட்டு விலகப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். 2013-ல் உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. தற்போது சந்தையில் இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் எல்.ஜி. இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் தெரிவிக்கையில், கடந்த பல வருடங்களாகவே தங்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்புத் துறை இழப்பையே சந்தித்து வந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் தெரிவிக்கையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பை நிறுத்துவதன் மூலம் தங்களால் எல்.ஜி.யின் மற்ற தயாரிப்புகளான மின்சார வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட்ஹோம் தயாரிப்புகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளது.

எல்.ஜி

Also Read: ஸ்மார்ட் டிவியை ஸ்மார்ட்டா தேர்ந்தெடுங்க! - கேட்ஜெட்ஸ்... டிஜிட்டல் உலகம் -

தற்போது உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் எல்.ஜி.யின் பங்கு 2 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு 23 மில்லியன் போன்களை விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். இதே நேரத்தில் கடந்த ஆண்டு சாம்சங் 256 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. உலகளவில் எல்.ஜி.யின் ஸ்மார்ட்போன்கள் பெரியளவில் விற்பனையாகவில்லை, எனினும் வட அமெரிக்காவில் 10 சதவிகித பங்குகளுடன் ஆப்பிள் மற்றும் சாம்சங்கைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் எல்.ஜி நிறுவனமே இருக்கிறது. வட அமெரிக்காவைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்காவிலும் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது எல்.ஜி.

LG

வரும் ஜூலை 31 முதல் எல்.ஜி ஸ்மார்ட்போன் துறை முழுவதுமாக மூடப்படும் எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். ஸ்மார்ட்போன் துறையில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும், பயன்பாட்டில் இருக்கும் எல்.ஜி போன்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை 'சாப்ட்வேர் அப்டேட்' வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொபைல் போன் தயாரிப்பில் முன்னர் ஜாம்பவான்களாக இருந்த நோக்கியா, ஹெச்.டி.சி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற பல நிறுவனங்கள் தற்போது இருக்கும் கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் கடும் இழப்புகளைச் சந்தித்து வந்தாலும், ஸ்மார்ட்போன் தயாரிப்பிலிருந்து முழுமையாக விலகும் முடிவை எல்.ஜி. நிறுவனமே முதலில் எடுத்திருக்கிறது.



source https://www.vikatan.com/business/tech-news/lg-withdraws-from-the-smartphone-market

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக