சென்னை கே.கே.நகர் தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் உமா. இவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``எனது கணவர் தேஜாரெட்டி, கார் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார். எனது இளைய மகள் ஜோதி ஸ்ரீ, கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். புரோக்கர் மூலம் 2020-ம் ஆண்டு ஜோதி ஸ்ரீக்கு வரன் வந்ததது. அதனால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமுல்லைவாயல் வாஞ்சிநாதன் தெரு, அன்னை சத்யா நகரில் வசிக்கும் டில்லிபாபு, அம்சா ஆகியோரின் மகன் பாலமுருகனுக்கு 25.11.2020-ல் திருமணம் செய்து வைத்தோம்.
திருமணத்தின்போது எனது மகளுக்கு தாலி செயின் நெக்லஸ் உள்பட 8 சவரன் தங்க நகைகளும் மாப்பிள்ளைக்கு மோதிரமும் வரதட்சனையாகக் கொடுத்தோம். எனது மகள் திருமணமான பிறகு 15 நாள்கள் சந்தோஷமாக இருந்தாள். அதன்பிறகு கணவன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. அதனால் ஜனவரி மாதம் 12-ம் தேதி ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். அப்போது போலீஸார் மருமகனை அழைத்து விசாரித்தனர். பின்னர் எனது மகளுக்கும் மருமகனுக்கும் கவுன்சலிங் அளித்தனர். அதன்பிறகு எனது மகளிடம் மாமியார், கடன் வாங்கி வீடு கட்டியிருக்கிறோம். அதனால் கடனை அடைக்க பணம் வாங்கி வரும்படி கூறியிருக்கிறார்.
மேலும் தாலிச் செயினை அடகு வைத்து பணம் கொடு என்று தெரிவித்திருக்கிறார். இதனால் மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். அப்போது மகளின் மாமியார் விசாரணைக்கு வரவில்லை. எனது மருமகன் மட்டும் விசாரணைக்கு வந்தார். விசாரணையில் தனிக்குடித்தனம் செல்வதாகக் போலீஸாரிடம் மருமகன் கூறினார். இதையடுத்து எனது மகள் கே.கே.நகரில் தங்கியிருந்தார். 3.4.2021-ல் தனது கணவர் தன்னை அழைப்பதாக என்னிடம் கூறி விட்டு காலை 7.30 மணியளவில் திருமுல்லைவாயலுக்கு எனது மகள் சென்றாள். வீட்டுக்குச் சென்ற எனது மகளை அவளது கணவர் பாலமுருகனும் மாமியார் அம்சா ஆகிய இருவரும் சேர்ந்து அவளை வீட்டுக்குள் செல்ல விடாமல் அடித்திருக்கின்றனர்.
Also Read: சென்னை: விபத்தில் காதலன் மரணம்; 10-வது நாள் தற்கொலை செய்துகொண்ட காதலி!
அப்போது அவளது கணவர் உன்னுடன் வாழ எனக்குப்பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு எனது மகள், கணவரிடம் கெஞ்சியிருக்கிறார். ஆனால் எனது மருமகன் ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து எனது மகள் பிடிவாதமாக நான் உன்னுடன்தான் வாழ்வேன் என்று கூறி வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அப்போது அவரது மாமியார் வீட்டின் மின்இணைப்பை துண்டித்திருக்கிறார். இவர்களது கொடுமை தாங்க முடியாமல் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்தத் தகவலை போலீஸார் எனக்கு இரவு 9 மணியளவில் போனில் கூறினார்கள். உடனே நான் வந்து பார்த்தபோது எனது மகள் இறந்தநிலையில் இருந்தார். எனது மகள் என்னுடைய போனுக்கு அவளின் இறப்பிற்கு காரணம் தனது கணவர், மாமியார்தான் என்று வீடியோ பேசி அனுப்பியிருக்கிறார். எனவே எனது மகளை கொடுமை செய்து அளளின் இறப்பிற்கு காரணமான கணவர் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். திருமணமான 5 மாதங்களுக்குள் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/chennai-lady-commits-suicide-in-thirumullaivoyal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக