தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கும் இந்த நேரத்தில், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று அங்கு 4-வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க தேர்தலை பொறுத்தவரை, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே பா.ஜ.க முழுவீச்சில் களபணிகளை தொடங்கியது. பா.ஜ.க வை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர், முதல்வர் மம்தா பானர்ஜியும் உடனடியாக களத்தில் இறங்கினார். பா.ஜ.க வின் வியூகங்களை வீழ்த்த பிரபல தேர்தல் வியூக வித்தகரான பிரஷாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்தார். பிரஷாந்த் கிஷோரும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாக செய்து வந்தார்.
தற்போது தமிழகத்திலும் தேர்தல் முடிவடைந்த நிலையில் பிரஷாந்த் கிஷோரின் முழு கவனமும் மேற்கு வங்கம் பக்கம் திரும்பியது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களுடனான் ஒரு உரையாடலில் பிரஷாந்த் கிஷோர் உதிர்த்த வார்த்தைகளை, பா.ஜ.க வியூகமாக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தான் தற்போது மேற்கு வங்க அரசியலில் பேசு பொருள் ஆகி இருக்கிறது.
என்ன நடந்தது..?
பா.ஜ.க மூத்த தலைவர்களின் ஒருவரான அமித் மால்வியா, சில ஆடியோ பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், நடப்பு மேற்கு வங்க தேர்தல் குறித்து பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரஷாந்த் கிஷோர். அந்த ஆடியோ பதிவை பகிர்ந்த அமித் மால்வியா, ``ஒரு பொது கலந்துரையாடலில், மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூக அமைப்பாளர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கணிப்பில் கூட பா.ஜ.க வெற்றிபெறும் என்று தான் கூறப்பட்டுள்ளது என்பதனை ஒப்புக்கொண்டார். மோடிக்கு தான் வாக்களிக்க போகிறார்கள். மேற்கு வங்கத்தில் 27% உள்ள எஸ்.சி பிரிவினர் உள்ளிட்டவர்கள் பா.ஜ.கவுக்கு தான் வாக்களிக்க போகிறார்கள்” என பதிவிட மேற்கு வங்க அரசியல் சூடு பிடிக்க தொடங்கியது.
அமித் மால்வியா பகிர்ந்த ஆடியோ பதிவில் பிரஷாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி மம்தா அளவுக்கு பிரபலமானவர். நாடு முழுவதும் பல இடங்களில் அவரை சுற்றி வழிபாடு நடக்கும் அளவுக்கு பிரபலம். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு உள்ளது. எஸ்.சி பிரிவினரின் வாக்குகள். பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்கிறது என்கிறார். இந்த ஆடியோ பதிவை தான் பா.ஜ.க வினர் வேகமாக பரப்பி வருகின்றனர்.
``நரேந்திர மோடி உலகம் முழுவதும் பிரபலமானவர். திரிணாமூல் கட்சியின் கதையை முடிக்கும் பணியை தான் பிரஷாந்த் கிஷோர் செய்திருக்கிறார்” என்கிறார் பா.ஜ.க எம்.பி நிஷித் பிரமானிக். பா.ஜ.க தலைவர் ராஜிப் பானர்ஜி, ``பிரஷாந்த் கிஷோர் வியூகங்கள் எல்லாம் மேற்கு வங்கத்தில் எடுபடாது. திரிணாமூல் காங்கிரஸ் கதை முடிந்தது. இங்கு மோடியின் வியூகம் மட்டுமே எடுப்படும்” என்றார்.
மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், ``எனது உரையை பா.ஜ.க வினர், அவர்களின் சொந்த கட்சி தலைவர்களின் உரையை விட முக்கியமானதாக கருதியது மகிழ்ச்சி. எனது உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டவர்களிடம் ஒன்றை சொல்கிறேன். முழுமையான ஆடியோவை வெளியிடுங்கள்” என்றார். மேலும் தான் பேசியது ஒரு கேள்வியின் பதிலாக இருக்கலாம். அந்த கேள்வி, `பா.ஜ.க சுமார் 40% வாக்குகளைப் பெறும், பா.ஜ.க வெற்றி பெறுகிறது என்ற கருத்து ஏன் உள்ளது என்பதாக கூட இருக்கலாம்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
எது எப்படியோ, தேர்தல் நேரத்தில் இந்த ஆடியோ விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது.
Also Read: 15 வயதில் தொடங்கிய அரசியல், தகர்க்கப்பட்ட இடதுசாரிகளின் கோட்டை... காவிகளையும் சமாளிப்பாரா மம்தா?
source https://www.vikatan.com/government-and-politics/politics/modi-hugely-popular-in-bengal-prashant-kishors-audio-clip-stirs-row
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக