அஸ்ஸாமில் நிகழும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், 2019-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளின் சராசரி அளவைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. அதிகரிக்கப்பட்டது குற்றங்களா அல்லது குற்ற அறிக்கைகளா எனக் கேட்டால் இரண்டுமேதான்.
இதைக் குறைக்கும் நோக்கிலும், பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலும் அஸ்ஸாமில் இருக்கும் பெண்களுக்கான அமைப்புகள், தங்கள் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி மாநிலத்தில் உள்ள கட்சிகளிடமும் வேட்பாளர்களிடமும் கோரிக்கை வைப்பது போன்று தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. 'மகளிர் அறிக்கை 2021' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் பெண்களுக்கான குற்றங்களைக் குறைப்பது குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் அஸ்ஸாம் முதலிடம் வகிப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தன்னுடைய அதிகாரபூர்வ புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கடத்தல், குடும்ப வன்முறை, 2016 - 2019 வருடங்களில் அஸ்ஸாமில் அதிகரித்து உள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட, தேசியக் குடும்ப நலன் ஆய்வு 5-ன் தரவுகளிலும் அஸ்ஸாமில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் வசிக்கும் 30%-க்கும் மேற்பட்ட பெண்கள், குடும்பத்தினர் மூலமாக வன்முறைக்கு உள்ளாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2015- 2016-ம் ஆண்டு கருத்துக் கணிப்பில் 24.5% ஆக இருந்தது. அதே போன்று இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகள் 2015-2016-ம் ஆண்டில் 5.8% ஆக இருந்தது; தற்போது 8% ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாம் காவல்துறையினரோ, 'மாநிலத்தில் உள்ள நகர்ப்புறங்களில் பெண்களின் முன்னேற்றம் அதிகரித்து வருவதால்தான் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அஸ்ஸாமில் நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது' என்கின்றனர்.
ஆனால், கிராமப்புறத்தில் குடும்ப வன்முறை தரவுகளில், இந்தியாவின் மூன்றாவது முக்கிய மாநிலமாக அஸ்ஸாம் இருக்கிறது எனத் தேசிய குடும்ப நல கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பெண்கள் நல அமைப்புகள் கூறுகையில், 'இந்தக் கருத்துக்கணிப்பில் கூறியிருப்பது உண்மைதான். சொல்லப்போனால் இந்தக் கருத்துக்கணிப்பு பனிப்பாறையின் நுனி போன்றதுதான். இதுபோன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் நடைபெறும் பட்சத்தில் நாம் பின்னோக்கியே செல்வோம். ஆணாத்திக்கத்தை எதிர்த்துப் பெண்கள் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்' என்றனர்.
வடகிழக்கு நெட்வொர்க் (NEN), பூர்வ பாரதி கல்வி அறக்கட்டளையில் உள்ள பெண்கள் மற்றும் அதிகாரிகள், பெண்கள் தலைமைப் பயிற்சி மையம் மற்றும் Xobdo ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள மகளிர் அறிக்கையில், பாலியல் வன்கொடுமை, நெருங்கிய உறவுக்குள் நடக்கும் கொடுமை, குடும்ப வன்முறை, ஆசிட் அட்டாக், கடத்தல், சைபர் கிரைம் மற்றும் குழந்தை திருமணங்கள் தங்கள் மாநிலத்தில் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் தங்களுடைய தனிப்பட்ட இடங்களான வீடு, பணியிடம் போன்றவற்றிலும், பொதுப் போக்குவரத்து, சந்தை போன்றவற்றிலும் வன்முறையை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர். இதற்குத் தீர்வு காணும் வகையில் மாவட்டம், பஞ்சாயத்து மற்றும் மாநில அளவில் மகளிர் நல அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும்,181 பெண்கள் ஹெல்ப் லைனை அஸ்ஸாமின் கடைக்கோடி வரை கொண்டு செல்ல வேண்டும் என்றும், அஸ்ஸாமில் இருக்கும் சில சட்டங்களைத் தகுந்த சீர்திருத்தங்களுடன் அமல்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்துவரும் குடும்ப வன்முறை, துன்புறுத்துதல் மற்றும் கடத்தல்...
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள பெண்களில் 3%-க்கும் குறைவான பெண்கள் அஸ்ஸாமில் உள்ளனர். ஆனால், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் 7.4% குற்றம் அஸ்ஸாமில் நடந்திருப்பதாக 2019-ம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. டெல்லியில் 2015-லிருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
யுனிசெஃப் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டு அறிக்கையின்படி அசாமில் 33% பெண்களுக்கு 18 வயதுக்குள்ளாகவே திருமணம் நடக்கிறது. இந்த சதவிகிதம் வடகிழக்கு மற்றும் மொத்த இந்தியாவைவிட அதிகமாகும்.
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வது மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் அஸ்ஸாம் மற்ற பெரிய மாநிலங்களைவிட முன்னிலையில் உள்ளது.
இது குறித்து அஸ்ஸாம் மாநில முதலமைச்சரின் சிறப்பு கண்காணிப்பாளர் ரோசி கலிதா கூறுகையில், 'தற்போது அதிகக் குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பெண்கள் எச்சரிக்கையாக உள்ளனர். அவர்கள் எங்கேயும் வன்முறையை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் காவல் நிலையம்கூட வர வேண்டிய தேவை இல்லை. மின்னஞ்சலிலே புகாரை அளித்து எஃப்.ஐ.ஆர் பெற்றுக் கொள்ளலாம்' என்று கூறியிருக்கிறார்.
மேலும் ரோசி கலிதா, 2013-ம் ஆண்டு நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துரைகள் கூறியதன் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான விசாரணை மற்றும் தண்டனைகள் கொடுப்பது துரிதமாகியுள்ளது என்றும், சில அறிக்கைகளில் விவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், காவல்துறையில் குற்றங்கள் பதிவு செய்யப்படுவது அதிகமாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் NCRB வெளியிட்டுள்ள அறிக்கையின்படி காவல்நிலையங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. அதேபோல 'நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் சதவிகிதமும் அதிகமாக உள்ளது. 39% வழக்குகளின் விசாரணை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது' என்கிறது ஆய்வு. இதற்கு, நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்படுவதும், தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகளை நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தாததும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
இது குறித்து கூறிய கலிதா, 'விசாரணை மெதுவாக நடப்பதற்குத் தடயவியல் விசாரணையும் முக்கியக் காரணமாக உள்ளது. பெரும்பாலும் எங்கள் மாநிலத்தில் அதற்கான வேதிப்பொருள்கள் கிடைக்காததால், வெளி மாநிலங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதிக்கிறோம்' என்றார்.
அஸ்ஸாமில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், மாநிலப் பெண்கள் அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள மகளிர் தேர்தல் அறிக்கை நிலைமையின் தீவிரத்தை தேசத்துக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.
Source:
- Sreeparna Chattopadhyay / Indiaspend.org
(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.)
தமிழில்: வெ.கௌசல்யா
source https://www.vikatan.com/social-affairs/women/election-manifesto-on-minimizing-violence-against-women-released-in-assam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக