கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "வணக்கம், நாகர்கோவிலுக்கு நான் வந்திருப்பதால் இந்த மண்ணின் பெருமை மிகு நாஞ்சில் பொருணன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, செண்பகராமன் பிள்ளை, அய்யா வைகுண்டர், தாணுலிங்க நாடார், கே.காமராஜர், மார்ஷல் நேசமணி ஆகியோரை நினைவுகூருகிறேன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், அருள்மிகு நாகராஜா கோவில், உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவை உலக மக்களை கவர்ந்துள்ளது. இன்று(02-04-2021) புனித வெள்ளி. ஏசு கிறிஸ்துவின் தியாகத்தையும், அவர் எளியமக்களுக்கு ஆற்றிய பணியையும் நினைவுகூருகிறேன்.
நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீது இருக்கிறது. எதிர்கட்சிகள் கவனம் அவர்களின் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி உள்ளது. அவர்களது கவனம் எல்லாம் அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் வளர்ச்சிபற்றி உள்ளது. உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிபற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. டெல்லியின் மத்திய பகுதியில் ஒரு வம்சத்தின் நினைவுச் சின்னம் அமைக்க பல ஏக்கர் இடத்தை எடுத்தார். ஆனால் நாங்கள் அப்துல்கலாம் நினைவிடத்தை ராமேஸ்வரத்தில் அமைத்தோம்.
கருணாநிதியின் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியவர்கள், மகுடம் சூட்டிகொண்டு வந்த இளவரசரை பார்த்து மன புழுக்கத்தில் உள்ளனர். தேசத்தின் மனநிலை தெளிவாக உள்ளது. தகுதி பார்க்காமல் உறவு என்ற நிலையில் பதவி கொடுப்பதால் மக்கள் எதிர்கட்சியினரை ஜனநாயக விரோதியாக பார்க்கிறார்கள். நம் நாட்டின் 356 சட்டப் பிரிவை காங்கிரஸ் பலமுறை பயன்படுத்தியுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகள் காங்கிரஸால் கலைக்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசு கடலோர பகுதியை பற்றி கவலைப்படவில்லை. கடற்கரையை அபிவிருத்தி செய்ய மூன்று அடிப்படை திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, நவீன உள் கட்டமைப்பு வளர்ச்சி, புதிய துறைமுகங்களை அமைத்தல். நம் துறைமுகங்கள் வளர்ச்சியடையப்போகின்றன. நீல பொருளாதாரம் என்ற கடல் சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் முக்கியத்துவம் தருவதால் மீனவர்களின் வருவாய் அதிகரிக்கும்.
புதிய மீன்பிடி துறைதுறைமுகங்கள், மீன்களை இறக்கும் மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுகிறது. அதில் சிறந்த படகுகள், கடலில் போகும் உபகரணங்கள், கடல்பாசி வளர்க்கும் திட்டம் ஆகியவற்றை ஊகுவிக்கிறோம். மீனவர்களுக்காக 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பே நம் அரசின் முன்னுரிமை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து 40 மீனவர்களையும் நான்கு படகுகளையும் மீட்டு வந்தோம். இந்தியாவின் எந்த ஒரு மீனவரோ, ஒரு படகோ இப்போது இலங்கை அரசின் காவலில் இல்லை.
மீன் விற்க நிறைய தடைகள் உள்ளன. சிறந்த சாலை, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றின் தடைகளை நீக்க சாத்தியபடும் இடங்களில் சாலை நீர்வழிகளும் அமைக்கப்படும். மீனவர்கள் வாழ்க்கை எளிதாகவும், வளமாகவும் இருக்கும். மீனவர்களுக்கு மீன்பிடித்திட்டங்களும், உணவு பதப்படுத்தும் திட்டங்களும் அமைக்கப்படும். மீனவர்களுக்காக தனி அமைச்சகம் மூலம் மீனவர்களின் வளர்ச்சிக்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/narendra-modi-speech-in-kanyakumari-election-campaign
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக