ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்களிடம் நகையைப் பறித்துக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்து நீந்தி தப்ப முயன்ற இரண்டு திருடர்களை, 2 மணி நேரம் காவிரி ஆற்றில் சேஸிங் செய்து மடக்கிப்பிடித்து அசத்தியிருக்கிறார்கள், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார்.
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகில் ஓடும் காவிரிக் கிளை ஆற்றில் சில பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், அந்தப் பெண்களின் கழுத்துகளில் இருந்த செயின்களைப் பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றனர்.
Also Read: கரூர்: `இந்தப் பதக்கம் உங்களால்தான் கிடைத்தது!' - இளைஞர்களை நெகிழ வைத்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர்
அப்போது, அந்தப் பெண்கள் சத்தம் போட, அங்கு வந்த பொதுமக்கள் சிலர், அந்த திருடர்களைப் பிடிக்கத் துரத்தினர். அந்த திருடர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் தடுமாறி கீழே விழ, பயந்துபோன திருடர்கள் தப்புவதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றில் குதித்து நீந்தியுள்ளனர். ஆற்றின் மறுகரையில் உள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரமங்கலம் பகுதியை நோக்கி அவர்கள் நீந்திசென்றனர்.
அதற்குள், இந்த திருட்டுச் சம்பவம் பொதுமக்களால், குளித்தலை டி.எஸ்.பி சசிதர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. உடனே இந்த தகவலை, திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி பிரம்மநாதனுக்கு போன் மூலம் சசிதர் சொல்ல, அவர் தொட்டியம் காவல் நிலைய போலீஸாரை முடுக்கிவிட்டார். இதனால், தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர், எஸ்.ஐ குமார் மற்றும் போலீஸாருடன், காவிரி ஆற்றுக்குச் சென்று கண்காணிப்பைப் பலப்படுத்தினார். அப்போது, கரூர் மாவட்ட எல்லையில் இருந்து காவிரியில் அந்த இரண்டு இளைஞர்களும் நீந்தியும், மணல் திட்டு இருக்கும் பகுதிகளில் நடந்தும், திருச்சி மாவட்ட எல்லையை நோக்கி வருவதைப் பார்த்தனர்.
அதனால், அவர்களை பிடிக்க, போலீஸார் அலர்ட்டானார்கள். ஆனால், தங்களைப் பிடிக்க காத்திருக்கும் தொட்டியம் காவல் நிலைய போலீஸாரை பார்த்துவிட்ட அந்த இளைஞர்கள், மறுபடியும் காவிரி ஆற்றுக்குள் நீந்தியபடி கரையோரமாகவே சென்றனர். இதனால், போலீஸாரும் ஆற்றுக்குள் குதித்து, நீந்தியபடி அவர்களைப் பின்தொடர்ந்தனர். சினிமா பாணியில் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை அந்த இளைஞர்களை போலீஸார், நீச்சல் சேஸிங் செய்து, ஒருவழியாகப் பிடித்தனர். திமிறி ஓடப்பார்த்த அவர்களை மடக்கிப்பிடித்த போலீஸார், பெண்களிடம் அந்த இளைஞர்கள் களவாடிய நகைகளை மீட்டனர்.
போலீஸார் அவர்களிடம் தங்களது பாணியில் விசாரணையைச் செய்ய, இரண்டு இளைஞர்களும், தஞ்சாவூர் பர்மா காலனிப் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பதும் தெரியவந்தது. அதன்பிறகு, இரண்டு திருடர்களையும், முசிறி டி.எஸ்.பி பிரம்மநாதன், குளித்தலை டி.எஸ்.பி சசிதரிடம் ஒப்படைத்தார். அவர்களைக் கைது செய்த லாலாப்பேட்டை காவல் நிலைய போலீஸார், அவர்களை சிறைக்கு அனுப்பி வைத்தனர். சினிமா பாணியில் காவிரி ஆற்றுக்குள் தப்பிய திருடர்களை மடக்கிப்பிடித்த கரூர் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸாருக்கு, பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர்.
இதுகுறித்து, குளித்தலை டி.எஸ்.பி சசிதரிடம், பேசினோம். ``அவர்கள் இருவரும் பைக்கில் சென்று, பெண்களிடம் நகைகளைப் பறிக்கும் திருடர்கள். அப்படிதான், லாலாப்பேட்டைப் பகுதியில் உள்ள பெண்களிடம் நகைகளைப் பறித்துக்கொண்டு, தாங்கள் வந்த மோட்டார் பைக்கில் தப்பிக்க முயன்றுள்ளனர். அதற்குள், அங்கு கூடிய பொதுமக்களும், போலீஸாரும், இரண்டு பேரையும் துரத்தியிருக்கிறார்கள்.
அப்போது, பைக்கில் இருந்து இருவரும் தடுமாறி கீழே விழ, அவர்கள் இருவரும் காவிரி ஆற்றுக்குள் குதித்து தப்பினார்கள். முசிறி டி.எஸ்.பிக்கு தகவல் கொடுத்து, தொட்டியம் காவல் நிலைய போலீஸார் மூலம் இரண்டுபேரையும் காவிரி ஆற்றுக்குள் வைத்தே மடக்கிப்பிடிக்க வைத்தோம். பெண்களைக் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
source https://www.vikatan.com/news/crime/karur-and-trichy-police-catch-2-robbers-in-cauvery-river
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக