நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் கொட்டித்தீர்த்த பெருமழையில் பல இடங்களில் விளைநிலங்களும், குடியிருப்புகளும் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் ஆயிரக்கணக்கான யூகலிப்டஸ் மரங்கள் பெயர்ந்து விழுந்ததில் உயிரிழப்புகளும், பொருள் சேதமும் ஏற்பட்டன. சுமார் ஆயிரம் பேர் மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது கடந்த மூன்று நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக இடைவிடாமல் பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. இந்த மழை காரணமாக கடுமையான குளிரும் நிலவிவருகிறது. காற்றால் பல இடங்களில் யூகலிப்டஸ், பைன் மரங்கள் ஆகியவை பெயர்ந்து விழுந்திருக்கின்றன.
மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததில் பல கிராமங்கள் இருளில் மூழ்கியிருக்கின்றன. இதேபோல் ஊட்டி அருகிலுள்ள வி.சி.காலனி பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீட்டிலிருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். வீட்டின் ஒரு பகுதியும் சேதமடைந்திருக்கிறது. மேல் கூடலூர், ஊட்டி லவ்டேல் ஆகிய இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்திருக்கின்றன. மரங்களை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர்.
சாரல் மழை என்பதால் தற்போது வரை வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. இருப்பினும், அணைகளின் நீர்மட்டம் மெள்ள உயர்ந்துவருகிறது. இன்று காலை நிலவரப்படி நீலகிரியில் அதிகபட்சமாக அவலாஞ்சி 182 மி.மீ, அப்பர்பவானி 119 மி.மீ, தேவாலா 105 மி.மீ என மழை பதிவாகியிருக்கிறது.
மழை குறித்து நம்மிடம் பேசிய ஊட்டியைச் சேர்ந்த பாபு, ``பெரிய மழை இல்லைன்னாலும், மூணாவது நாளா காத்தோட நல்ல சாரல் இருக்கு. பல இடங்கள்ள சீகை, தைல மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிச்சுது. கரன்ட் கம்பிங்க மேலயும் மரம் முறிஞ்சு விழுந்ததால மூணாவது நாளா கரன்ட் இல்லை. இதனால ஆன்லைன் எக்ஸாம் எழுதும் ஸ்டூடன்ட்ஸ் பாதிப்புக்குள்ளாயிருக்காங்க" என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம், ``மழை பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது விழும் மரங்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுவருகிறார்கள். குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் ஆபத்தான நிலையிலுள்ள கட்டடங்கள், மரங்கள் போன்றவை குறித்து 1077 என்ற இலவச எண்ணுக்குப் புகார் தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/general-news/nilgiris-heavy-wind-and-rain-peoples-suffers-from-power-cut
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக