மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என்று மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே முதல்வராக இருக்கிறார். உத்தவ்தாக்கரே முதல்வராக இருப்பதற்கு சரத்பவார்தான் முக்கிய காரணமாகும். இதனால் சிவசேனா எப்போதும் சரத்பவார் கட்சியுடன் மோதுவதில்லை. ஆனால் அடிக்கடி காங்கிரஸ் கட்சியுடன் மோதிக்கொண்டிருக்கிறது. ஔரங்காபாத் உட்பட முஸ்லிம் பெயர்களில் இருக்கும் நகரங்களின் பெயரை மாற்றுவது உட்பட பல பிரச்னையில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா மோதிக்கொண்டுள்ளது.
சரத்பவார் தான் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத், அடிக்கடி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத்பவார் தலைமை தாங்கவேண்டும் என்று கூறி வந்தார். இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதையடுத்து இதற்கு விளக்கம் அளித்துள்ள சஞ்சய், ``தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேருவது அவசியம். அதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை மாற்றிவிட்டு சரத்பவாரை நியமிக்கவேண்டும் என்று சொல்லவில்லை. எதிர்க்கட்சி கூட்டணியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றுதான் சொல்கிறேன். சோனியா காந்தியையோ அல்லது ராகுல் காந்தியையோ விமர்சிக்கவில்லை.
உண்மையில், அவர்களை அரசியல் எதிரிகள் விமர்சனம் செய்தால் அவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடியவன் நான்” என்றார். மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாநில உள்துறை அமைச்சரானது ஒரு விபத்து என்று தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, ``சில நேரங்களில் ஏற்படும் விபத்து மற்றொருவருக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விடுகிறது” என்றார். சஞ்சய் ராவுத்தின் இக்கருத்தை விமர்சித்த மாநில துணைமுதல்வர் அஜித் பவார், `கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
அஜித் பவாரின் இந்த கருத்து குறித்து சஞ்சய் ராவுத்திடம் கேட்டதற்கு, ``அதிகாலையில் பதவியேற்றவர்களால்தான் குழப்பம் ஏற்படும்” என்று தெரிவித்தார். அஜித் பவார் கடந்த 2019ம் ஆண்டு திடீரென அதிகாலையில் பாஜக-வுடன் கூட்டணி ஆட்சியமைத்து ஆட்சி அமைக்க உதவினார். அஜித்பவார் துணைமுதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால் இந்த பதவி வெறும் 80 மணி நேரம் மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்சி தொடர போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
அஜித்பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வந்து துணை முதல்வராகிவிட்டார். அதேசமயம் 80 மணி நேரம் பதவியில் இருந்த போது தன் மீது இருந்த ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்ய வைத்துக்கொண்டார் அஜித்பவார். தற்போது பாஜக எப்படியாவது சிவசேனா தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக சமீபத்தில் சரத்பவாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியதாக செய்தி வெளியானது. இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுத்துள்ள போதிலும், இச்சந்திப்பின் போது சரத்பவாருக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. அதற்கு சம்மதிக்கும்பட்சத்தில் மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்கும். ஆனால் இந்த வாய்ப்பை சரத்பவார் ஏற்றுக்கொண்டாரா என்று தெரியவில்லை.
source https://www.vikatan.com/news/politics/shiv-sena-calls-sharad-pawar-to-lead-opposition-alliance-bjp-pulling-in-the-name-of-president
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக