Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

`ரூ.39 கோடி இழப்பீடு?’ - ஆட்சியர் அலுவலக சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவு! - விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் எம்.சண்முக உடையார். அவருடைய மகன் எஸ்.சிவானந்தம். விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் இவர்களுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலம் 1991-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய துறையின் சார்பில் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்திற்காக குறைந்தபட்ச விலை மட்டுமே சிவானந்தத்திடம் கொடுத்துள்ளது வீட்டு வசதி வாரியம்.

நீதிமன்ற ஊழியர்களுடன் சிவானந்தம்.

அத்தொகை மிகவும் குறைவு என்பதினால் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் சிவானந்தம் வழக்கு தொடர்ந்துள்ளார். பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி மோனிகா, 'சிவானந்தம் என்பவருக்கு சொந்தமான இடத்திற்கான தொகை 39,36,59,337 ரூபாயை சிவானந்ததிடம் வழங்கக்கோரி உத்தரவிட்டிருந்தார். அந்த தொகையை பெறுவதற்காக இவர் தொடர்ந்து வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகளை அணுகி வந்துள்ளார். இருப்பினும் தனக்கு வழங்க வேண்டிய தொகையை தராமல் அரசு அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்ததினால், 'உரிய தொகையை பெற்றுத் தரும்படி' விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு மேல்முறையீடு செய்துள்ளார் சிவானந்தம்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன்,

'சிவானந்தத்திற்கு உரிய தொகையை வழங்க வேண்டும். அப்படி இல்லையெனில், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கார்கள் உட்பட அனைத்து அசையா சொத்துக்களும், விழுப்புரம் வீட்டு வசதி வாரிய பிரிவின் நிர்வாக அதிகாரி மற்றும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அசையும் சொத்துக்களையும் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்." என கடந்த 24.03.2021 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (06.04.2021) சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதோடு சேர்த்து, வீட்டு வசதி வாரியம் தொகையை திருப்பி தருவதற்கான காலக்கெடுவும் அண்மையில் முடிவடைந்துள்ளது.

சிவானந்தம் ஆட்சியரகம் கொண்டுவந்த ஜப்தி செய்வதற்கான தாள்.

இந்நிலையில், நேற்று முந்தினம் (07.04.2021) காலை ஜப்தி செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு ஆணையின் நகல் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார் சிவானந்தம். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அச்சமயம் அங்கு இல்லாத காரணத்தினால் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகனிடம் நீதிமன்ற உத்தரவு ஆணையை அளித்தனர். 'அந்த இடத்திற்கான முழுத் தொகையை கொடுத்து விடுகிறோம். இதற்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்' என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை எழுத்து மூலமாக அளிக்கும்படி கேட்டுக் கொண்ட நீதிமன்ற ஊழியர்கள், இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை 02.06.2021 அன்று நடைபெற உள்ளதால், உரிய தொகையை அந்த தேதிக்குள் தரும்படி அவகாசம் வழங்கி சென்றுள்ளனர். இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/villupuram-court-action-against-collector-office-in-compensation-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக