Ad

சனி, 3 ஏப்ரல், 2021

இளநீர் பாயசம் | ஆலூ டிக்கி | முந்திரி புலாவ் | சிங்கப்பூர் நூடுல்ஸ் - வீக் எண்ட் ரெசிப்பிக்கள்

எங்க வீட்ல பார்ட்டி!

வாரந்தவறாம பார்ட்டிக்கு போனதும் புதுப்புது ரெஸ்டாரன்ட்டுகளைத் தேடிப் போய் சாப்பிட்டதும் கொ.மு (கொரோனாவுக்கு முன்) காலமாயிடுச்சு பலருக்கும். வெந்நீர் வைக்கத் தெரியாதவங்ககூட குக்கரிக்காக யூடியூப் சேனல் ஆரம்பிச்சதெல்லாம் கொ.பி (கொரோனாவுக்கு பின்) காலத்துல சர்வ சாதாரணம். ஆனாலும், அந்த பார்ட்டி சாப்பாட்டையும் ரெஸ்டாரன்ட் டேஸ்ட்டையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறவர்களுக்கு இங்கே விதம் விதமான பார்ட்டி ரெசிப்பீஸ்... இந்த வீக் எண்டுக்கு உங்க வீட்ல பார்ட்டி களைகட்டட்டும்...

தேவையானவை:

- இளநீர் 4 (இளநீர் வழுக்கையைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்).

- தேங்காய்ப்பால் 500 மில்லி.

- சர்க்கரை தேவையான அளவு.

- ஏலக்காய் 4.

- முந்திரிப்பருப்பு தேவையான அளவு.

- திராட்சை (கிஸ்மிஸ்) தேவையான அளவு.

இளநீர் பாயசம்

செய்முறை:

இளநீரை தனியாகவும், உள்ளே இருக்கும் வழுக்கையைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். சிறிதளவு வழுக்கையை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும். மீதமுள்ள வழுக்கையை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். கூடவே சர்க்கரை மற்றும் ஏலக்காயைச் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். இதைத் தேங்காய்ப்பாலில் சேர்த்துக் கலக்கி இளநீர், நறுக்கிய வழுக்கை, முந்திரிப்பருப்பு, திராட்சை (கிஸ்மிஸ்) சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். (மற்ற பாயசம் போல திக்காக இல்லாமல், தண்ணீராக இருக்கும் இந்தப் பாயசம்).

தேவையானவை:

- வேக வைத்த உருளைக்கிழங்கு 2 (மீடியம் சைஸ்).

- மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்.

- 1 (பொடியாக நறுக்கவும்).

- பச்சை மிளகாய் 2.

- கொத்தமல்லித்தழை சிறிதளவு.

- புதினா சிறிதளவு.

- மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்.

- சீரகத்தூள் கால் டீஸ்பூன்.

- கரம் மசாலாத்தூள் கால் டீஸ்பூன்.

- சாட் மசாலாத்தூள் அரை டீஸ்பூன்.

- உப்பு தேவையான அளவு.

- எண்ணெய் தேவையான அளவு.

ஆலூ டிக்கி

செய்முறை:

உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிப் பிசைந்து வைக்கவும். இத்துடன் தேவையானவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் கலந்து நன்கு பிசையவும். இதைப் பெரிய எலுமிச்சை அளவுக்கு எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்துத் தட்டவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு தட்டிய உருளைக்கிழங்கு கலவையை வைத்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான `ஆலு டிக்கி’ ரெடி.

தேவையானவை:

- பிரியாணி அரிசி அரை கிலோ.

- பட்டை 3

- கிராம்பு 3

- பிரியாணி இலை 2

- ஏலக்காய் 5

- சீரகம் 1 டீஸ்பூன்

- பெரிய வெங்காயம் 1 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

- காய்ச்சிய பால் 100 மில்லி

- இஞ்சி விழுது 1 டேபிள்ஸ்பூன்

- பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்

- புதினா 1 டேபிள்ஸ்பூன்

- கொத்தமல்லித்தழை 2 டேபிள்ள்ஸ்பூன்

- பச்சை மிளகாய் 2 (இரண்டாக கீறியது)

- உடைத்த முந்திரிப்பருப்பு 25 கிராம்

- நெய் 25 கிராம்

- எண்ணெய் 25 கிராம்

- உப்பு தேவையான அளவு

முந்திரி புலாவ்

செய்முறை:

முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும். பிரியாணி அரிசியை இரண்டு முறை கழுவி இருபது நிமிடம் ஊற வைக்கவும். வாய் அகன்ற பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கி, சீரகம், வெங்காயம் சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாற வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஒன்றேகால் பங்கு தண்ணீர், பால், உப்பு, அரிசி சேர்த்து வேக விடவும். அரிசி வெந்ததும் லேசாகக் கிளறி முந்திரிப்பருப்பு சேர்க்கவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் இந்தப் பாத்திரத்தை வைத்து, மூடி போடவும். இனி தீயை முற்றிலும் குறைத்து மூடியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து ஐந்து நிமிடம் 'தம்’ போடவும். பின் மூடியை திறந்து நெய் ஊற்றிக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

தேவையானவை:

- வேக வைத்த நூடுல்ஸ் 200 கிராம்

- எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

- பெரிய வெங்காயம் ஒன்றில் பாதி (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

- குடமிளகாய் ஒன்றில் பாதி

- கேரட் 1 (நீளமாக‌ நறுக்கவும்)

- பீன்ஸ் 10 (நீளமாக நறுக்கவும்)

- இஞ்சி சிறிதளவு (நீளமாக நறுக்கவும்)

- பூண்டு 5 (நீளமாக நறுக்கவும்)

- முட்டைகோஸ் 25 கிராம் (நீளமாக நறுக்கவும்)

- சோயா சாஸ் 1 டீஸ்பூன்

- பழுப்புச் சர்க்கரை 1 டீஸ்பூன்

- வெள்ளை மிளகுத்தூள் 1 டீஸ்பூன்

- உப்பு தேவையான அளவு

- ஸ்பிரிங் ஆனியன் சிறிதளவு

சிங்கப்பூர் நூடுல்ஸ்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாணலியின் உள்பக்கம் முழுவதும் பரவுமாறு ஒரு சுழற்றி, சுழற்ற மீதம் இருக்கும் எண்ணெயை வாணலியில் ஊற்றி இஞ்சி, பூண்டு சேர்த்து, பச்சை வாசனை போனதும், வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வதக்கி, மிதமான தீயில் வேக விடவும். காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும், தீயை அதிகப்படுத்தி நூடுல்ஸ், பழுப்புச் சர்க்கரை, சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். நூடுல்ஸில் கலவை எல்லாம் ஒட்டிக்கொண்ட பிறகு ஸ்பிரிங் ஆனியன் தூவிப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/home-made-recipes-of-buffet-foods-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக