கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சேது பார்வதி பாய் என்ற பெண்மணிக்கு சொந்தமான இடத்தில் கடைகள் உள்ளன. நாகர்கோவிலைச் சேர்ந்த வயதான பெண்மணியான சேதுபார்வதிபாய்-க்கு கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அடிக்கடி உதவிவந்தார். அந்த சமயத்தில் ராஜ்குமார் தன்னை நல்லவர்போல் காட்டியுள்ளார். இதனால் சேதுபார்வதிபாய் தனக்கு சொந்தமான கடைகளை ராஜ்குமாருக்கு ஒருவருடத்துக்கு ஒத்திக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகுதான் ராஜ்குமாரின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. ஒருவருடத்துக்கு ஒத்திக்கு கொடுத்த கடைகளை 50 ரூபாய் பத்திரம் மூலம் பத்து வருடத்திற்கு ஒத்திக்கு கொடுத்ததுபோல் போலி பத்திரம் தயாரித்துள்ளார். அதை சேது பார்வதி பாய்-க்கு தெரியாமல் பதிவும் செய்துள்ளார்.
மேலும் அந்த கடைகளுக்கு செலுத்த வேண்டிய வடகையை சில மாதங்கள் கொடுக்காமல் சேதுபார்பதிபாயை ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து வாடகை கிடைக்காததால் சேது பார்வதிபாய் வாடகை கேட்டு ராஜ்குமாரை பார்க்க சென்றுள்ளார். ஆனால் ராஜ்குமார் வாடகை கொடுக்காமல் தெனாவெட்டாக பேசியதுடன் பத்து வருடத்துக்கு ஒத்திக்கு கொடுத்துள்ளதாக கூறி அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தனது கடைகளை அபகரிக்க ராஜ்குமார் திட்டம் தீட்டுவதை உணர்ந்துகொண்ட சேதுபார்வதிபாய் அவரிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் சேது பார்வதிபாய் புகார் அளித்திருக்கிறார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் காலம்தாழ்த்தி வந்ததக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஜ்குமார் திருநெல்வேலியில் இருந்து ரெளடி ரஞ்சித் என்பவர் மூலம் கடை உரிமையாளர் சேது பார்வதி பாயிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அந்த பேச்சுவார்த்தையில் 12 லட்சம் ரூபாய் கொடுத்தால் கடையை காலிசெய்து கொடுப்பதாக ரெளடி மூலம் டீல் பேசியிருக்கிறார்கள். அதற்கு சேதுபார்வதிபாய் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து கூலிப்படையை சேர்ந்த ரஞ்சித் மற்றும் தனவு, சதன், விஷ்ணு மற்றும் சில ரெளடிகள் உடன் செல்ல ராஜ்குமார் நேற்று முன் தினம் இரவு சேது பார்வதி பாய் வீட்டுக்கு சென்று 12 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். பணத்தை வாங்கிய ராஜ்குமார் கூலிப்படையினருக்க்கு ஏற்கனவே பேசிய இரண்டு லட்சம் ரூபாயை கொடுக்காமல், ஒரு லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கூலிப்படையினர் ராஜ்குமாரை மிரட்டி காரில் ஏற்றி, நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி சென்றுள்ளனர். கார் நாகர்கோவிலை தாண்டி வெள்ளமடம் பகுதியில் செல்லும்போது ராஜ்குமார் பேசிய தொகையின் பாக்கியை தருவதாக கூறியுள்ளார். இதனால் காரை வெள்ளமடத்தில் நிறுத்தியுள்ளனர். ராஜ்குமார் தனது நண்பரிடம் பணம் கொண்டுவரும்படி கூறியுள்ளார். பணம் கொண்டுவந்த அவரது நண்பர் கூடவே போலீஸையும் அழைத்துவந்திருக்கிறார். போலீஸார் அங்கு சென்று ரஞ்சித், சதன், விஷ்ணு, தனவு ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் ராஜ்குமார் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியிருக்கிறார். இதுகுறித்து கோட்டாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலிப்படை ஏற்பாடு செய்தவரையே கூலிப்படையினர் கடத்திய சமவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/news/crime/rowdies-kidnapped-the-man-who-brought-them-to-threat-old-lady
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக