Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

Doctor Vikatan: இனப்பெருக்கப் பாதை இன்ஃபெக்ஷன்; என்னதான் தீர்வு?

பெண்களின் இனப்பெருக்கப் பாதையில் ஏற்படும் ஃபங்கல் இன்ஃபெக்ஷனுக்கு என்ன காரணம்.... அதற்கு சிகிச்சைகள் உண்டா?

- சௌமியா வடிவழகன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``வெஜைனல் கேண்டிடியாசிஸ்(Vaginal Candidiasis ) எனப்படும் பூஞ்சைத் தொற்றானது, நான்கு பெண்களில் மூன்று பேருக்கு அவர்களின் வாழ்நாளில் ஏதேனும் ஒரு காலத்தில் கட்டாயம் வரலாம். இதை நாம் பால்வினை நோய் என்று குறிப்பிடுவதில்லை என்றாலும், தாம்பத்திய உறவு மூலம் இந்தத் தொற்றுப் பரவல் அதிகமாகும்.

இந்தத் தொற்று ஏற்பட்ட பெண்களுக்கு தயிர் போல திரிதிரியாகவும் கெட்டியாகவும் வெள்ளைப்படுதல் இருக்கும். சிலருக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கலாம். வெஜைனாவில் வீக்கம், ரேஷஸ் எனப்படும் தடிப்புகள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்றவை இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகி, வெஜைனல் கேண்டிடியாசிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று உறுதிசெய்துகொள்ளலாம்.

Also Read: Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் யூரினரி இன்ஃபெக்ஷன்; தாம்பத்ய உறவுதான் காரணமா?

ஒருவேளை இந்த அறிகுறிகள் தீவிரமாக இருந்தாலோ, வழக்கமாக இந்தத் தொற்றுக்குக் காரணமான கேண்டிடா ஆல்பிகன்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சை தவிர்த்து, வேறு பூஞ்சையினால் தொற்று ஏற்பட்டிருந்தாலோ, வருடத்தில் நான்கைந்து முறை இதுபோன்ற தொற்றுக்கு உள்ளாகியிருந்தாலோ, கர்ப்பகாலத்தில் தொற்று வந்தாலோ, இந்தத் தொற்றுடன் நீரிழிவும் கட்டுப்பாடின்றி இருந்தாலோ, எதிர்ப்புசக்தி குறைவாக இருந்தாலோ அதை சிக்கலான பூஞ்சைத் தொற்று என்று சொல்வோம்.

சாதாரணமாக பெண்களுக்கு வெஜைனாவில் `நார்மல் வெஜைனல் ஃப்ளோரா' (normal vaginal flora) என்ற நல்ல பாக்டீரியா இருக்கும். இந்த பாக்டீரியா அந்தப் பகுதியின் பி.ஹெச் அளவை அமிலத்தன்மையுடன் வைத்திருக்கும். லாக்டோபேசிலை எனப்படும் இந்த பாக்டீரியா, தேவையற்ற மற்ற பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் வெஜைனாவை பாதுகாக்கும்.

எனவே லேக்டோபேசிலை குறையும்போது பூஞ்சைத்தொற்று அதிகமாகும். தேவையில்லாமல் அதிக ஆன்டிபயாடிக் எடுப்பதால், அது வெஜைனாவில் உள்ள நல்ல பாக்டீரியாவையும், நல்ல வெஜைனல் ஃப்ளோரைவையும் அழித்துவிடும்.

Pain (Representational Image)

அதனால் உடனே பூஞ்சைத்தொற்று தாக்கும். உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகும்போதும் வெஜைனல் ஃப்ளோரா பாதிக்கப்படும். கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாகும் என்பதால் அந்தக் காலத்திலும் வெஜைனல் கேண்டிடியாசிஸ் பாதிப்பு அதிகமிருக்கும்.

இந்தத் தொற்று வராமல் தடுக்க அடிப்படையான சில விஷயங்கள் அவசியம். காற்றோட்டமான, காட்டன் உள்ளாடைகளையே அணிய வேண்டும். இறுக்கமாக அணியாமல், தளர்வாக அணிய வேண்டும்.

வெஜைனா பகுதியை சோப் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சுத்தப்படுத்துவது, அடிக்கடி சுத்தப்படுத்துவது போன்றவற்றால் நல்ல பாக்டீரியா அழிந்து, பூஞ்சைத் தொற்றுக்கு காரணமாகலாம். வாசனையான சோப், வாசனை சேர்த்த நாப்கின் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவையும் நல்ல பாக்டீரியாவை அழிக்கலாம். அதிக சூடான நீரால் வெஜைனா பகுதியைக் கழுவக்கூடாது. ஈரமான துணிகளை அணியக்கூடாது. தேவையற்ற ஆன்டிபயாடிக்குகளை எடுக்கக்கூடாது. வியர்வை அதிகமிருந்தால் அடிக்கடி குளிக்கலாம்.

Woman (Representational Image)

Also Read: Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் லெகின்ஸ் அணியலாமா?

மகப்பேறு மருத்துவர் அறிகுறிகளை வைத்தும், பரிசோதனையின் மூலமும் இந்தத் தொற்றுக்கான வாய்ப்பிருக்கிறதா என்று கண்டுபிடிப்பார். அந்தப் பகுதியில் சுரக்கும் திரவத்தை டெஸ்ட் செய்தும் தொற்றை உறுதிசெய்யலாம். இதற்கான மருந்து ஆன்டிஃபங்கல் க்ரீம், ஆயின்மென்ட் என பல வடிவங்களில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தினாலே தீர்வு கிடைக்கும். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சில வாரங்கள் முதல் சில மாதங்கள்வரை சிகிச்சை தேவைப்படலாம். நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.

ப்ரோபயாடிக் சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்வது இதுபோன்ற பூஞ்சைத் தொற்று பாதிக்காமல் காக்கும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/how-to-get-rid-of-infections-in-vagina

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக