`தினம்தோறும் வாங்குவேன் இதயம்...' - நல்லெண்ணெய் விளம்பரத்துக்கான இந்தப் பாடல், நடிகை ஜோதிகாவுக்கு மட்டுமல்ல, ஶ்ரீலேகாவின் குரலுக்கும் தமிழகத்தில் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.
`கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?', `கொக்கு மீன திங்குமா?', `திம்சுகட்ட...', `வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல...' போன்ற ஹிட் பாடல்கள் பலவற்றைப் பாடிய பின்னணிப் பாடகி ஶ்ரீலேகா பார்த்தசாரதி, தற்போது முழு நேர நடிகையாகியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாகும் `ரஜினி' சீரியலில் முக்கியமான ரோலில் நடிப்பவருக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கரியர் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
``என் பையன் பிறந்ததுக்குப் பிறகு, ஒரு கட்டம்வரை அவன் கூடவே இருக்கணும்னு சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தேன். ஆறு வருஷத்துக்குப் பிறகு, மறுபடியும் மீடியா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. என் பையனுக்கு இப்போ ஆறு வயசுதான். ஆனா, `ரஜினி' சீரியல்ல 50 வயதைக் கடந்த அம்மா ரோல்ல நடிக்கிற வாய்ப்பு எனக்கு வந்துச்சு. `நடிக்கலாமா, வேண்டாமா..?'னு எனக்குள் நிறைய கேள்விகள். பையனும் நானும் குளோஸ் ஃபிரெண்ட்ஸ். அவன்கிட்ட ஒப்பீனியன் கேட்டுட்டு, அன்னிக்கே சேனல் தரப்புல ஓகே சொல்லிட்டேன். என் பையன் என்ன சொன்னான் தெரியுமா..?" - சஸ்பென்ஸுடன் உரையாடலைத் தொடங்கும் ஶ்ரீலேகா, தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் டெல்லியில்.
மகன் குறித்த சஸ்பென்ஸை உடைக்கும் முன்னர் தனது மீடியா அறிமுகத்தைப் பகிர்ந்தார்.
``ஸ்கூல் படிக்கும்போதே மியூசிக்ல அதிக ஆர்வம். மியூசிக் கத்துக்கிட்டு, காலேஜ் படிக்கும்போதே 14 மொழிகள்ல நிறைய விளம்பரப் படங்களுக்குப் பாடினேன். எனக்கு சினிமாவுல பாடணும்ங்கிறது பெரிய கனவு. சென்னையில நிறைய மியூசிக் டைரக்டர்களைச் சந்திச்சு, என் குரல் பதிவு செய்யப்பட்ட கேசட்டுகளைக் கொடுத்து வாய்ப்பு கேட்டேன். அந்த நேரத்துல வெளியான இதயம் நல்லெண்ணெய் விளம்பரம் என் குரலைப் பலருக்கும் தெரியப்படுத்துச்சு.
திடீர்னு ஹாரிஸ் ஜெயராஜ் சார்கிட்டேருந்து அழைப்பு வந்துச்சு. அவர் மியூசிக்ல `லேசா லேசா' படத்துல `ஏதோ ஒன்று ஏதோ ஒன்று' பாடல் பாடினேன். ஆனா, அந்தப் படம் வெளியாகுறதுல வருஷக்கணக்குல சிக்கல் ஏற்பட்டுச்சு. வாய்ப்பு தேடி சென்னை வந்து மூணு வருஷம் கடந்தும், என் குரல்ல ஒரு சினிமா பாட்டு கூட ஒலிக்கலை. சின்ன வயசுலேருந்தே முடிஞ்சவரைக்கும் பிறரைச் சாராம இயங்கணும்ங்கிறது என் கொள்கை. அதனால, சென்னையில தங்கியிருந்த காலத்துல, குடும்பத்தினரின் பண உதவியை எதிர்பார்க்காம, என் சொந்த சேமிப்பை வெச்சே காலத்தை நகர்த்தினேன். ஒருகட்டத்துல டெல்லிக்கே திரும்பி போயிட்டேன்.
அதுக்கப்புறமா `லேசா லேசா' படம் வெளியாகி, நான் பாடின பாடலுக்கு வரவேற்பு கிடைச்சது. பிறகு, முன்னணி மியூசிக் டைரக்டர்கள் பலரோட இசையிலும் பாட வாய்ப்புகள் கிடைச்சது. மெலடி உள்ளிட்ட எல்லா விதமான பாடல்களும் பாடணும்னு எனக்கும் ஆசை இருந்துச்சு. ஆனா, `கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?' பாடலோட வெற்றிக்குப் பிறகு, அதேபோல துள்ளலான பாடல் வாய்ப்புகளே எனக்கு அதிகமா கிடைச்சது. அதனால, ஆரம்பத்துல நான் வருத்தப்பட்டேன். `துள்ளலான பாடலைப் பாடவும் பல சிங்கர்ஸ் இருந்தாலும், உங்களுக்கு இதுமாதிரியான வாய்ப்புகள் அதிகமா வர்றதும் நல்லதுதானே...'ன்னு பாசிட்டிவ்வா ஊக்கம் கொடுத்தார் ஶ்ரீகாந்த் தேவா.
வெளியூர், வெளிநாட்டுக் கச்சேரிகள்ல பாடப் போகும்போது, பி.சுசீலா அம்மா, எஸ்.பி.பி சார் உட்பட பெரிய பாடகர்கள் பலருடனும் பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அவங்க அனுபவங்களையெல்லாம் கேட்டுப் பக்குவப்பட்டு, திரையிசை உலகத்தின் யதார்த்தத்தை முழுமையா புரிஞ்சுகிட்டேன். பாடல் வாய்ப்புக்காக, பல நேரங்கள்ல சங்கடமான பேச்சுகளை எதிர்கொண்டிருக்கேன்; நிராகரிக்கப்பட்டிருக்கேன். அதுக்காகவெல்லாம் வருத்தப்படாம, மியூசிக் டைரக்டர்களோட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுற மாதிரி பாடுற என் வேலையைச் சரியா செஞ்சேன்" என்பவர், கல்லூரியில் படிக்கும்போதே கூத்துப்பட்டறையில் நடிப்புக்கான பயிற்சியும் பெற்றிருக்கிறார். `கல்யாண சமையல் சாதம்' மற்றும் `கோலமாவு கோகிலா' ஆகிய படங்களிலும், `நவரசா' (பாயசம்) வெப் சீரிஸிலும் ஶ்ரீலேகா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
``சினிமா, சின்னத்திரைனு மீடியா இப்போ ரொம்பவே மாறிடுச்சு. ஏதாச்சும் ஒரு துறையில மட்டுமே நம்பியிருக்காம, கிடைச்ச வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கிறதுதான் சரியா இருக்கும்னு புரிஞ்சுதான், நடிக்கவும் ஆரம்பிச்சேன். இந்த நிலையிலதான் பையனுக்காக பிரேக் எடுத்தேன். ஆணோ, பெண்ணோ... சுய சம்பாத்தியம்தான் பலருக்கும் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். பையன் ஓரளவுக்கு வளர்ந்துட்ட நிலையில, இனி வீட்டுக்குள்ள முடங்கியிருக்காம, பொருளாதார ஓட்டத்தைத் தொடரலாமேனு நினைச்சேன்.
அப்பதான், சன் டிவி `ராஜபார்வை' ஷோவுல மென்டாரா கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. இந்த ஷோ முடியுற நேரத்துலதான் `ரஜினி' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. `நாம நடிக்கிற கேரக்டர் மக்கள் மனசுல இடம் பிடிக்கிறதுதான் முக்கியம். உனக்கு இந்த சீரியல் அப்படியோர் அடையாளத்தைக் கொடுக்கும்'னு என் கணவர் உட்பட பலரும் சொன்னாங்க. ஆனாலும், என்னால முடிவெடுக்க முடியாத நிலையிலதான் என் பையன்கிட்ட பேசினேன்.
`நான் நடிக்கிறது வயசான அம்மா ரோல். டிவி-யில நான் வரும்போது எனக்கு நரை முடி அதிகமா இருக்கும். சீரியல்ல என்னை பாட்டினுகூட சிலர் கூப்பிடுவாங்க. அதைப் பார்க்கும்போது நீ ஏத்துப்பியா... நான் நடிக்கட்டுமா?'ன்னு என் பையன் ஆருஷ்கிட்ட கேட்டேன். கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, `எனக்கு எந்த வருத்தமும் இல்ல. உன்ன எப்படிப் பார்த்தாலும் எனக்கு சந்தோஷம்தான். டிவி-யில உன் நடிப்பைப் பார்க்க ஆவலா இருக்கேன்மா'னு சிரிச்சுகிட்டே சொன்னான். சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கி சில தினங்கள்தான் ஆகுது. அந்த எபிசோடுகளைப் பார்த்துட்டு என் பையன் பாசிட்டிவ் ஃபீட்பேக் கொடுத்தான்" என்று புன்னகைப்பவரின் குரலில் தாய்மை பூரிப்பு.
இசைத்துறையில் நிறைவேறாத ஆசையைப் பகிரும் ஶ்ரீலேகா, ``முழு நேர ஆக்டிங் அனுபவம் நல்லாதான் இருக்கு. கொஞ்சம் டல் மேக்கப்ல, காட்டன் புடவையுடன் ரொம்பவே சிம்பிளான லுக்தான் எனக்கு. ஆனா, என்கூட நடிக்கிற பொண்ணுங்க கலர்ஃபுல்லா டிரஸ் பண்ணுவாங்க. அதைப் பார்க்கும்போது மட்டும் சீரியல் டீம் ஆட்கள்கிட்டயெல்லாம் தமாஷமா ஆதங்கப்படுவேன். சினிமாவுல சில பாடல்கள் பாடியிருந்தாலும், என் கணவர் ஶ்ரீராமுக்கு ஆக்டிங்லதான் அதிக விருப்பம். `சிவகாசி', `வேலையில்லா பட்டதாரி'னு பல படங்கள்ல அவர் நடிச்சிருக்கார். ஆனா, எனக்கு மியூசிக்தான் எப்போதுமே முதல் சாய்ஸ்.
Also Read: "நான் தோற்கணும்னு சில போட்டியாளர்கள் பணம் செலவு செஞ்சாங்க!" - சீக்ரெட் சொல்லும் `சர்வைவர்’ விஜி
இன்னிக்கு நிறைய போட்டிகள் உருவாகிடுச்சு. அதையும் தாண்டி நமக்கான இருப்பைத் தக்க வெச்சுக்கிறது பெரிய சவால். அதைச் சமாளிக்க நம்பிக்கையோடு ஓடினாலும், என் கரியர்ல நிறைவேறாத ஆசை ஒண்ணு இருக்கு. பல்வேறு மியூசிக் டைரக்டர்கள்கிட்ட பாடியிருந்தாலும், இளையராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட நான் இதுவரைக்கும் பாடினதில்ல. ரஹ்மான் சார்கிட்டேருந்து ரெண்டு முறை எனக்கு வாய்ப்பு கிடைச்சும், அது நிறைவேறாமலேயே போயிடுச்சு. ஒருவேளை அவர் மியூசிக்ல பாடியிருந்தா சிங்கரா இன்னும் கூடுதலான வளர்ச்சி எனக்குக் கிடைச்சிருக்கும். இவங்க ரெண்டு பேர்கிட்டயும் பாடுற வாய்ப்பு நிறைவேறும்னு இன்னும் உறுதியான நம்பிக்கையோடு காத்திருக்கேன்" என்று சிரித்தபடியே முடித்தார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/singer-srilekha-parthasarathy-speaks-about-her-cinema-career-and-new-serial
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக