மனித குலத்தின் ஆரம்பத்தில் வேட்டை சமூகத்தை வழிநடத்தியது பெண் சமூகம். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தன் உரிமைகளை இழந்து, ஒடுக்கப்பட்டு வந்தது பெண் சமூகம். இப்போது 21-ம் நூற்றாண்டில் பெண்களின் உரிமைக்குரல்கள் மீண்டும் எழுந்துவருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் நீதித் துறையில் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.
நீதித் துறையில் பெண்களுக்கான பகிர்வு உரிமையை பெறும் வகையில், உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் (SCWLA - Supreme Court Women Lawyers Association) சேர்ந்த பெண்கள், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிசெய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை நியமிக்கப்பட்டுள்ள 247 நீதிபதிகளில் 8 பேர் மட்டுமே பெண்கள் என்னும் கவலைக்குரிய நிலை உள்ளது. வழக்கறிஞர் ஸ்னேகா கலிதா மூலம் SCWLA பதிந்த வழக்கு விண்ணப்பத்தில், இதுவரை நீதிபதியாக இருந்த பெண்களின் விவரம் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் 25 உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான காலியிடங்கள் குறித்து பரிசீலிக்கும் தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே தலைமையிலான அமர்வில், இந்த விண்ணப்பத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என SCWLA சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீதிபதிகளுக்கான 1,080 பணியிடங்களில் 661 நீதிபதிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் 73 பெண் நீதிபதிகளே உள்ளனர். அதாவது, வெறும் 11.04% மட்டுமே. SCWLA மனுவில், இன்றுவரை உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக இருந்த எட்டு பெண்களின் விவரங்களை தெரிவித்து, தற்போது இந்திரா பானர்ஜி மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் ஒரே பெண் நீதிபதி என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் பெண் வழக்கறிஞர்கள், நிரப்பப்படவுள்ள நீதிபதி பணியிடங்களுக்குப் பரிசீலிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், பெண் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற அமர்வுகளில் தகுதியான பெண் நீதிபதிகளை அமர்த்தும் நடவடிக்கையை நீதித்துறை அமைச்சக செயலாளர் துரிதப்படுத்த வேண்டும் எனவும் இந்தப் பெண் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பாலின சமத்துவம் குறித்து அம்மனுவில், `நீதித் துறையில் பெண்களின் பகிர்வு, சமூக முன்னேற்றத்திற்கும் பாலின சமத்துவதிற்கும் வழிவகுக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
`பெண்களின் பங்களிப்பு நீதி வழங்கும் துறையில் அதிகரித்தால் பாலியல் வழக்குகள் தீர்க்கமாக அணுகப்படும்' என்ற அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபாலின் உரையை மனுவில் மேற்கோள் காட்டியுள்ளனர்.
நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை குறைக்க தற்காலிக நீதிபதிகளை நியமிக்க பரிசீலிப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. `நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவது கவலை அளிப்பதாக ஜனவரி 27-ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. நீதிபதிகள் நியமனம் குறித்த 189 கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஜனநாயகத்தின் ஆணிவேரான நீதித்துறையின் நிலையும், அதில் பெண்களின் நிலையும் மொத்த ஜனநாயகத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மத்திய அரசு விரைந்து நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது' என்ற குரல்கள் எழுந்துள்ளன.
source https://www.vikatan.com/social-affairs/women/scwla-seeks-more-representation-for-women-in-high-courts-and-supreme-court
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக