Ad

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

திருவெம்பாவை - 5: ஈசனைப் பற்றிக் கொள்ள எளிய வழி உண்டு! எழுந்து வா தோழி!

“மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்”

திருவெம்பாவை

நறுமணம் கொண்ட கூந்தலைக் கொண்ட என் பிரியமான தோழியே, மாலவன் வராகமாகவும், நான்முகன் அன்னப்பட்சியாகவும் உருவெடுத்துச் சென்றும் ஈசனின் அடி, முடியைக் காண முடியாத பெருமை கொண்டவர் அண்ணாமலையார். அத்தனை பிரமாண்டமான ஈசனை அறிவோம் என்று பொய்யாகப் பேசுகிறாய் நீ! உன்னால் என்னால் மட்டுமல்ல இந்த மண்ணுலகமும் விண்ணுலகமும் தேடினாலும் கிடைக்காத அகண்ட ரூபன் அவன். ஆனால் அவனை உணர்ந்து அன்பால் தேடினால், ஓடி வந்து நம்மைப் பிடித்துக் கொள்பவனும் அவனே. அதனால் அற்புதமான இந்த விடியல் காலையில் உறக்கத்தை விடுத்துவிட்டு, உணர்ச்சிப் பெருக்குடன் 'சிவ...சிவ' என்று எல்லோரும் ஓலமிட்டுப் பணிகிறோம். நீயோ, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாய். எழுந்து வா பெண்ணே! என்கிறார்கள் தோழியர்.

கல்வியாலும் செல்வத்தாலும் எட்ட முடியாதவர் அண்ணாமலையார். 'அண்ணா' என்றாலே எட்ட முடியாதது என்றே பொருள். ஆனால் அன்பினால் அவனை சரண் அடைந்துத் தொழுதால் அவனை எளிதாக எட்ட முடியும் என்பதே உண்மை. நாயன்மார்கள் அனைவருமே அப்படித்தான் ஈசனைத் தேடி வரச் செய்து அவனோடு கலந்து போனார்கள். அப்படி என்றால் பிரம்மனும் மாலும் ஏன் இறைவனை எட்ட முடியவில்லை! ஆணவம் தான் காரணம். தங்களுள் யார் பெரியவர் என்பதை நிரூபிக்கவே ஈசனைத் தேடினார்களே தவிர, உண்மையாக சிவத்தை அறிந்துகொள்ள அவர்கள் முயலவே இல்லை. ஆணவம் கண்ணை மறைக்க தவறான இடத்தில் அவர்கள் தேடினார்கள், இறுதியில் தோல்வியும் அடைந்தார்கள்.

அண்ணாமலையார்

ஆம், பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலுக்கு தோதான வாகனம் அன்னமே. அதுவே நீரில் நீந்தக் கூடியது; வானில் பறக்கவும் கூடியது. அந்த வடிவத்தை நான்முகன் எடுத்துக் கொண்டார். மண்ணுலகத்தைப் படைக்கும் நான்முகனுக்கு ஏற்றது, மண்ணிலேயே வாழும் வராகம்தான்! ஆனால் அதை நாராயணன் எடுத்துக் கொண்டார். வெற்றியே நோக்கம் என்பதால் மதி மயங்கி இறைவனைத் தேட தோல்வியே கிடைத்தது. ஆணவம் என்ற முயலகனை மிதித்துக் கொண்டிருக்கும் நம் தேவனான ஈசன், அன்புக்கு மட்டுமே அகப்படும் அளவில்லாப் பொக்கிஷம். அவனைத் தேடி தரிசித்து மகிழும் வேளை இது. இப்போது உறங்கிவிட்டால் எப்போது அவனைக் காண்பது சொல். உடலும் மனமும் ஒருசேர விழித்துக் கொண்டால் தானே ஈசனின் ஆனந்தக் கோலத்தை தரிசிக்க முடியும்.

மாலவன் தேடியும் கிடைக்காத திருவடி, தன் நண்பனுக்காக ஆரூர் வீதியில் நடக்கவில்லையா! பிட்டுக்கு மண் சுமக்க மதுரையம்பதியில் உலவவில்லையா! ஏழைக்கு ஏழை அவன், எளியோருக்கு எளியோன் அவன். உண்மையில் சிவம் நமக்குள் தான் உறைகிறது. அதை உள்முகப் பயணமாக தரிசித்து உணர்ந்து கொண்டால் நமக்குள்ளேயே சிவத்தைப் பற்றிக் கொள்ள முடியும். ஆணவமற்ற அன்பால் அவரை மனக்கோயிலில் சிறை வைக்கவும் முடியும். அப்படி வைத்தவர் பூசலார் நாயனார். சரணாகதி ஒன்றே ஈசனை அடையும் வழி என்பதை உணர்ந்த புண்ணியவான் அவர்.

சிவன்

தான் வாழ்ந்த திருநின்றவூரில் ஈசனுக்கு என்று ஒரு சிவாலயம் கட்ட வசதி இல்லை அவரிடம். அதனால் என்ன! மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே! மனமே கோயிலானது! ஆம், தினமும் மனதுக்குள்ளேயே ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியாக எழுப்பிக்கொண்டே இருந்தார். இறுதியில் கோயில் பணி நிறைவுற்று குடமுழுக்கு செய்யும் நாளும் வந்தது. அதே நாளில் தான் காஞ்சியில் பிரமாண்டமான கயிலாசநாதர் கோயில் குடமுழுக்கு நாளையும் குறித்தார் காடவர் கோமான். தனது கலைத்திறனை நிரூபிக்கவென்றே எழுந்த காஞ்சி கலைக் கோயிலை விட, பூசலார் அன்பால் எழுப்பிய மனக்கோயில் ஈசனுக்கு விருப்பமானது. காஞ்சி மன்னனிடம் நாளை மாற்றச் சொன்னார். அதே நாளில் திருநின்றவூரில் பூசலார் மனக்கோயிலில் குடி ஏறினார். தவறை உணர்ந்த காஞ்சி கோமகன் பூசலாரை உணர்ந்து, அவர் பதம் பணிந்து, அவர் மனத்தால் எழுப்பிய கோயிலை நிஜமாகவே எழுப்பித் தந்தான் என்கிறது புராணம்.

செருக்கும் சினமும் கொண்டவரிடம் சிவம் இருப்பதில்லை. அறிந்து கொண்டோம் என்று நினைக்கும்போதே அவ்விடம் இருந்து சிவம் அகன்றுவிடும். எனவே எவராலும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாத சிவத்தை நாள்தோறும் பணிந்து அவன் அருள் பெறுவோம். அதற்கு முதல் காரியமாக சோம்பலைக் கொடுக்கும் இந்த தூக்கத்தை விட்டு எழுவோம். வேதங்களும் விண்ணவர்களும் ஏத்தும் நம் தலைவனாம் ஈசனைப் பணிவோம். சீக்கிரம் எழுந்து வா தோழி. பூரண அழகும் பொங்கி வரும் அருளும் கொண்ட நம் தலைவன், நமக்காக ஆலயத்தில் காத்திருக்கிறான். விரைந்து வா, விண்ணவர் தலைவனைத் தொழுவோம்.

திருவெம்பாவை
பண்ணின் இசையானவனை, எண்ணு மெழுத்துமானவனை, விண்ணும் நிலனுமானவனை, கண்ணின் மணியாகி நிற்பவனைக் கண்ணராத் துதித்துக் கண்டுகொள்வோம் வா பெண்ணே!


source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-worship-day-5-thiruvempavai-song-5-for-lord-siva

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக