Ad

திங்கள், 27 டிசம்பர், 2021

திரைப்பட விழாக்கள் ஏன் இன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன? #MyVikatan

ஒரு பக்கம் இணையவெளியெங்கும் திரைப்படங்கள் அசலாகவோ, நகலாகவோ கொட்டிக் கிடக்கின்றன. மறு பக்கம் ஓ.டி.டி. பிளாட்பாரத்தில் சந்தா செலுத்தி இன்று வெளியாகும் படத்தைக்கூட இன்றே பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இப்படி எந்தவொரு திரைப்படத்தையும் வீட்டின் வரவேற்பறையிலேயே பார்க்க முடிகிற இன்றைய காலகட்டத்தில் திரைப்பட விழாக்களுக்கு என்ன தேவை இருக்கிறது?

இதற்கு ஒன்றல்ல, இரண்டல்ல... பத்து காரணங்களைப் பட்டியலிட முடியும்!

1. திரைக் கலைஞர்கள் + ரசிகர்களின் சங்கமம்!

திரைப்பட விழா தவிர வேறெந்த வழிமுறையிலும் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒரே இடத்தில் குழுமுவது மிக அரிது. ஒருவருக்கொருவர் உரையாடவும், படைப்பின் வீச்சை உணரவும், அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் அனைத்துத் தரப்பினருக்கும் இது வாயிலாக அமைகிறது. எத்தனையோ புதிய திரைப்படங்களுக்கான எண்ணங்கள் திரைப்பட விழாக்களில் உருவாகியிருப்பதை நாம் அறிவோம்.

2. திட்டமிடப்பட்ட, ஒழுங்குமுறையில் அமைந்த அனுபவம்!

வீட்டிலேயே திரைப்படங்கள் பார்க்கும் வசதிகள் இருந்தாலும், அவற்றைப் பூரணமாகப் பயன்படுத்துவது மிகக் குறைவு. திரைப்பட்ட விழாக்களில்தான் திட்டமிடப்பட்டபடி ஏராளமான திரைப்படங்களைக் குறிப்பிட்ட சில நாள்களுக்குள் கண்டு களிக்க முடியும். உதாரணமாக... சென்னை சர்வதேச திரைப்பட விழாக்கள் பத்தொன்பதிலும் பங்கேற்ற ஒருவரால் 500-க்கும் அதிகமான உலகத் திரைப்படங்களைக் கண்டு களித்திருக்க முடியும். இப்படியொரு வசதி வேறெந்த மீடியத்திலும் கிடையாது.

3. இது மொபைல் திரையல்ல!

ஐந்து இன்ச் மொபைல் அல்லது 40 இன்ச் டிவி திரையல்ல திரைப்பட விழாக்களின் வெள்ளித் திரைகள். சராசரியாகப் பார்த்தாலே திரையின் அகலம் 60 அடியைத் தாண்டும். இப்படியான பிரமாண்ட திரைகளில் உலகத் திரைப்படங்களைப் பார்ப்பது ஓர் அலாதி அனுபவம்!

Film Festival

4. நட்பின் வலிமை!

திரைப்பட விழாக்களில் சந்தித்து நட்பாகி அது காலங்கள் தாண்டியும் வலுவாக இருப்பதை நாம் இங்கு பார்க்க முடியும். ஒருமித்த உயர் ரசனையை இவர்களுக்கிடையே நடக்கும் விவாதங்கள் மேம்படுத்துகின்றன.

5. கற்றல் வழிமுறை!

திரைப்பட விழாவில் காட்டப்படம் படம் என்பது வெறும் திரைப்படம் மட்டுமே அல்ல. அது புதிய தேடலுக்கான திறவுகோல். ஒரு சுவாரஸ்யமான கற்றல் வழிமுறையாகவே பல உலகத் திரைப்படங்கள் விளங்குகின்றன. கலைஞர்களுடான நேர்முகம் மட்டுமல்ல; காட்சி முடிந்து தேநீரோ, உணவோ உட்கொள்ளும்போது நட்டைபெறும் உரையாடலில்கூட இந்தக் கற்றல் அனுபவம் பல்கிப் பெருகுகிறது. குறிப்பாகத் திரைப்படக் கல்லூரி, விஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன் மாணவர்களுக்குத் திரைப்பட விழாவைவிடச் சிறந்த வகுப்பறை உண்டா, என்ன?

6. உலகைக் காட்டும் உன்னத விழா!

உலகத் திரைப்பட விழாவில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும்... இன்று எந்த உலகம் எப்படி இருக்கிறது என்று. ஒவ்வொரு நாட்டின் கலை, கலாசாரம், வாழ்வியல், அரசியலை திரைப்படங்களைவிட வேறெந்த ஊடகத்தால் மிகச்சிறப்பாகப் பதிவு செய்ய முடியும். இந்தத் திரைப்படங்கள் நமக்கு உலகின் ஜன்னலாகத் திகழ்கின்றன.

7. கதை கேட்டு வளர்ந்தவர்களின் நவீன காதுகள்!

பாரம்பரியமாகவே கதை கேட்டு வளர்ந்தவர்கள் நம் மக்கள். இன்று அந்தப் பழக்கம் அருகி வருகிறது. புதிய தலைமுறையினர் கதை கேட்காமல் மொபைல், டிவி சத்தத்திலேயே வளர்ந்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர்களை கதைகள் பால் ஆர்வம் கொள்ளச் செய்வது திரைப்பட விழாக்கள்தாம். ஒவ்வொரு திரைப்படமும் ஒரு கதை; அதற்குள் பல கவிதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள் நம் கண்களுக்குள் பதிவாகும்,

ஒரு நல்ல கதை நமக்குள் புகுந்து என்னவெல்லாம் செய்யும் என்பது நமக்குத் தெரியும். அதை இந்தத் திரைப்படங்களும் செய்யும்.

8. திரைக் கலைஞர்களுக்கான ஊட்டச்சத்து!

சினிமாவே வாழ்க்கையென திரை உலகுக்கு உள்ளேயே வாழ்க்கையை வைத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான கலைஞர்களுக்குத் திரைப்பட விழாக்களைவிட சிறப்பான ஊட்டச்சத்து வேறெதுவும் கிடையாது. இந்த விழாவின் முடிவில் அவர்கள் எடுத்துச் செல்லும் விஷயங்கள் பார்வையை மாற்றும்; அமைதியை புயலாக மாற்றி மையம் கொள்ள வைக்கும். சுனாமியைக்கூட சிறையில் அடைத்துச் சிரிக்கும்!

film festival

9. உள்ளூர் திரைப்படங்களை உயர்த்தும்!

உள்ளூர் ரசிகர்களைத் தாண்டி ஒரு திரைப்படத்தை உலகெங்கும் எடுத்துச் செல்வது திரைப்பட விழாக்களே. அது மட்டுமல்ல; திரைப்பட விழாக்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கிற கலைஞர்கள் உருவாக்கும் படங்களின் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் அபாரமான அளவில் உயர்ந்து வருவதையும் நம் உணர்வோம்.

10. எல்லா நல்ல விஷயங்களும் இணையத்தில் கிடைத்துவிடாது!

இணையத்தில் தேடினால் எல்லாமே கிடைக்கும் என்பது ஒரு மாயை! உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பல படங்களை இணையத்தில் எவ்வளவு தேடினாலும் எடுக்கவே முடியாது. மேலும் சில படங்களைச் சில குறிப்பிட்ட திரைப்பட விழாக்களில் குறிப்பிட்ட நாளன்று மட்டுமே காண முடியும். இப்படி பல அரிய பொக்கிஷங்களைத் தனக்குள் வைத்திருக்கிறது சென்னை சர்வதேச திரைப்பட விழா.

இந்த 10 விஷயங்களால் மட்டுமல்ல; இன்னும் ஏராளமான சிறப்புச் செயல்பாடுகளால் சென்னை திரைப்பட விழாவின் முக்கியத்துவம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டின் சென்னை சர்வதேச திரைப்பட விழா 2021 டிசம்பர் 30 அன்று தொடங்கி 2022 ஜனவரி 6 வரை நடைபெறுகிறது. 8 நாள்கள் நீடிக்கும் இந்தத் திரைத் திருவிழாவின் படங்களை சத்யம் வளாகம் மற்றும் அண்ணா திரையரங்கில் கண்டு களிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: https://chennaifilmfest.com

- ப.பிரபு



source https://cinema.vikatan.com/tamil-cinema/importance-of-film-festivals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக