Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

`இவற்றையெல்லாம் செய்தால் ஓய்வுக்காலத்தை பயமின்றி கழிக்கலாம்!' - பணம் பண்ணலாம் வாங்க - 53

தேடி நிதம் சோறு தின்று, வண்டி வாகனங்களில் ஓடி நைந்து, நைன் டு ஃபைவ் வெந்து நொந்து, வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு பெரிய குட்பை!

நிதானமாக எழுந்து, குளிர்ந்த காலை வேளையில் வாக் போகலாம்; யோகா செய்யலாம்; பிடித்த தெய்வத்துக்கு ஆராதனை செய்யலாம்; காய்கறிகளைப் பொறுக்கி வாங்கி, பொறுமையாக சமைத்து சாப்பிடலாம். மத்தியானம் ஒரு குட்டித் தூக்கம்; சாயங்காலமானால் கோவில், டிவி, அப்புறம் அரட்டை! இனி எல்லாவற்றுக்கும் நேரம் இருக்கப் போகிறது.

- பணி ஓய்வு பெற்றபின் நடக்கும் இந்த விஷயங்களையெல்லாம் இப்போது நினைக்கும்போது இனித்தாலும், கூடவே ஒரு பயமும் வருகிறது. மாதாமாதம் வந்த பணம் இனி வரப்போவதில்லை என்பதான பயம். அந்த பயத்தைக் கடப்பதற்கான வழிமுறைகளைக் காண்போம்.

Investment (Representational Image)

கடந்து வந்த பாதை

பணி ஓய்வு பெறும் முன் அனேகமாக நம் வாழ்வின் முக்கியமான மைல் கற்களைக் கடந்திருப்போம். பிள்ளைகள் படிப்பு, திருமணம், நமக்கு ஒரு வீடு என்று பல பெரிய செலவுகளை சமாளித்து முடித்திருப்போம்; அல்லது சமாளிக்கத் தயாராக இருப்போம். ரிட்டயர்மென்ட்டுக்கும் ஓரளவு சேர்த்திருப்போம். பணி ஓய்வு என்பது அனைவர் வாழ்விலும் வரக்கூடிய ஒரு முக்கியமான நிகழ்வு. சிறிது திட்டமிட்டு இறங்கினால், ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்.

போர்ட்ஃபோலியோவில் முக்கிய இடம் பிடிக்கும் மூன்று திட்டங்கள்

பணி ஓய்வுக்குத் திட்டமிடல் எவ்வளவு சீக்கிரம் துவங்குகிறதோ, அவ்வளவு நல்லது. அதனால்தான் அரசு,

- ப்ராவிடென்ட் ஃபண்ட்,

- வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்ட்,

- பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் என்று மூன்று திட்டங்களை முன்வைத்துள்ளது.

ரூ.15,000/-க்கு மேல் மாத சம்பளம் பெறுவோர்க்கு மாதா மாதம் சம்பளத்தின் (பேசிக் + டிஏ) ஒரு பகுதி (தற்போது 12%) ப்ராவிடென்ட் ஃபண்டாகப் பிடிக்கப்படுகிறது. இதில் 8.33% பென்ஷன் ஸ்கீமுக்கும் மீதி 3.67% ப்ராவிடென்ட் ஃபண்ட் அக்கவுன்ட்டுக்கும் செல்கிறது. கம்பெனியும் தன் பங்காக 12% செலுத்துகிறது. அரசு இதனைப் பல வித முதலீடுகளில் ஈடுபடுத்தி, பணி ஓய்வு பெறுகையில் நமக்கு வட்டியுடன் தருவதுதான் ப்ராவிடென்ட் ஃபண்ட்.

இதன் முக்கியத்துவம் உணர்ந்து அதிகம் செலுத்த விரும்புவோர், தங்கள் சம்பளத்தில் (பேசிக் + டிஏ) 100% வரை வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்டாக செலுத்தலாம்; ஆனால் இதில் கம்பெனி தன் பங்காக எதையும் செலுத்தாது.

பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் என்ற அஞ்சலகத் திட்டம் பற்றி அத்தியாயம் பன்னிரண்டில் முழுமையாகப் பார்த்தோம். சுய தொழில் செய்வோர் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் இதில் வருடத்திற்கு ரூ. 1.50 லட்சம் வரை சேமிக்கலாம்.

Also Read: ஓய்வுபெறுபவர்களின் நம்பர் 1 சாய்ஸ் இந்த அஞ்சலக திட்டம்தான்; ஏன் தெரியுமா?- பணம் பண்ணலாம் வாங்க-12

மேற்கண்ட மூன்று திட்டங்களிலுமே செலுத்தும் பணத்திற்கு, சேரும் வட்டிக்கு மற்றும் திரும்பும் தொகைக்கு என்ற மூன்று கட்டங்களிலுமே Exempt, Exempt, Exempt என்பதாக வரி விலக்கு கிடைப்பது நமது பணம் தடையின்றி வளர பேருதவியாக இருக்கிறது. நம் அனைவரின் போர்ட்ஃபோலியோவிலும் இந்த மூன்று திட்டங்களுமே இடம் பிடிப்பது ஓய்வுக் காலத்தை எதிர்கொள்ள உதவும்.

Investment (Representational Image)

பயமுறுத்தும் எதிர்காலத்தைப் பணியவைக்கும் வழிகள்

பைனான்ஸ் உலகம் `குரு’ என்று போற்றும் வாரன் பஃபெட், இனி ரிட்டயர் ஆகப் போகிறவர்கள் குறித்துக் கவலை தெரிவிக்கிறார். ஏனெனில் பணி ஓய்வு பெறுபவர்கள் கையில் வரக்கூடிய மொத்தத் தொகையை வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட்டாக வைத்து மாதா மாதம் வரக்கூடிய வட்டியில் வாழ்க்கை நடத்த விரும்புகிறார்கள். ஆனால் வங்கிகள் தரும் வட்டி விகிதம் (சீனியர் சிட்டிசன்களுக்கு கொஞ்சம் அதிகம் என்றாலும்) ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்து வருகிறது. இன்றைய தேதியில் உலக அளவில் இருபது நாடுகளிலாவது 0% வட்டி நிலவுகிறது. ஜப்பானில் நம் பணத்தை வங்கிகள் பத்திரமாக வைத்திருப்பதற்கு நாம்தான் கட்டணம் செலுத்தவேண்டும்.

மனித முயற்சியால் உலகம் கையளவாக சுருங்கிவிட்டது என்று பெருமைப் படுகிறோம்; ஆனால் அடுத்த நாட்டில் நிலவும் எதிர்மறை (Negative Rate) வட்டி விகிதங்கள் நம் நாட்டிலும் அரங்கேற அதிக காலம் பிடிக்காது என்பதை மறந்து விடுகிறோம். அப்படி வட்டி விகிதம் சுருங்கிய நிலையில் சீனியர் சிட்டிசன்கள் நிலையான மாத வருமானம் பெற தங்கள் முதலீடுகளை, வங்கிகளைத் தாண்டி விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

Senior Citizens (Representational Image)

Also Read: வரிச்சுமையைக் குறைக்க அரசே தரும் வழிகள் இவைதான்! - பணம் பண்ணலாம் வாங்க - 52

- தற்போது சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் (7.40% வட்டி, அதிகபட்ச முதலீடு 15 லட்சம், ஐந்து வருடங்களுக்கு),

- எல்.ஐ.சி.யின் வயவந்தன யோஜனா (7.40% வட்டி, அதிகபட்ச முதலீடு 15 லட்சம், பத்து வருடங்களுக்கு)

- மற்றும் ரிசர்வ் வங்கியின் ஃப்ளோட்டிங் ரேட் பாண்டுகள் (தற்போது 7.15% வட்டி, முதலீட்டுக்கு உச்ச வரம்பு இல்லை, ஏழு வருடங்களுக்கு)

போன்ற திட்டங்கள் ஓய்வு பெறுவோர்க்கு ரிஸ்க் இல்லாத வருமானம் தருபவையாக இருக்கின்றன. இவை தவிரவும் இருக்கக்கூடிய வேறு வழிகளை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

- இனி அடுத்து திங்கள் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.



source https://www.vikatan.com/business/finance/a-simple-guide-to-investment-schemes-which-helpful-for-post-retirement-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக