Ad

வெள்ளி, 31 டிசம்பர், 2021

``ஜெயிக்கிறது இல்ல; எங்களைத் தேடி வர்ற அந்தப் பாசம்தான் மோட்டிவேஷன்!" - புறா பந்தயங்களின் கதை

தஞ்சாவூர் அருகே உள்ள புற வளர்ப்போர் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட புறா பந்தயத்தில் திருவண்ணாமலையிலிருந்து 170 கிலோ மீட்டரை இரண்டு மணி நேரத்தில் புறாக்கள் பறந்து கடந்து சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதாக அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். குழந்தையைப் பராமரிப்பது போல் பராமரித்து புறாக்களை வளர்ப்பதாகக் கூறும் அவர்கள் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போலவே புறா பந்தயமும் பாரம்பர்ய விளையாட்டுதான் என்றும், இதை ஊக்குவிக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை வைக்கின்றனர்.

புறா வளர்ப்பவர்கள்

Also Read: `பாம்புகள் இதற்காகத்தான் விஷத்தைப் பயன்படுத்துகின்றன!' - பாம்புக்கடியும் மூடநம்பிக்கைகளும்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் புறா வளர்ப்பதிலும், புறா பந்தயம் நடத்துவதிலும் ஆர்வம் கொண்டவர்கள், பாபநாசம் ரேஸிங் பீஜியன் சொஸைட்டி என்ற பெயரில் சங்கத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு புறா பந்தய போட்டிகளை நடத்தியுள்ளனர். கடந்த 25-ம் தேதி திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட போட்டியில் 170 கிலோ மீட்டரை 2 மணி நேரம் 11 நிமிடத்தில் பண்டாரவாடை சென்றடைந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய வெற்றி பெற்றன இவர்களது புறாக்கள்.

ஒரு மனிதன் வாகனம் மூலம் சென்றாலே குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும். ஆனால், இந்தப் புறாக்கள் 2 மணி நேரத்தில் சென்றிருக்கிறது என ஆச்சர்யம் பொங்க பேசி வருகின்றனர் புறா வளர்ப்பில் ஆர்வம் கொண்டு வளர்த்து வருபவர்கள். பாப நாசம் ரேஸிங் பீஜியன் சொஸைட்டியின் தலைவர் அபுவிடம் பேசினோம். ``எங்க சங்கத்துல 40 பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. எல்லோருமே பல வருடங்களாகப் புற வளர்ப்பில் ஈடுபட்டு வருவதுடன் ஒவ்வொருவரும் 50 புறாக்கள் வரை வளர்த்து வருகின்றனர்.

புறா

சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு போன்றவை பாரம்பர்ய போட்டிகளாக, கலைகளாகப் பார்க்கப்படுகின்றன. அதே போல் புறா பந்தயமும் பாரம்பர்யமாக மன்னர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. தொலை தூரம் பறந்து செல்லக்கூடிய சக்தி கொண்ட பறவையான புறாவை மன்னர்கள் தூது அனுப்புவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். போதுமான பயிற்சி கொடுத்தால் எவ்வளவு தூரத்தையும் புறா எளிதில் கடந்து விடும்" என ஆர்வமாகப் பேசத் தொடங்கினார்.

வளைய ஒன்றில் சீக்ரெட் நம்பர் இருக்கும். அந்த நம்பரை புறாவின் காலில் ஒட்டி விடுவோம். அம்பயர் எனச் சொல்லப்படுகிற கன்வேயரிடமும் சீக்ரெட் நம்பர் இருக்கும் அவர் போட்டிகளைக் கண்காணிப்பதுடன் சங்கத்துக்கு வந்து போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடிய புறாக்களை பேனரிங் பாக்ஸில் அடைத்து பந்தயம் நடக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்வார்கள். ஒவ்வொரு போட்டியையும் இரண்டு கன்வேயர்கள் நடத்துவார்கள்.

எந்த ஊரில் போட்டி நடக்கிறதோ அந்த ஊருக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு அந்த நேரத்தில் யங், ஓல்டு என எந்த புறா பந்தயம் நடைபெறுகிறதோ அந்த புறாக்களைத் திறந்து விடுவார்.

புறா காலில் சீக்ரெட் நம்பர்

அங்கிருந்து புறாக்கள் வளர்க்கப்படும் இடத்துக்குச் சென்று விடும். எந்தப் புறா முதலில் வருகிறதோ அந்தப் புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

புறா வளர்ப்பவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள். தங்கள் புறா வந்தடைந்ததும் வளையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சீக்ரெட் நம்பரைப் பார்த்து அதை அந்த அப்ளிகேஷனில் பதிவு செய்து விடுவார்.

இதில் எந்தப் புறா முதலில் சென்றது என்பதை அறிந்து கன்வேயர் வெற்றிப் புறாவை அறிவிப்பார். வெற்றி பெற்ற புறாவுக்கு விழா நடத்தி கோப்பை, சான்றிதழ் கொடுப்படும். கார், பைக் போன்றவை பரிசாக அறிவிக்கப்படும் பந்தயங்களும் நடைபெற்றுள்ளன.

கடந்த வாரம் திருவண்ணாமலையில் நடைபெற்ற போட்டியில் யங், ஓல்டு என இரண்டு பந்தயத்திலும் மொத்தம் 22 உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் புறாவை பந்தயத்தில் ஈடுபடுத்தினர். இதில் ஓல்டில் 65 புறாக்கள் போட்டியில் கலந்து கொண்டன. 170 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக இரண்டு மணி நேரம் 11 நிமிடத்தில் வந்தடைந்த புறா முதல் பரிசு பெற்றது. இதே போல் யங் புறா பந்தயத்தில் மொத்தம் 57 புறாக்கள் கலந்து கொண்டன. ஒரு நபர் மூன்று புறாவை பந்தயத்தில் ஈடுப்பட வைத்தனர். இதில் இரண்டு மணி நேரம் ஏழு நிமிடத்தில் பறந்து வந்த புறா வெற்றி பெற்றது.

புறா கூண்டு

அடுத்து ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களிலிருந்து போட்டியை நடத்த எங்கள் சங்கத்தினர் திட்டமிட்டு அதற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர். போட்டி நடக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து அந்த இடத்திலிருந்து புறா வளர்க்கக் கூடிய இடத்துக்கு வருவதற்கு புறாவுக்கு பயிற்சி கொடுப்போம். 5 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பயிற்சி கொடுக்கத் தொடங்கி பந்தயம் நடக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதி வரை சென்று பயிற்சி கொடுப்போம்.

பந்தயத்தில் கலந்துகொள்ளும் புறாவை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக இரண்டு மாதத்திற்கு முன்னரே தயார் செய்ய தொடங்கிடுவோம். பல நூறு கிலோ மீட்டரில் திறந்து விடப்படும் புறா கழுகு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளைக் கடந்து வளர்த்தவரை தேடி, வளர்க்கும் இடத்துக்கு பறந்து வந்து சேரும். இதில் பரிசு, பாராட்டெல்லாம் இரண்டாம் பட்சம்தான்; வளர்த்தவரை தேடி அந்தப் புறா வரும் அந்தப் பாசம்தான் எங்களைப் புறா வளர்ப்பதிலும், பந்தயத்தில் பங்கெடுக்க வைப்பதற்காக ஆர்வத்தைப் பெருக்கி வருகிறது. புறாவுக்கு பாசம் உண்டு எங்கள் மேல் புறாவும், அதன் மேல் நாங்களும் வைத்திருக்கும் பாசத்தையே இந்தப் பந்தயங்கள் உணர்த்துகின்றன" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கெளரவத் தலைவரான சையது சுல்தான் என்பவர், ``புறாக்களில் மொத்தம் 300 வகை உள்ளன. ரேஸுக்காக வளர்க்கக்கூடிய இந்தப் புறாக்களை ஹோமர் புறாக்கள் என அழைக்கிறோம். இதில் தொலை தூர பந்தயத்தில் பங்கேற்கும் புறாக்களையே மன்னர்கள் காலத்தில் தூது சொல்வதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

அபு

ஒரு குழந்தையை எப்படி பராமரிப்போமோ அதே போல்தான் புறாக்களைக் கவனித்து வருகிறோம். பந்தயம் என்றால் கண்ணைக் காக்கும் இமை போல புறாவைக் காக்க வேண்டும். சோளம், கோதுமை, கம்பு உள்ளிட்ட 25 வகையான உணவுகள் புறாக்களுக்குக் கொடுக்கிறோம். அகலமான தண்ணீர் நிரப்பப்பட்ட டிரேயில் படிகாரக் கல், மஞ்சள் தூள், வசம்பு போன்றவற்றைக் கலந்து வாரம் ஒரு முறை குளிக்க வைப்போம். பூச்சிகள் அண்டாமல் இருப்பதற்காக இதைச் செய்கிறோம்.

40 புறா வளர்க்க மாதம் ரூ. 4,000 வரை செலவாகும். ஒரு புறாவின் ஆயுள் காலம் குறைந்தது 15 வருடங்கள் அதிகபட்சமாக 20 வருடங்கள் வரை உயிர் வாழும். ப்ளு கிராஸ், வனத்துறையிடம் முறைப்படி அனுமதி வாங்கியே புறா பந்தயங்கள் நடப்பட்டு வருகின்றன. ஒரு மணி நேரத்துக்கு 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு பறக்கும் தன்மை கொண்டது புறா. பந்தயத்தில் கலந்துகொள்ளும் புறாவுக்கு குடலில் உள்ள பூச்சிகள் நீக்குவோம், ஆக்டிவாக இருக்க, பறக்க மாத்திரை உள்ளிட்ட பலவிதமான செயல்களைச் செய்வோம்.

இதற்கு முன் டெல்லியில் நடத்தப்பட்ட போட்டியில் 1,800 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வந்து புறா வெற்றி பெற்றிருப்பது இப்போது வரை ஆச்சர்யத்துடன் பேசப்பட்டு வருகிறது. எந்தத் திசையிலும் திறந்து விட்டாலும் வளர்த்தவனை தேடி அந்தப் புறா வந்து சேரும். அப்போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு ஈடேதும் இருக்காது. அதற்காகத்தான் பல சிரமங்களைக் கடந்து புறாக்களை வளர்த்து வருகிறோம். புறா பந்தயத்தையும், அதை வளர்ப்பதையும் சிலர் ஏளனமாகப் பார்ப்பதும் இருந்து வருகிறது.

புறா சங்கத்தினர்

Also Read: திருச்சி ஊர்ப்பெருமை: உழவு, ஜல்லிக்கட்டு, பந்தயவண்டி மாடுகள் - மணப்பாறை மாட்டுச்சந்தைக்கு ஒரு விசிட்!

ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்று புறா பந்தயமும் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்றுதான். அரசு இந்த விளையாட்டின் மீது தனி கவனம் செலுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகம் முழுவதும் உள்ள புறா வளர்ப்போர் சங்கத்தின் சார்பாக முன் வைக்கிறோம். இதனால் புறாக்கள் காக்கப்படுவதுடன் பாரம்பர்யமான இந்தக் கலையும் காக்கப்படும். எங்கள் சங்கத்தின் சார்பாகப் பல்வேறு புறா பந்தயம் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

சிறு தவறு கூட நடப்பதற்கு வாய்ப்பளிக்காமல் போட்டிகளை நடத்தி வருகிறோம். பந்தயம் நடத்தப்படுவதன் மூலம் புறா ஆயுள் மட்டுமல்ல அதன் மீது நாங்கள் வைத்துள்ள அன்பும் பெருகும்; புறாக்களை வளர்ப்பவர்களும் அதிகரிப்பார்கள்" என அடுத்த போட்டிக்கு தன் புறாவை தயார் செய்யத் தொடங்கச் சென்றார்.



source https://sports.vikatan.com/animals/thanjavur-pigeon-association-members-talks-about-their-emotional-bond-with-pigeons

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக