Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 12 | பித்தளை பொன்னானது அஸ்தி மலரானது... கிரகதோஷம் தீர்க்கும் திருப்பூவணம்!

அந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தின் எல்லைக்குள் வருகிறது. ஆனால் மதுரையின் மையத்திலிருந்து 20 கி.மீ தொலைவுதான். வைகையின் தென்கரையில் அமைந்துவிட்ட இந்தத் தலம் மதுரைத் தலங்களோடு சேர்ந்து தரிசிக்க வேண்டிய அற்புதத் தலம்.

'பாண்டி பதினான்கு’ எனப் போற்றப்படும் பாண்டி நாட்டுத் தேவாரத் தலங்கள் பதினான்கில் ஒன்று இது. பொன்முடிக்கு பதிலாக நெற்கதிர்களையே தன் தலையில் கிரீடமாக குலசேகரப் பாண்டிய மன்னன் சூடிக்கொண்டு பட்டம் ஏற்றது இந்த ஊரில்தான். அதனால், இந்த ஊருக்கு ‘நெல்முடிக்கரை’ எனும் பெயரும் உண்டு.

திருப்பூவணம்

இத்தலத்துக்குப் பெயர்கள் ஒன்றா இரண்டா... புஷ்பவனக் காசி, பிதுர் மோக்ஷபுரம், பாஸ்கர புரம், லக்ஷ்மிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம், ரஹஸ்ய சிதம்பரம், புஷ்பபுரம், பிரம்மபுரி, பூவணக்காசி என்று பல்வேறு திருப்பெயர்கள். பதினெண் புராணங்களில் ஒன்றான 'பிரம்ம வைவர்த்த புராணம்’ இந்தத் தலத்தின் பெருமையை விளக்குகிறது. இத்தகைய சிறப்புகள் நிறைந்த இந்த அற்புதத் தலத்தின் பெயர் திருப்பூவணம்.

இந்தத் தலத்தில் ஈசனுக்கு ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் என்று திருநாமம். அழகு தமிழில் அருள்மிகு பூவணநாதர் என்று அழைக்கிறார்கள். அப்பர் சுவாமிகள் இந்த பூவண நாதரை ‘பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே’ என்றல்லவா ஏற்றிப்பாடுகிறார். 'பூவணமும் பூமணமும் போல அமர்ந்திருப்பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே’ என்று ராமலிங்க அடிகளார் பாடிய இறைவன் இவர். கருவறையில் சதுரபீட ஆவுடையாரில் பிரமாண்ட லிங்கத்திருமேனியராக அருள்கிறார் பூவணநாதர்!

தட்சனின் யாகத்துக்கு சிவனார் தடுத்தும் கேளாமல் சென்ற அம்பிகை தன் தவற்றை உணர்ந்து அதற்குப் பரிகாரமாக பூவுலகில் வந்து சிவபூஜை செய்ய விரும்பினாள். அதற்காக அவள் தேர்ந்தெடுத்த இடம்தான் இந்தத் திருப்பூவணம். பூவணத்தின் நடுவில் இருந்த பாரிஜாத மரத்தின் அடியில் சிவலிங்கம் ஒன்று தோன்றியருள அம்பிகை அந்த லிஙக்த்துக்கே பூஜை செய்து தன் சாபம் தீர்ந்தாள் என்கிறது தலபுராணம்.

திருப்பூவணப் பதிகம்

அம்மை மட்டுமா இந்த சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றாள்... ஜலந்திரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக இந்தத் தலத்தில்தான் ருத்ரமூர்த்தியின் அம்சமான சக்ராயுதத்தை மகாவிஷ்ணு ஈசனிடம் பெற்றார். காளிதேவி தன் ஆங்காரம் தீராமல் இருந்தபோது இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை தரிசனம் செய்ததுமே தன் உக்கிரம் தீரப்பெற்றாள். பிரம்மா இந்தத் தலத்தில் வந்து சிவனை வழிபட அகந்தை நீங்கி மெய்ஞ்ஞானம் பெற்றார். சூரியபகவான் இந்தத் தலத்துக்கு வந்து சிவனை வழிபட்டு நவகிரகங்களுக்கெல்லாம் அதிபதியாகும் பேறுபெற்றான். உட்பலாங்கி என்பவள் சிவனாரை வழிபட்டு, நல்ல கணவனையும், நிரந்தரமான சுமங்கலித் தன்மையையும் அடைந்தாள். கலியுகத்தின் தீமைகளால் பீடிக்கப்பட்ட நள மகாராஜா இங்கே வழிபட்டதால், அவனைப்பீடித்த தீமைகள் யாவும் அகன்றன.

மனிதர்கள் முதல் தேவாதி தேவர்கள்வரை சகலரும் வந்து பணிந்து தம் துன்பங்கள் நீங்கப் பெற்ற தலம் இது என்பதால் இங்கு வேண்டும் அனைத்தும் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள். பிரம்மா விஷ்ணு இருவரும் வணங்கிய இறைவன் என்பதால் இங்கு சிவனை வழிபடுவது மிகவும் விசேஷம். நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும். வினைப்பயன்கள் அகலும். மேலும் நவகிரகங்களின் தலைவனான சூரியபகவான் வழிபட்ட இத்தலத்தில் வழிபடுவோரின் கிரகதோஷங்கள் அனைத்தும் விலகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

இங்கு அம்பிகை ஸ்ரீமின்னனையாள் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். மின்னலைப்போல ஒரு கணத்தில் கேட்பவர்க்கு அருள் வழங்குபவள் இந்த அன்னை. நின்ற கோலத்தில் அருளும் இந்த அம்பிகை அபயமும் வரதமும் காட்டி அருள்கிறாள். பாசமும் அங்குசமும் ஏந்தியிருக்கிறாள். அம்மன் சந்நிதி கோஷ்டங்களில், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோரும் எழுந்தருளி இருக்கிறார்கள்.

திருப்பூவணம்

இந்த ஆலயத்தின் அற்புதங்களில் ஒன்று இங்கு அருள்பாலிக்கும் நடராஜர் மூர்த்தம். இது ரசவாதம் என்னும் திருவிளையாடல் நடந்த திருத்தலம் என்பதற்கு சாட்சியாக இன்றும் இருக்கும் அற்புதம்.

முன்னொரு காலத்தில் பொன்னனையாள் என்னும் கணிகையர் குலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இத்தலத்தில் வாழ்ந்துவந்தார். சுவாமிக்கு தினமும் நடனமாடி சேவை செய்பவள். பக்தியில் அவளுக்கு நிகரே இல்லை. சிவனும் சிவனடியாரும் அவள் வரையில் ஒருவர்தான். சிவசேவை முடிந்ததும் அடியார் சேவையும் ஆரம்பமாகும். தினமும் தன் கைப்பொருளைச் செலவு செய்து சிவனடியார்க்கு அமுது செய்விப்பாள். அதை அறிந்து சிவனடியார் பலரும் அங்குவந்து உணவு உண்டு செல்வர்.

பொன்னனையாளுக்கு ஓர் ஆசை வந்தது. சிவபெருமானின் ஆடல் திருமேனியைப் பொன்னால் செய்ய வேண்டும் என்று. ஆசை மட்டும் போதுமா பொன் வேண்டாமா... ஏற்கெனவே சிவனடியார் சேவைக்கே பொருள் குறைந்துகொண்டே போவதை அறிந்து தன் மனத்துள்ளேயே தன் ஆசையைப் புதைத்துக்கொண்டாள்.

ஆனால் அடியவர் மனத்தின் ஆசையை அந்த ஆலவாயன் அறியமாட்டாரா என்ன? ஒரு சித்தரைப் போல உருமாறி பொன்னனையாள் மனை வந்தார். அவளிடமிருந்த பித்தளையெல்லாம் வாங்கி ரசவாதம் செய்து பொன்னாக்கிக் காட்டினார். பொன்னனையாள் அடைந்த மகிழ்வுக்கு அளவேயில்லை. அந்தப் பொன்கொண்டு நடராஜ மூர்த்தம் செய்யப் பணித்தாள். இறைவன் திருக்கை பட்ட பொன் அழகு மிளிரும் அற்புதச் சிலையானது. அந்தத் திருவுருவின் அழகில் பொன்னனையாள் தன்னையே மறந்தாள். திருமேனியின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.

பக்தியின் உச்சத்தில் திளைத்த அவளின் புகழைப் பூவுலகம் உள்ளவரை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்த ஈசன், அவள் கிள்ளிய இடத்தில் ஒரு தடம் ஏற்படுமாறு செய்தார். இன்றும் அந்தத் தடத்தை நாம் அனைவரும் கண்டு தரிசித்து மகிழலாம்.

திருப்பூவணமும் பித்ரு கடன்களுக்கான தலமாக மதிக்கப்படுகிறது. தர்மக்ஞன் என்பவன் ஓர் அரசன். தந்தையின் அஸ்திச் சாம்பலை, சேதுக் கரையில் கரைப்பதற்காக, இந்த வழியாகப் போனான். இன்று கோபுரவாசலைக் கடந்து உள்செல்கையில் பொன்னனையாளின் சிற்பத் திருமேனியைக் கண்டு மகிழலாம்.

வைகை நதி இங்கே உத்தரவாகினி; அதாவது, வடக்கு நோக்கிப் பாயும் நதி. அதனால் இங்கு முன்னோருக்கான சடங்குகளைச் செய்வது பெரும் பலனைத் தரும் என்பது நம்பிக்கை. தர்மக்ஞன் என்னும் அரசன். தந்தையின் அஸ்திச் சாம்பலை, சேதுக் கரையில் கரைப்பதற்காக, இந்தத் தலத்தின் வழியாகப் போனான். இந்தத் தலத்தை அடைந்ததும், அவன் தந்தையின் அஸ்தி மலராக மாறியது. எனவே இங்குவந்து முன்னோர்கடன்களைச் செய்வது காசிக்குச் சென்று சடங்குகள் செய்வதைப்போன்ற பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

மதுரையில் சிவபெருமான் புரிந்த திருவிளையாடல்கள் 64 என்கிறது புராணம். திருப்பூவணப் புராணம் திருப்பூவணத்திலும் ஈசன் 64 திருவிளையாடல்கள் புரிந்தார் என்று சொல்கிறது. இத்தகைய சிறப்பும் பெருமையும் வாய்ந்த இந்தத் திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். அந்த ஈசனின் அருள் கிடைக்கும்.


source https://www.vikatan.com/spiritual/temples/madurai-temples-the-glory-and-history-of-thirupoovanam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக