Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

ஒரே ஓவரில் 30 ரன்கள்... ஸ்டாய்னிஸ் Vs ஜோர்டன் பகை நேற்று தொடங்கியதல்ல! #IPL2020 #Rivalry

"கிளென் மெக்ராத்தை போல பேட்டிங் ஆடுபவர்... ரிக்கி பான்ட்டிங் போல பெளலிங் போடுபவர்!" என மார்க்கஸ் ஸ்டாய்னிஸை கலாய்க்கும் மீம் ஒன்று சில நாட்களாக சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால், அந்த மீமால் மகிழ்ந்தவர்களுக்கு நேற்று பதிலடி கொடுத்தார் ஸ்டாய்னிஸ். அதுவும் ரிவர்ஸ் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட்டான கிறிஸ் ஜோர்டனின் பெளலிங்கில்.

பஞ்சாபுக்கு எதிரான நேற்றைய போட்டியை டெல்லி கேப்பிட்டல்ஸ் வென்றதற்கு மிக முக்கிய காரணம் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ். பேட்டிங்கில் கடைசி 3 ஓவரில் குறிப்பாக 20-வது ஓவரில் ஸ்டாய்னிஸ் அடித்த மரண அடிதான் டெல்லியை 157 ரன்களை எடுக்க வைத்தது. ஜோர்டன் வீசிய 20-வது ஓவரில் ஸ்டாய்னிஸ் மட்டும் 27 ரன்களை வெளுத்தார். அந்த ஓவரில் மொத்தமாக 30 ரன்கள். ஜோர்டன் வீசிய 18-20 ஆகிய இரண்டு ஓவர்களில் மட்டும் 38 ரன்களை அடித்திருந்தார் ஸ்டாய்னிஸ்.

Marcus Stoinis

அதேமாதிரி பௌலிங்கிலும் அஷ்வின் காயமடைந்ததால் வேறு வழியின்றி பந்துவீச வந்த ஸ்டாய்னிஸ் கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தார். பஞ்சாப் அணி கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் ஜோர்டன் ஸ்ட்ரைக் எடுக்க அவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார் ஸ்டாய்னிஸ். ஜோர்டன் நல்ல ஸ்ட்ரைக்கர். அதிரடி சிக்ஸர்கள் அடிக்கக்கூடியவர். ஆனால், அவரை முடக்கினார் ஸ்டாய்னிஸ்.

ஸ்டாய்னிஸ் vs ஜோர்டன் ரைவல்ரி நேற்று தொடங்கியதல்ல. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடரிலேயே பகை தொடங்கிவிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி அனைவருக்கும் ஞாபகமிருக்கும். 162 ரன்களை சேஸ் செய்யும் போது வார்னர் - ஃபின்ச் தரமான ஓப்பனிங் கொடுத்து கையிலிருந்த ஒரு சூப்பரான மேட்ச்சை பயங்கரமாக சொதப்பி தோற்றிருக்கும். அந்த ஆட்டத்தில் கடைசி 5 ஓவரில் 34 ரன் எடுக்க வேண்டும் என்ற சூழலில் ஸ்டாய்னிஸ் உள்ளே வருவார். ஆட்டத்தின் முடிவில் ஆஸி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும். ஐ.பி.எல்-ல் ஒரு ஓவருக்கு 27 ரன்கள் அடித்த ஸ்டாய்னிஸால் அங்கே 5 ஓவருக்கு 34 ரன்களை அடிக்க முடியவில்லை.

Chris Jordan

அந்தப் போட்டியின் 19-வது ஓவரை ஜோர்டன்தான் வீசினார். கடைசி இரண்டு ஓவர்களில் 19 ரன் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் ஜோர்டன் வீசிய அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே. ஜோர்டனின் பந்துகளை தடுத்தாடவே திணறினார் ஸ்டாய்னிஸ். காரணம், ஜோர்டனின் யார்க்கர் + வேரியேஷன்கள். ஷார்ட், ஃபுல் என பல லென்த் வேரியேஷன்களையும் லைனையும் பக்காவாக பிடித்து வேகத்தையும் மாற்றி மாற்றி சிறப்பாக பந்து வீசி ஸ்டாய்னிஸை தடுமாறவைத்தார் ஜோர்டன். ஃபினிஷர் ரோல் செட் ஆகாததால் ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டரில் இறக்கப்பட்டார் ஸ்டாய்னிஸ். அங்கேயும் ஸ்டாய்னிஸ் பர்ஃபார்ம் செய்யவில்லை. இந்த சூழலில்தான் துபாய் வந்தார். அந்த கடைசி மூன்று ஓவர்களில் மேஜிக் நடந்தது.

Also Read: #DCvsKXIP தோற்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே... ரகிட ரகிட ரகிட ஊ!

ஆஸி அணியே ஃபினிஷர் ரோலில் ஸ்டாய்னிஸ் செட் ஆகவில்லை என முடிவெடுத்தபோது அவரை தைரியமாக மீண்டும் ஃபினிஷிங் ரோல் ஆடவைத்து வெற்றிபெற்றிருக்கிறார் ரிக்கி பான்ட்டிங். இங்கிலாந்தில் ஜோர்டனிடம் இருந்த வேரியேஷன் எதுவுமே நேற்று அந்த கடைசி ஓவரில் அவரிடம் இல்லை. பிட்ச் பவுன்ஸுக்கு ஒத்துழைத்தது. ஆனால், கடைசி ஓவரில் ஒரு பவுன்சர் கூட இல்லை. ஜோர்டன் நல்ல யார்க்கர் வீசுவார். ஆனால் அந்த ஓவரில் ஒரு யார்க்கர் கூட விழவில்லை. இங்கிலாந்தில் விட்டதற்கும் சேர்த்து வைத்து இங்கே வெளுத்தெடுத்துவிட்டார் ஸ்டாய்னிஸ்.

ஸ்டாய்னிஸ் | Marcus Stoinis

முதலில் சொன்ன மீமுக்கு வருவோம். அந்த மீமில் உண்மையில்லை. கடந்த டிசம்பர் - ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பேஷ் தொடரின் ஹீரோ ஸ்டாய்னிஸ்தான். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய 17 போட்டிகளில் 705 ரன்கள் அடித்திருந்தார் ஸ்டாய்னிஸ். ஒரு போட்டியில் அதிகமாக 147* ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று மிரளவைத்தார்.

அதனால், கொஞ்சம் பொறுத்திருப்போம். இன்னும் பல ஆச்சயர்ங்களைப் பரிசளிப்பார் ஸ்டாய்னிஸ்!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-the-history-of-stoinis-vs-jordan-rivalry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக