Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

`ஹெராயின் திருட்டு; கள்ளத்தனமாக ஊடுருவல்!’ - தனுஷ்கோடியில் சிக்கிய இலங்கை போலீஸ்

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை கடத்திய இலங்கை போலீஸ், கள்ளத்தனமாக தனுஷ்கோடியில் ஊடுருவியபோது, இந்தியக் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை போலீஸ் பிரதீப் குமரபண்டாரா.

இலங்கை இறுதிப் போருக்குப் பின், அங்கிருந்து தமிழகத்துக்குத் தப்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை முற்றிலும் தடைபட்டது. இந்நிலையில், இங்குள்ள அகதி முகாம்களில் தங்கியிருப்போரை இலங்கைக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல்களிடம் சிக்கும் அகதிகளை, அந்தக் கும்பல் போலீஸாரிடம் மாட்டி விட்டுவிட்டு பணத்துடன் தப்பிவிடும் சம்பபங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதுதவிர கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வருவதும், அதற்கு ஈடாக இங்கிருந்து போதைப்பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள், மஞ்சள் ஆகியன கடத்தி செல்லப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், இலங்கை காவல் துறையில் பணிபுரிந்த சிங்களக் காவலர் ஒருவர் தனுஷ்கோடியில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இலங்கை: `கேள்விகளால் திணறிய அமைச்சர்; பறிபோன வேலை!’ - நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடி பகுதியில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித்திரிவதாக அப்பகுதி மீனவர்கள் தமிழகக் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதைடுத்து அங்கு வந்த போலீஸார், அந்த நபரைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட நபர், சிங்கள மொழியில் பேசியதால், மத்திய, மாநில புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து மண்டபம் அகதி முகாமில் உள்ள இருவரை அழைத்து வந்து, அவர்கள் மூலம் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தினர்.

இலங்கை போலீஸ் பிரதீப் குமரபண்டாரா.

விசாரணையில் அவர் இலங்கை சியம்பலண்டவ அருகில் உள்ள மொனரகல பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமரபண்டாரா என்பதும், இலங்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் 12 மணி நேரம் நடத்திய விசாரணையில், அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகின.

கடந்த 2018 -ம் ஆண்டு இலங்கைக் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் காவலராகப் பணியில் சேர்ந்த பிரதீப் குமரபண்டாரா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பிடிக்கும் பணியில் அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் கடத்தல் கும்பல்களிடம் இருந்து கைபற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் அங்குள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில், 25 கிலோ ஹெராயினைத் திருடிய பிரதீப் குமரபண்டாரா, தனது அண்ணனிடம் கொடுத்துள்ளார். இத்தகவல் போலீஸாருக்குத் தெரியவந்த நிலையில், பிரதீப் குமரபண்டாராவைக் கைது செய்ய சென்ற நிலையில் அவர் தப்பிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த அவரது சகோதரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: `கெட் அப் மாற்றம்; விஷம் கொடுத்து கொலை?’ - இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கு மர்மம்

இந்நிலையில், போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க தலைமன்னாருக்கு தப்பிவந்த பிரதீப் குமரபண்டாரா, அங்குள்ள மீனவரின் பிளாஸ்டிக் படகு மூலம் தனுஷ்கோடிக்கு தப்பிவந்துள்ளார். இதையடுத்து பாஸ்போர்ட் இல்லாமல் கள்ளத்தனமாக படகில் வந்த பிரதீப் குமரபண்டாரா மீது தனுஷ்கோடி கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர

அங்கொட லொக்கா

இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்து வந்த அங்கொட லொக்கா, கடந்த 2017-ல் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக இலங்கை போலீஸாரால் தேடப்பட்டு வந்தார். அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்த நிலையில் சென்னை போலீஸாரிடம் இரு வழக்குகளில் சிக்கினார். இவர் மீது பதிவான வழக்கில் ஜாமீன் பெற்ற அங்கொட லொக்கா, பெங்களூருவில் தலைமறைவான நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வேறு பெயரில் கோவையில் பதுங்கி இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 4-ம் தேதி அங்கொட லொக்கா மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் போதைப்பொருள் திருடிய காவலர் தனுஷ்கோடிக்கு கள்ளத்தனமாக ஊடுருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/tn-coastal-guard-arrested-sl-police-in-dhanushkodi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக