Ad

புதன், 7 ஏப்ரல், 2021

`மாஜி அமைச்சர் மீதான லஞ்ச புகார்.. உறுதி செய்த போலீஸ் அதிகாரி!’ -சிவசேனா கூட்டணி அரசுக்கு நெருக்கடி

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்திற்கு வெளியில் பிப்ரவரி மாத இறுதியில் வெடி பொருள்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டது தொடர்பான் வழக்கில் மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பரம்பீர் சிங், மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது லஞ்சப்புகார் தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள சச்சின் வாசிடம் மும்பையில் உள்ள பீர் பார் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூலித்துக்கொடுக்கும்படி அனில் தேஷ்முக் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். இதனை சச்சின் வாஸ் என்னிடம் நேரில் தெரிவித்ததாக பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அம்பானி வீட்டின் நுழைவு வாயில்

இது குறித்து சி.பி.ஐ.விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று பரம்பீர் சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. இதையடுத்து பரம்பீர் சிங் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பரம்பீர் சிங் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.அதிகாரிகள் டெல்லியில் இருந்து மும்பை வந்து தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் கையெழுத்திட்ட வாக்குமுலத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் அனில் தேஷ்முக், துணை முதல்வர் அஜித் பவார், சிவசேனா மூத்த தலைவர் அனில் பரப் ஆகியோர் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். இப்புகார்களால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சச்சின் வாஸ் தனது வாக்குமூல அறிக்கையில், ``எனது சஸ்பென்டை நீக்கி பணியில் சேர்த்த பிறகு, அனில் தேஷ்முக் என்னை போனில் தொடர்பு கொண்டு, `சரத்பவார் என்னை தொடர்ந்து சஸ்பென்டில் இருக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால் சரத்பவாரிடம் பேசி சரிக்கட்டி விடுவேன். இதற்கு ரூ. 2 கோடி கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் என்னிடம் அந்த அளவுக்கு கொடுக்க பணம் இல்லை என்று தெரிவித்தேன். உடனே பின்னால் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Anil deshmukh

தொடர்ந்து ஜனவரி மாதம் அனில் தேஷ்முக்கை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய போது மும்பையில் உள்ள பீர் பார்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் தலா ரூ.3 முதல் 3.5 லட்சம் வசூலித்துக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். என்னால் எனது சக்திக்கு அப்பாற்பட்டு பீர்பார்களில் பணம் வசூலிக்க முடியாது என்று கூறினேன். நான் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த போது என்னிடம் அனில் தேஷ்முக் உதவியாளர், `அமைச்சர் சொல்கின்ற படி நடந்து கொண்டால்தான் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியும்’ என்று தெரிவித்தார். அப்படி இருந்தும் நான் பணம் வசூலித்து கொடுக்க மறுத்துவிட்டேன். பின்னர் இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனரிடமும் தெரிவித்தேன்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துணை முதல்வர் அஜித் பவாருக்கு வேண்டப்பட்ட ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, `குட்கா விற்பனையாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூலித்துக்கொடுக்கும்படி’ கேட்டுக்கொண்டார். ஆனால் அது போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட முடியாது என்று சொன்னபோது, `மீண்டும் பதவியை இழக்கப்போகிறாய்’ என்று என்னிடம் அந்த நபர் மிரட்டினார். அதே மாதத்தில் தர்ஷன் என்பவர் என்னை தொடர்பு கொண்டு, `தான் துணை முதல்வர் அஜித்பவாருக்கு நெருக்கமானவர்’ என்றும் `குட்கா மற்றும் புகையிலை வியாபாரிகளுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுப்பதை அஜித்பவார் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

தென் மும்பை பெண்டி பஜாரில் கட்டட மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள சைஃபி புர்ஹனி டிரஸ்ட் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கவனிக்கும் படியும், அதன் அறங்காவலர்களை அழைத்து வந்து இக்குற்றச்சாட்டு குறித்து பேசவேண்டும் என்றும் அதற்கு முன்பாக இதன் விசாரணையை முடிக்க ரூ.50 கோடி பெறும்படியும் என்னிடம் அனில் தேஷ்முக் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த டிரஸ்டில் எனக்கு யாரையும் தெரியாது என்று கூறிவிட்டேன்.

கடந்த ஜனவரி மாதம் என்னை அமைச்சர் அனில் பரப் அவரது அலுவலகத்திற்கு அழைத்து மும்பை மாநகராட்சியில் தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் 50 பேரிடமிருந்து ரூ.2 கோடி வசூலிக்கும்படி கேட்டுக்கொண்டார் ”என்று குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் வாஸ்

சச்சின் வாக்குமூல அறிக்கை சிவசேனா கூட்டணி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இன்னும் ஒரு வாரத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகுவார் என்றும் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த அமைச்சர்கள் பதவி விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு தானாக அரசு கவிழும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக சில ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை தங்களது கையிக்குள் வைத்துக்கொண்டு சிவசேனா அரசுக்கு எதிராக காய்நகர்த்தி வருகிறது என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. அவர்களது ஆட்டத்தில் சிவசேனா தப்புமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும். இதற்கிடையே சச்சின் குற்றச்சாட்டை அமைச்சர் அனில் பரப் மறுத்துள்ளார். அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/mumbai-police-officer-sachin-confirms-bribery-allegations-against-former-minister-deshmukh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக